அன்பானவர்களே, "உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்" (சங்கீதம் 25:3) என்பதே இன்றைய வாக்குத்தத்தமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் உங்கள் நம்பிக்கையைக் காண்கிறார். நீங்கள் நீண்டகாலமாக அவருக்காகக் காத்திருக்கலாம்; பெரிய காரியத்தைச் செய்வார் என்று அவரை மட்டுமே நம்பியிருக்கலாம். உலகப்பிரகாரமான தீர்வுகளை நாம் நோக்கினால், ஒரு சிறிய பங்கையோ அல்லது பிறரிடமிருந்து குறிப்பிட்ட உதவியையோ மாத்திரமே பெறுவோம். ஆனால், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ, இயற்கைக்கு அப்பாற்பட்டதை பெற்றுக்கொள்வார்கள். அவரது பதில் கிடைக்கும்போது, அது நீங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகப் பெரிதானதாகவோ, ஆச்சரியமானதாகவோ இருக்கும். ஆகவே, அவரையே பற்றிக்கொள்ளுங்கள்; கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுபோகமாட்டீர்கள்.

துபாயில் தன் கணவருடன் வாழ்ந்து வரும் ஒரு சகோதரியின் சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் கணவர், உடன் பணியாற்றும் சிலரால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அவர்கள் வாடிக்கையாளர் ஒருவரின் கையெழுத்தை, ஆவணம் ஒன்றில் போலியாக போட்டு, பரிவர்த்தனைக்கான அனுமதியை அவரிடம் பெற்றிருக்கிறார்கள். வங்கி பதிவேடுகளில் இருந்த வாடிக்கையாளரின் கையெழுத்துடன் பொருந்துவதுபோல் இருந்ததால், அவர் அந்த ஆவணத்திற்கு அனுமதியளித்துள்ளார். அதன்படி வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பெருந்தொகை பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தீவிரமான சட்டப்பிரச்னையில் சிக்கிக்கொண்டார். அவர் காவலில் எடுக்கப்பட்டார். அந்தத் தவற்றுக்கு அவர் பொறுப்பல்ல என்பதை நிரூபிக்க அவர்கள் சட்டப்போராட்டம் செய்யவேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் அந்தச் சகோதரியின் குழந்தைக்கு ஒரு வயதே ஆகியிருந்தது. அவர்கள் முழுவதும் உடைந்துபோனார்கள். தங்கள் குடும்பத்துக்கு ஏன் இது நிகழ்ந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எதிர்காலம் இருளாகவும் நிச்சயமற்றதாகவும் காணப்பட்டது.

இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் என் தந்தை Dr. பால் தினகரன் மற்றும் என் தாயார் இவாஞ்சலின் இவர்களது செய்திகளை யூடியூப்பில் பார்க்க தொடங்கினார்கள். தங்கள் சூழ்நிலையைக் குறித்து ஜெபிக்கத் தொடங்கியதோடு,  குடும்பத்தில் அனைவரையும் ஊழியத்தில் பங்காளர்களாக இணைத்தார்கள். என் தந்தை Dr. பால் தினகரனுக்கு கடிதமும் எழுதினார்கள். தேவன் எல்லாவற்றையும் மாற்றுவார் என்று அவர் உறுதியளித்து பதிலும் எழுதியுள்ளார்.

வியக்கத்தக்கவிதமாக, அவர்கள் சூழ்நிலைகள் மாறத் தொடங்கின. இந்தியா திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஹைதராபாத்துக்குத் திரும்பி வந்தனர். Alwal என்ற இடத்தில் நடந்த பிரார்த்தனை திருவிழாவில் கலந்துகொண்டனர். அங்கே, தாங்கள் இழந்த எல்லாவற்றையும் தேவன் திரும்ப தருவார் என்று மூன்று தீர்க்கதரிசனங்களைப் பெற்றுக்கொண்டார்கள். தமது வாக்குத்தத்தங்களுக்கு உண்மையாக, தேவன் அந்தச் சகோதரிக்கு அவர்கள் வேலையின் வாயிலாக 30 லட்ச ரூபாய் போனஸை அளித்தார். அவர்கள் சம்பளம் 2 லட்ச ரூபாயிலிருந்து 50 சதவீதம் அதிகரித்து, 3 லட்சமாக உயர்ந்தது. வழக்குரைஞர் செலவு, கடன் உள்ளிட்ட வழக்குக்கான எல்லா செலவும் முழுவதுமாக கிடைத்தன. அவர்களது எல்லா பொருளாதார இழப்பும் திரும்ப அளிக்கப்பட்டது. இப்போது அவர்களது சட்டப் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ளன; அவர்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்; ஆண்டவர் அவர்களை தொடர்ந்து பூரணமாய் ஆசீர்வதித்து வருகிறார். நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு வல்லமையானவர்!
அன்பானவர்களே, இதே ஆண்டவர் உங்களை ஒருபோதும் வெட்கமடையவிடமாட்டார். நீங்கள் அவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பதால், அவர் உங்களுக்கு ஒரு வழியை உண்டுபண்ணுவார். அவர் உங்கள் கண்ணீரைக் காண்கிறார்; உங்கள் போராட்டங்களை அறிந்திருக்கிறார்; ஏற்ற நேரத்தில் பதில் அளிப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் கண்ணீரை நீர் காண்பதாலும், என் போராட்டங்களை அறிந்திருப்பதாலும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மேல் மாத்திரமே என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். பதிலுக்காக நெடுங்காலமாக காத்திருக்கும் ஒவ்வொரு ஜெபத்தையும் நினைவுகூர்ந்திடும்; இக்கட்டான எல்லா சூழ்நிலையிலும் நியாயஞ்செய்யும். எல்லா சட்டப் பிரச்னைகள், பொருளாதார பாரங்கள், நிச்சயமில்லாத நிலையிருந்தும் என்னை விடுவித்தருளும். நான் இழந்த எல்லாவற்றையும் திருப்பி அளித்தருளும்; ஒருவரும் பூட்டக்கூடாதபடி வாசல்களைத் திறந்தருளும். உமக்காகக் காத்திருக்கும்போது என் உள்ளத்தைப் பெலப்படுத்தும். வேண்டியவற்றை இயற்கைக்கு அப்பாற்பட்டவிதத்தில் நீர் அளிப்பதை கண்டு என் குடும்பம் ஆச்சரியப்படுவதாக; சமாதானமான புதிய காலத்திற்குள்ளும், விடுதலைக்குள்ளும், பரிபூரணத்திற்குள் எங்களை வழிநடத்துவீராக. என் சாட்சி உம் நாமத்திற்கு மகிமை கொண்டுவரட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.