அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்" (உபாகமம் 7:15) என்று கூறுகிறது. ஆம், கர்த்தர், "சகல நோய்களையும் உன்னை விட்டு விலக்குவேன்," என்று கூறுகிறார். "உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்" என்று வேதம் கூறுகிறது(யாத்திராகமம் 23:25). சுகத்தைத் தருவதாக கர்த்தர் எப்போது கூறுகிறார்? இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்தபோது, கசப்பான தண்ணீருள்ள ஓர் இடத்தை அடைந்தனர் (யாத்திராகமம் 15:25). தாகத்துக்குக் குடிக்க அங்கே தண்ணீர் இல்லை. மரணத்தைக் கொடுப்பதுபோன்ற கசப்பான தண்ணீர் அங்கே இருந்தது. ஆனால், கர்த்தர் அந்த இடத்தில், "உன்னை குணமாக்குகிற கர்த்தர் நான். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் " என்றார். அவர், "இந்தக் கசப்பிலிருந்து நான் உன்னை விடுவிப்பேன்," என்று கூறுகிறார்.

பக்தியுள்ள ராஜா ஒருவன், கர்த்தரின்மேல் ஆழமானதும், அசையாததுமான பற்றுடன் நீதியாய் பின்தொடர்ந்தான். பரிசுத்த வேதாகமத்தில் அவன் விசுவாச பயணத்தில், மிகவும் இக்கட்டான சூழல்களிலும் அவன் பொறுமையோடு தெய்வீக திட்டத்தை நம்பியவனாக சமாதானத்துடன் காத்திருந்தான் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அவனுக்கு கசப்பே வந்தது; வியாதி வந்தது. உயிரைப் பறிக்கும் நோய் வந்தது. அவன், சாவுக்கேதுவான நோய் தன்மேல் வந்திருப்பதாகக் கூறினான். ஆனால், கர்த்தர் அந்தச் சாபத்தை அகற்றினார். இதற்காகவே, வேதம் கூறுகிறபடி, இயேசு, சாபத்தை சிலுவையில் சுமந்தார் (கலாத்தியர் 3:13). அவர் பாவத்தின் சாபத்தை சுமந்தார். இன்று அவர் நம்மோடு ஜீவித்து, நமக்கு விடுதலை அருளுகிறார். அவர், "நான் உன் வியாதிகளை சுகமாக்குவேன்," என்கிறார். இயேசுவிடம் வாருங்கள். பாவம் ஒருவேளை நம்மேல் வியாதியைக் கொண்டுவந்தாலும் கர்த்தரால் அதை மன்னித்து நம்மை சீர்ப்படுத்த முடியும்.

திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு மனுஷன் நடக்கவோ, கைகளை அசைக்கவோ முடியாத நிலையில் இயேசுவிடம் கொண்டு வரப்பட்டான் (மத்தேயு 9:2-6). அவனை பார்த்த மாத்திரத்திலே இயேசு அந்த வியாதி பாவத்தினால் வந்தது என்று அறிந்தவராய், "நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்," என்று கூறினார். அவர் அவனது வியாதியையும் குணப்படுத்தினார். "உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட. உன் வீட்டுக்குப் போ," என்று கூறினார். இன்றும், மருத்துவமனைகளுக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருப்பவர்களை, தெருக்களில் படுத்துக்கிடப்பவர்களை கர்த்தர் தம் கரத்தை நீட்டி குணமாக்குகிறார். அவர் பாவத்தை அகற்றி உங்களுக்கு ஆரோக்கியத்தை அருளிச்செய்கிறார். அவரது கரங்களில் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்திடுங்கள்.

வியாதி, பிசாசினாலும் வருகிறது. அசுத்த ஆவி பிடித்திருந்த ஓர் இளைஞன் பேசக்கூடாமல் இருந்தான் (மாற்கு 9:25, 26). ஆனால், இயேசு, ஊமையும் செவிடுமான அந்த ஆவியை வெளியே வரும்படி கட்டளையிட்டார். அவன் செத்தவனைப்போல கீழே விழுந்தான். இயேசு, அவன் கையைப் பிடித்து, தூக்கினார். அவர் அன்புடன் அவனை தூக்கினார். அவன் சுகம் பெற்றான். தகப்பன், அதிகமாய் மகிழ்ந்தான். கர்த்தர், உங்கள் பிள்ளைகளையும் குணப்படுத்துவார். அவர் பேய்களை விரட்டுவார். விடுதலை அளிப்பார். அவரை விசுவாசித்திடுங்கள். இந்த ஆசீர்வாதம் இன்று இயேசுவின் நாமத்தில் உங்கள்மேல் இறங்குவதாக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, எங்களை குணமாக்குகிற கர்த்தர் நீரே. நோயால் அவதிப்படும் ஒவ்வொருவரையும் உம் முன்னே கொண்டு வருகிறேன். அவர்கள் வாழ்க்கையிலிருந்து எல்லா வியாதியையும் வலியையும் பெலவீனத்தையும் அக்கிரமத்தையும் எடுத்துப்போட்டருளும். அவர்கள் பாவங்களை மன்னித்து உம் கிருபையால் சுத்திகரித்தருளும். திமிர்வாதமுள்ள மனுஷனையும், அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த வாலிபனையும் சுகப்படுத்தியதுபோன்றே, உம் அன்பின் கரத்தை நீட்டி, ஆரோக்கியத்தையும் விடுதலையையும் அளித்தருளும். மருத்துவனையில் இருப்போரையும் பாடுகளோடு வீட்டில் இருப்போரையும் ஆசீர்வதித்திடும். அவர்கள் பிள்ளைகளைக் குணப்படுத்தி, அவர்களுக்கு சமாதானத்தையும் பெலனையும் அருளிச்செய்திடும். உம் சுகமளிக்கும் வல்லமை ஒவ்வொருவரையும் தொட்டு, நம்பிக்கையால் நிரப்பவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.