அன்பானவர்களே, "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலிப்பியர் 4:19). ஒருவேளை தேவைகளோடு நீங்கள் போராடிக்கொண்டிருக்கலாம். தேவன், "கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் என் ஐசுவரியங்களையெல்லாம் திறக்கிறேன்; உன் தேவைகளையெல்லாம் சந்திப்பேன்," என்று கூறுகிறார். வேதாகமம், தேவன், இயேசுவாக இறங்கி வந்தார் என்றும், அவருடைய தரித்திரத்தின் வாயிலாக, உங்களையும் என்னையும் ஐசுவரியவான்களாக்குவதற்காக தாம் தரித்திரரானார் என்றும் கூறுகிறது (2 கொரிந்தியர் 8:9). சிலுவையில் அவர் வஸ்திரம் கூட அணிந்திருக்கவில்லை. அவர் நிர்வாணமாக்கப்பட்டார். திக்கற்றவராக இருந்தார்; இரத்தம் கொட்டியது. தேவன், உங்களை தேவைகளிலிருந்து வெளியே கொண்டு வந்து, தம் ஐசுவரியத்தைத் தரும்படியாகவே அப்படியானார். இன்று இயேசுவிடம் வாருங்கள். இயேசுவுக்குள் உங்களுக்கு நம்பிக்கை உண்டு. இந்த உலகத்தில் உங்கள் ஆத்துமாவில், உங்கள் சிந்தையில், உங்கள் சரீரத்தில், உங்கள் வாழ்க்கையில், உங்கள் குடும்பத்தில் ஐசுவரியம் பெற்றிருப்பதற்கான கிரயத்தை அவர் செலுத்திவிட்டார். தேவன்தாமே இந்த ஆசீர்வாதத்தை உங்களுக்குத் தருவாராக.
இயேசுவின் வாயிலாக தேவனிடமிருந்து எப்படி ஐசுவரியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்? முதலாவது, "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்" (லூக்கா 6:38) என்று வசனம் கூறுகிறது. தேவன், "உன் இருதயத்தை எனக்குத் தா. நீ என்னை நம்புவதாலும், என் சித்தத்தின்படி வாழ்கிறதாலும், மக்கள் ஆசீர்வாதங்களை உன் மடியில் கொட்டும்படி செய்வேன்," என்று கூறுகிறார்.
இரண்டாவதாக, அவர், "ஏழைகளுக்கு, வஸ்திரமில்லாதவர்களுக்கு, பசியாயிருப்பவர்களுக்கு, திக்கற்றவர்களுக்குக் கொடு. அப்போது நான் உன்னை பின்னாகக் காப்பேன்; உன் சுகம் சீக்கிரமாய் எழும்பும்; விடியற்கால வெளுப்பைப் போல உன் நீதி செல்லும்; உன் பெயர் கனம் பெறும். நான் இப்படி உன்னை ஆசீர்வதிப்பேன்," என்று கூறுகிறார் (ஏசாயா 58:7,8). தரித்திரருக்குக் கொடுக்கும்போது இந்த எல்லா ஐசுவரியங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.
மூன்றாவதாக அவர், "ஏழைகளையும் உள்ளமுடைந்தோரையும் பராமரிக்கும் என் ஊழியர்களுக்குக் கொடு," என்று கூறுகிறார். தாவீது, தேவ ஊழியர்கள்மேலும் பரிசுத்தவான்கள்மேலும் கரிசனையாயிருந்தான். தேவன் அவன் மடியில் ஐசுவரியத்தைக் கொட்டினார் (சங்கீதம் 16:2,3).
நான்காவதாக, வேதம், "என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே (மக்களுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்யும் ஊழியங்கள்) கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" (மல்கியா 3:10) என்று கூறுகிறது. தேவன், ஆசீர்வாதங்களை உங்களிடமிருந்து திருடிக்கொள்ளும் பொல்லாத பிசாசை சபிப்பார். தேவனுடைய ஊழியத்திற்குக் கொடுப்பதால் நீங்கள் எந்நாளும் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். இன்றே, கொடுக்கிறவர்களாக மாறுங்கள். நீங்கள் ஏற்கனவே கொடுத்துக்கொண்டிருக்கலாம். இன்று, உங்கள் தேவைகளையெல்லாம் தேவன் சந்திப்பார் என்று விசுவாசிக்கிறோம். நீங்கள் பரிபூரணமடைவீர்கள்; தேவ பிரசன்னத்தினால் உங்கள் ஆத்துமாவில், உங்கள் குடும்பத்தில், நற்சுகம், பாதுகாப்பு, நீதியான பெயர் ஆகிய எல்லா ஆசீர்வாதங்களும் வந்து சேரும். தேவனும் மனுஷரும் உங்களைக் கனப்படுத்துவார்கள்.
ஜெபம்:
அருமையான பரம தகப்பனே, உம்மிடமுள்ள சிறந்ததை, இயேசுவை எனக்குக் கொடுத்ததின் வாயிலாக அருளிச்செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உற்சாகமாக கொடுக்கிறவனா(ளா)க மாறவும், உம்மேல் நம்பிக்கையாயிருக்கவும் தயவாய் எனக்குக் கற்பித்தருளும். கொடுப்பதைக் குறித்து என் இருதயத்தில் இருக்கும் எல்லா பயத்தையும் சந்தேகத்தையும் அகற்றும். ஏழைகளுக்கும் உம் பணிக்கும் அன்புடன் கொடுப்பதற்கு எனக்கு உதவும். ஆண்டவரே, எனக்கு வானத்தின் பலகணிகளைத் திறப்பீராக. உம் ஐசுவரியத்தின்படியே என் தேவைகள் எல்லாவற்றையும் அருளிச்செய்யும். என் வாழ்க்கையை உம் பிரசன்னத்தாலும் பரிபூரணத்தினாலும் நிரப்புவீராக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


