அன்பானவர்களே, எல்லாவற்றுக்கும் தேவ ஒத்தாசையைப் பெற்றுக்கொள்வது எப்படி என்று தியானிப்போம். வேதத்தில், கர்த்தர், "உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்," (ஏசாயா 41:13) என்று கூறுகிறார். தேவன், "நான் உனக்கு உதவி செய்வேன்," என்று கூறுகிறார். நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு உதவி மையம் ஒன்று இருக்கும். அநேக இடங்களில் இந்த மையங்கள் இருக்கும்; ஆனால், உதவி செய்வதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். நீங்கள் நின்றுகொண்டிருந்தாலும், அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பார்கள். உதவி மையத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு கடைசி இடமே கொடுப்பார்கள். அதுவும் ஆலோசனை மட்டுமே கொடுப்பார்கள். எதையும் செய்து கொடுக்கமாட்டார்கள். ஆகவே, உதவியை நாடி வரும் மக்களைக் குறித்துக் கவலைப்படமாட்டார்கள். இன்னொரு இடத்தைக் கைகாட்டி விடுவார்கள். ஆனால், தேவன், "நான் உனக்கு உதவி செய்வேன். நானே தேவனாகிய கர்த்தர். உனக்கு உதவி செய்யும்படியாக உதவி மையத்தில் நான் காத்திருக்கிறேன்," என்று கூறுகிறார்.
நாம் என்ன செய்யவேண்டும்? தேவன், "என்னை நோக்கிக் கூப்பிடு; நான் பதில் கொடுப்பேன்," என்று கூறுகிறார். "நீ உதவி மையத்திற்கே வரவேண்டிய தேவை இல்லை. கூப்பிட்டால் போதும். நீ எங்கேயிருக்கிறாயோ அங்கிருந்தே கூப்பிடு. நான் வருவேன்," என்கிறார். இரண்டு அல்லது மூன்று பேர் என் நாமத்தினிமித்தம் கூடினால், நான் அங்கே இருப்பேன் என்கிறார். அதுதான் தேவனின் இருதயம். நாம் கிருபாசனத்தண்டைக்கு வரவேண்டும். வேதம், "கிருபாசனத்தண்டை வாருங்கள்; இரக்கத்தின் ஆசனத்திற்கு வாருங்கள்," என்று கூறுகிறது. உதவி மையத்திற்கு நீங்கள் வந்தால் தேவன் உங்களைக் கண்டிக்கமாட்டார். அவர், "நீ இந்தக் காரியங்களையெல்லாம் முடிக்கவில்லை. ஆகவே, நான் உனக்கு உதவி செய்ய முடியாது," என்று கூறமாட்டார். அவர் வழியை உண்டாக்குவார். வேதம், "சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்," (1 கொரிந்தியர் 10:13) என்று கூறுகிறது. ஆம், இயேசு, "நானே வழி. இந்தத் தீமை, சோதனைகளுக்கு, உபத்திரவங்களுக்குத் தப்பும்படி ஒரு வழியயை உண்டாக்குவேன். நானே கிருபாசனத்தில் இருக்கிறேன்," என்று கூறுகிறார் (எபிரெயர் 4:16). ஆம், "என் உதவி மையத்தில் நீ கிருபையையும் இரக்கத்தையும் பெற்றுக்கொள்ளலாம். தேவையோடு நீ வரும்போது, உன்னை மன்னிக்கும்படி நான் இரக்கம் காண்பிப்பேன். எல்லாவற்றையும் செய்து முடிப்பதற்கு நான் உனக்கு கிருபையும் பெலனும் தருவேன்," என்கிறார்.
"என்னுடைய சித்தம் எல்லாவற்றையும் நீ நிறைவேற்றுவாய். எல்லாமும் நன்மைக்கேதுவாக நடக்கும்," - இயேசுவின் இருதயம் இப்படியே எண்ணுகிறது. இயேசுவிடம் வாருங்கள். வேதம், "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்" (சங்கீதம் 121:1,2) என்று கூறுகிறது. ஆம், பல ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை பலவித பிரச்னைகளினூடாக சென்றார். உதவிக்காக தேவனை நோக்கிக் கூப்பிட்டார். இயற்கைக்கு அப்பாற்பட்டவிதமாக, பரிசுத்த ஆவியானவர் அவரது ஆவியை பரலோகத்திற்கு எடுத்துச் சென்றார். தேவனின் சிங்காசனத்திற்கு, இயேசுவின் சிங்காசனத்திற்கு, கிருபையின் சிங்காசனத்திற்கு அருகே நிற்கப்பண்ணினார். ஆண்டவர் இயேசுவுக்கு முன்பாக முழு பிரபஞ்சமும் நகர்ந்துகொண்டிருந்ததை அவர் கண்டார். ஒவ்வொரு கிரகமும் வந்து கொண்டிருந்தது; அவை சுழன்றுகொண்டிருந்தன. பூமியும் நகர்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொன்றும் அவரது சிங்காசனத்திற்கு முன்பு வந்தபோது, குனிந்து அவரை பணிந்து கொண்டு சென்றன. ஆனால் இயேசு, "மகனே, முழு பிரபஞ்சத்தையும் நான் கட்டுப்படுத்துவதை நீ காணவில்லையா? உன் சிறிய வாழ்க்கையை என்னால் கட்டுப்படுத்த முடியாதா? செல். நான் உனக்காக யாவற்றையும் செய்துமுடிப்பேன். நான் உனக்கு உதவி செய்வேன்," என்று கூறினார். தேவன் அவருக்கு உதவினார். அன்பானவர்களே, தேவன் உங்களுக்கும் உதவுவார். தேவனுக்கு முன்பாக உங்களுக்காக அவரே வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார். அவரது இரத்தம் உங்களுக்காக நன்மையானவற்றைப் பேசுகிறது (எபிரெயர் 12:24). இயேசு தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்து, உங்கள் ஆசீர்வாதத்திற்காக தம் இரத்தத்தை சிந்தியதால் எல்லா நன்மையும் வந்துகொண்டிருக்கிறது. நன்மையான காரியங்கள் யாவும் வரும். அவர் உங்களுக்கு உதவுவார். பயப்படாதிருங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்று எல்லா தேவைகளோடும் பாரங்களோடும் உம் உதவியை நாடி வந்திருக்கிறேன். என் கரத்தைப் பிடித்திடும்; எனக்குள்ளாக இருக்கும் எல்லா பயத்தையும் அகற்றிடும். நான் விழும் இடத்திலெல்லாம் உம் இரக்கத்தை காண்பியும்; திடமாக நிற்பதற்கான கிருபையை அருளிச்செய்யும். எல்லா சோதனையின் மத்தியிலும் போராட்டத்தின் மத்தியிலும் தப்புவிப்பதற்கான வழியை உருவாக்கிடும். உம் சித்தத்தின் நடப்பதற்கும், உம் பரிபூரண திட்டத்தை நம்புவதற்கும் என்னை பெலப்படுத்தியருளும். எல்லாவற்றையும், என் வாழ்க்கையையும் நீரே ஆளுகை செய்கிறீர் என்பதை நினைப்பதற்கு எனக்கு உதவிடும். எல்லா சூழ்நிலையும் எனக்கு நன்மையுண்டாகவும், உமக்கு மகிமையை சேர்க்கும்படியும் அமைவதாக. இயேசுவே, எனக்கு ஒத்தாசையாகவும், எனக்குப் பெலனாகவும், வழியாகவும் இருப்பீராக. எப்போதும் எனக்குச் செவிகொடுத்து, ஒத்தாசை செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


