அன்பானவர்களே, தேவன் உங்களுக்கு இரட்சிப்பின் சந்தோஷத்தை தருவதற்கு விரும்புகிறார். வேதம், "நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்" (ஏசாயா 12:3) என்று கூறுகிறது. இரட்சிப்பு, பாவங்களிலிருந்து மன்னிப்பை, பாவத்தின் அதிகாரத்திலிருந்து விடுதலையை, அதன் சாபத்திலிருந்து சுதந்திரத்தை அளிக்கிறது. பாவம் அகற்றப்படும்போது, கர்த்தரின் சந்தோஷம் நம் இருதயங்களை நிரப்புகிறது.
இந்தச் சத்தியத்தை ஈசாக்கின் வாழ்வில் பார்க்கிறோம். தேவனிடமிருந்து நூறு மடங்கு அறுவடையைப் பெற்ற பிறகு, ஈசாக்கு, தண்ணீருக்காக கிணறுகளைத் தோண்டினான். மீண்டும் மீண்டும் அவன் விரோதிகள் எதிர்த்தனர்; தடுத்தனர். ஆனாலும், ஈசாக்கு மனந்தளரவில்லை. அவன் தொடர்ந்து தோண்டிக்கொண்டே இருந்தான்; தேவன் அவனுக்கு ஆசீர்வாதமான ஓரிடத்தைக் கொடுத்தார். இறுதியாக, அவன் சத்துருக்கள் தேவன் அவனோடு இருக்கிறார் என்று ஒத்துக்கொண்டனர். அவ்வண்ணமே, சத்துரு உங்கள் ஆவிக்குரிய வாழ்வுக்கு இடைஞ்சல் செய்ய முயற்சிக்கலாம்; ஆனால், ஜீவத்தண்ணீராகிய இயேசுவை தொடர்ந்து தேடுங்கள். நீங்கள் அதிகமாய் அவரை தேடும்போது, அவரது ஜீவன் உங்களுக்குள் அதிகமாய் பாயும்.
இயேசு, "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்," (யோவான் 7:37-39) என்று கூறியிருக்கிறார். தம்மை விசுவாசிக்கிறவனிடத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் பாயும் என்று அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். இந்த ஜீவத்தண்ணீர், பரிசுத்த ஆவியானவராவார். அவர், தேவனுடைய ஜீவனாலும் சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் வல்லமையாலும் நம்மை நிரப்புகிறார். நாம் கிறிஸ்துவின்பேரில் தாகமாயிருக்கும்போது, அவர் நம் ஆத்துமாக்களை திருப்தியாக்கி, நம் ஆவியைப் புதுப்பிக்கிறார். இரட்சிப்பின் தண்ணீர், மன்னிப்பைக் குறித்தும் பேசுகிறது. இஸ்ரவேலர் தங்கள் விரோதிகளை எதிர்கொண்டபோது, சாமுவேல் ஜனங்களை மனந்திரும்பும்படி அழைத்தான் (1 சாமுவேல் 7:5,6). அவர்கள் கர்த்தருக்கு முன்பாக நீரை ஊற்றி, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டார்கள். தேவன் அவர்கள் வேண்டுதலுக்குச் செவிகொடுத்து, அவர்களை விடுவித்தார். அவ்வண்ணமே, நாம் மனந்திரும்பி இயேசுவிடம் வரும்போது, அவரது விலையேறப்பெற்ற இரத்தம் எல்லா பாவங்களும் நீங்க நம்மைச் சுத்திகரித்து, தேவனுடனான ஐக்கியத்தை மீட்கிறது.
தேவனுடைய ஜீவத்தண்ணீர், கனியை உண்டாக்குகிறது. எங்கெல்லாம் தண்ணீர் பாய்ந்ததோ, அவ்விடமெல்லாம் ஜீவன் உண்டானது; கனி தரும் மரங்கள் தோன்றின (ஆதியாகமம் 1ம் அதிகாரம்). பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வை நிரப்பும்போது, ஆவிக்குரிய கனி வளர தொடங்குகிறது. தேவனுடைய ஆசீர்வாதங்கள், சமாதானம், சந்தோஷம், நீதி நம்மில் காணப்பட்டு, நம்மை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கப்பண்ணும். இயேசு கிறிஸ்துவே ஜீவத்தண்ணீர் ஊற்றாயிருக்கிறார். கன்மலையை அடிக்கும்படி தேவன், மோசேக்குக் கட்டளையிட்டார்; அப்போது ஜனங்களுக்குத் தண்ணீர் பாய்ந்தது (யாத்திராகமம் 17:6). கிறிஸ்துவே ஞானக்கன்மலையாயிருக்கிறார் என்று வேதத்தில் பின்னர் வெளிப்படுத்தப்பட்டது (1 கொரிந்தியர் 10:4). இரட்சிப்பின் தண்ணீர் மனுக்குலம் முழுவதும் பாயும்படி இயேசு சிலுவையில் காயப்பட்டார். அவருடைய தியாகத்தின் வாயிலாக, நாம் மன்னிப்பை, நித்திய ஜீவனை, பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.
இன்று இயேசு, தம்மிடம் வரும்படி உங்களை அழைக்கிறார். பரம தகப்பன், தம்மிடம் கேட்கிறவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பார் என்று வேதம் வாக்குக்கொடுக்கிறது (லூக்கா 11:13). ஆகவே, அவரைத் தேடுங்கள்; அவர்மேல் தாகமாயிருங்கள்; இரட்சிப்பின் துரவுகளிலிருந்து தினமும் மொண்டு கொள்ளுங்கள். அவர் தமது சமுகத்தால் உங்களை நிரப்புவார்; உங்கள் ஆத்துமாவை திருப்தியாக்குவார்; உங்கள் வாழ்வில் தம் ஆசீர்வாதங்கள் புரண்டோடும்படி செய்வார்.
ஜெபம்:
தகப்பனே, உம் பிள்ளைகளை இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவி, எல்லா பாவத்தையும் சுத்திகரியும். அவர்களை உம் பரிசுத்த ஆவியினால் நிறைத்து, அவர்கள் வாழ்வில் ஜீவத்தண்ணீருள்ள நதிகள் பாயும்படி செய்யும். ஆண்டவரே, நீர் ஈசாக்கை ஆசீர்வதித்தவண்ணம் இவர்களையும் ஆசீர்வதித்தருளும். இவர்கள் வாழ்வில் எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதமும் பலனும் நிறைவாக உண்டாகட்டும். பரிசுத்த ஆவியானவரே, இவர்களை வழிநடத்தும்; பெலப்படுத்தும்; தாகமுள்ள இவர்கள் ஆத்துமாக்களை திருப்திப்படுத்தவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


