அன்பானவர்களே, உங்களுக்கு விரோதமாக வரும் தீமையின் எல்லா தாக்குதல்களையும் நீங்கள் மேற்கொள்ளவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். கர்த்தர், "உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்" (ஏசாயா 54:17) என்று கூறுகிறார். பொல்லாத பிசாசும் அவன் மக்களும் உங்களை அழித்துப்போடுவதற்கு ஆயுதங்களை உருவாக்கலாம்; உங்களைப் பொய்யாய் குற்றம் சுமத்துவதற்காக வார்த்தைகளைப் பேசலாம். ஆனால், தேவன், "என் பிள்ளையே, உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காது. அநியாயமாய், பொய்யாய் உன்னை குற்றப்படுத்தும் எல்லா நாவையும் நீ குற்றப்படுத்துவாய்," என்று கூறுகிறார். எந்தத் தீமையும் உன்னை தொடாமல், உனக்கு விரோதமாய் கூறப்படும் எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமல் போகும்படி நான் செய்வேன். நான் உன் வாழ்க்கையை நீதியாய் விளங்கப்பண்ணுவேன் என்று தேவன் வாக்குக்கொடுக்கிறார். கர்த்தர், "இது நான் உனக்குத் தரும் சுதந்தரம். என்னிடத்திலிருந்து வரும் நீதி," என்று கூறுகிறார். ஆண்டவருக்கே துதியுண்டாவதாக. நம் தேவன் நியாயமுள்ளவர். அவர் அதை உங்களுக்குக் காண்பிப்பார்; உங்களுக்கு நியாயம் செய்வார்.
இது எப்போது நடக்கும்? தேவனுடைய பரிசுத்தம் உங்கள்மேல் வரும்போது, உங்களுக்கு அவர் இதைச் செய்வார். வேதம், "எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது," (2 கொரிந்தியர் 10:4) என்று கூறுகிறது. தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக நீதிமானாய் காணப்படுவதற்கு தேவனிடம் இருந்து வரும் பரிசுத்தமே தெய்வீக வல்லமையாயிருக்கிறது. வேதத்தில், "நசரேயனாகிய இயேசு செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்" (லூக்கா 24:19) என்று வாசிக்கிறோம். இரண்டாவதாக, தேவன் எல்லா தீமைகளையும் குற்றச்சாட்டுகளையும் மேற்கொள்வதற்கான ஞானத்தை அருளிச்செய்கிறார். "யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம்," (பிரசங்கி 9:18). உங்களுக்கு விரோதமான எல்லா ஆயுதங்கள், குற்றச்சாட்டுகளின் நடுவிலும் தேவ ஞானம் வரும்; இன்னும் அதிகமதிகமாக செழிப்பதற்கான ஞானத்தை அவர் தருவார். நீங்கள் செய்ததை சரி என்று நிரூபிக்கவோ, குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராடவோ தேவையில்லை. நீங்கள் அந்தஸ்திலும், செழிப்பிலும், தேவனுடைய கண்களிலும் மனுஷர் கண்களிலும் தயவிலும் பெருக வேண்டும். உங்கள் வளர்ச்சியே, குற்றம் சொல்லுகிறவர்களின் வாய்களை மூடும்.
மூன்றாவதாக, தேவ ஆவியைக்கொண்டு சத்துருவின் ஆயுதங்களை கீழே விழப்பண்ணுவீர்கள். வேதம், "கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்" (நியாயாதிபதிகள் 14:6) என்று கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் வாயிலாக தேவன் உங்களுக்கு இந்த வல்லமையை தருகிறார். எந்த அளவு அதிகமாக குற்றச்சாட்டுகள் வருகின்றனவோ, எந்த அளவு அதிகமாக உங்களுக்கு விரோதமாக ஆயுதங்கள் ஆயத்தம் செய்யப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு உங்கள் வாயிலாக தேவன் அற்புதங்களைச் செய்வார் (மாற்கு 16:17). வியாதிப்பட்டிருக்கிறவர்கள்மேல் நீங்கள் கைகளை வைக்கும்போது, அவர்கள் சுகம் பெறுவார்கள். நீங்கள் பேயை விரட்டுவீர்கள்; புதிய பாஷைகளில் பேசுவீர்கள்; தேவனோடு தொடர்பு கொள்வீர்கள். மக்கள் உங்கள் வாயிலாக தேவனுடைய சத்தத்தைக் கேட்பார்கள். பயப்படாதிருங்கள். தேவ ஆவியானவரால் நீங்கள் தேவனுடைய கரமாக மாறுவீர்கள். இன்றைக்கு, தேவன் உங்களுக்கு இந்த ஆசீர்வாதத்தை அளிக்க விரும்புகிறார். நீங்கள், பரிசுத்த ஆவியானவர் வாயிலாக பரிசுத்தத்தை, ஞானத்தை, ஆவிக்குரிய வல்லமையைப் பெற்றுக்கொள்ளலாம். வேதம், பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது, இயேசுவுக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்று கூறுகிறது (அப்போஸ்தலர் 1:8). இன்றைக்கு அவர் தம் ஆவியால் உங்களை நிரப்புவதற்கு விரும்புகிறார். ஆகவே, உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காது. உங்களைக் குற்றப்படுத்தும் எந்த நாவையும், தேவ மகிமைக்கென்று உயர்ந்து செழிப்பதால் குற்றப்படுத்துவீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உமக்கும் மனுஷருக்கும் முன்பாக நீதிமானாய் நிற்கும்படி என்னை உம் பரிசுத்தத்தால் நிரப்பும். எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் மேலாக உயரும்படி எனக்கு தெய்வீக ஞானத்தை அருளிச்செய்யும். என் வாழ்க்கை உம் கிருபையில், தயவில், சத்தியத்தில் வளர்ந்து, பொய்யான குரல்கள் எல்லாவற்றையும் அமர்த்திப்போடட்டும். தீமையான தாக்குதல்கள் எல்லாவற்றையும் மேற்கொள்ளும்படி பரிசுத்த ஆவியானவர் என்னை பெலப்படுத்துவாராக. வாக்கிலும் செயலிலும் என்னை வல்லமையுள்ள உம் பாத்திரமாக்குவீராக. உம்முடைய நீதியும் நியாயமும் என் வாழ்வில் விளங்குவதாக. ஆண்டவரே, நீர் என்னை தற்காத்து உயர்த்துவீர் என்று நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


