அன்பானவர்களே, இன்று ஆண்டவர் நம் உள்ளங்களைப் புதுப்பிப்பார். அவர் நம்முடன் பேசும் ஒவ்வொரு முறையும் நாம் தைரியம் பெறுகிறோம். அவர், "...அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு" (உபாகமம் 6:3) என்று கூறுகிறார். தேவன் இங்கு கீழ்ப்படிதலை வலியுறுத்துகிறார். நீங்கள் கீழ்ப்படிந்தால், தேசத்தில் விருத்தியடைவீர்கள் என்று இந்த வசனம் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், கீழ்ப்படிவது எளிதானதல்ல. நம் பெற்றோருக்கு, மூத்தவர்களுக்கு, போதகர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, உயரதிகாரிகளுக்குக் கீழ்ப்படியும்படி கூறப்பட்டுள்ளது. யாராவது ஒருவர், ஏதோ ஒன்றை நம்மைச் செய்யும்படி கூறும்போது, கட்டளைக்கு அடிமைப்பட்டதுபோல உணருகிறோம். அதனால், அது நமக்கு ஏற்றதாக தோன்றாமல் போகிறது.
ஆனால், ஆண்டவரே, அந்த மக்களை நம் வாழ்வில் தந்தவராதலால், கீழ்ப்படிதலின் முக்கியத்தை வலியுறுத்துகிறார். நம்மை வழிநடத்துவதற்காகவே அவர் மூத்தவர்களை வைத்திருக்கிறார்; உயர்வான தரிசனமும் சிறந்த அனுபவமும் கொண்டவர்களையும் வைத்திருக்கிறார். அவர்கள் சொல்வதை நாம் செய்யும்போது, வாழ்வில் உயர்வதற்கு எளிய வழியாக அமையும். சிலவேளைகளில் நாம் அவர்களைக் காட்டிலும் சிறந்தவர்களாகவும் மாறிவிடுவோம். ஆலோசனையை, சரியான ஆலோசனையை கேட்கிறவன் ஞானமுள்ளவன். அது நம்மை சிறந்தவர்களாக மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாயிருக்கும். பலவேளைகளில் தேவனுடைய வழிகாட்டுதல் அவர்கள் வழியாக வரும். ஆகவே, நம் வாழ்வில் தேவன் வைத்துள்ள மூத்தவர்களை மதிப்போம்.
கானா ஊரிலே நடந்த திருமணத்தில் திராட்சரசம் குறைவுபட்டது. ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்த இயேசுவின் தாயாகிய மரியாள், வேலைக்காரர்களிடம், "இயேசு உங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்," என்று கூறினாள். வேலைக்காரர்களுக்கு இயேசுவையோ, அவர் இரட்சகர் என்பதோ, வல்லமையான தேவன் என்பதோ தெரியாது. ஆனாலும், தங்களுக்கு மேலாக வைக்கப்பட்ட மூத்தவரின் கட்டளையை நம்பினார்கள். இயேசு, "ஜாடிகளை தண்ணீரால் நிரப்புங்கள்," என்று சொன்னதும், அதைப் புரிந்துகொள்ளாவிட்டாலும், கீழ்ப்படிந்தார்கள். தண்ணீர் திராட்சரசமாக மாறியது. பலவேளைகளில் நம்மை எதையாவது செய்யும்படி நம்மிடம் கூறும்போது அதை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், நாம் கீழ்ப்படியும்போது, அதிலிருந்து பெரிய அதிசயமும், விருத்தியும் வரும். என் வாழ்க்கையிலும் என் தந்தை எனக்கு அளித்த வாய்ப்புகளுக்கு கீழ்ப்படிந்ததினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். சிலவேளைகளில் நான் விரும்பாவிட்டாலும் சரி என்று ஒத்துக்கொண்டபோது ஆண்டவர் என்னை வல்லமையாக பயன்படுத்தினார்; பெரிய மேடைகளைத் திறந்தார். அன்பானவர்களே, தேவன் உங்களுக்கு இந்த வாய்ப்பை அளித்தால், நீங்கள் உயரும்படி அதற்குக் கீழ்ப்படியுங்கள். இப்போதே செய்வீர்களா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, கீழ்ப்படிகிற இருதயத்தைத் தயவாய் எனக்குக் கொடுத்தருளும். உமக்கு முன்பாக தாழ்மையாக இருக்க எனக்கு உதவி செய்யும். ஏன் என்று என்னால் உணர்ந்துகொள்ள இயலாத வேளையிலும், என்னால் முழுமையானவிதத்தில் காண இயலாவிட்டாலும் உமக்குக் கீழ்ப்படிவதற்கான கிருபையை எனக்குத் தாரும். ஆண்டவரே, என் வாழ்வில் ஏற்ற நேரத்தில் சரியான ஆலோசனையையும், என்னை சரி செய்வதற்கான ஆலோசனைகளையும், மூத்தவர்களிடமிருந்தும், உயர் அதிகாரிகளிடமிருந்தும் வரும் வழிகாட்டலையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவும், அவர்கள் மூலமாக வரும் உம் சத்தத்திற்குக் கீழ்ப்படியவும் எனக்கு உதவும். நான் கீழ்ப்படியும்போது, என்னை கனப்படுத்தும்; ஆசீர்வதியும்; தெய்வீக ஆசீர்வாதங்களால் என்னை பெருகப்பண்ணும். நான் தேசத்தில் பெரியவனா(ளா)க்கட்டும். உம் வாக்குத்தத்தங்கள் என் வாழ்வில் நிறைவேறுவதாக. ஆண்டவரே, என் இருதயத்தை வனைவதற்காக இயேசுவின் நாமத்தில் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


