அன்பானவர்களே, இன்றைக்கு, "உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர்" (அப்போஸ்தலர் 2:28) என்ற வசனத்தை தியானிப்போம். ஆம், ஒவ்வொரு முறை நாம் ஆண்டவரின் சமுகத்தில் வரும்போது அங்கே சந்தோஷம் நிறைவாய் இருக்கிறது. எதையாவது சாதிக்கும்போது, புதிதாக ஒரு குழந்தை பிறக்கும்போது, நாம் பட்டம் வாங்கும்போது, பதவி உயர்வு கிடைக்கும்போது அல்லது திருமணம் நடக்கும்போது என்று பல நேரங்களில் சந்தோஷமான தருணங்களை நாம் கொண்டாடுகிறோம். அந்த சந்தோஷத்தை சுற்றியிருக்கிறவர்களுக்கும் பரப்புகிறோம். ஆனால், சிறையில் மகிழ்ச்சியாயிருந்த இரண்டு மனிதர்களைக் குறித்து வேதத்தில் பார்க்கிறோம் (அப்போஸ்தலர் 16:25-36). பவுலும் சீலாவும் நடுராத்திரியில் தேவனை துதித்துப் பாடினார்கள். திடீரென பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு, சிறைச்சாலையின் கதவுகள் திறந்தன; சங்கிலிகள் கழன்றன. இதைக் கண்டு பயந்துபோன சிறைச்சாலைக்காரன் தன்னையே குத்திக்கொள்ளப்போனான். பவுல், "உனக்கு கெடுதி ஒன்றும் செய்துகொள்ளாதே. நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்," என்று சத்தமிட்டுக் கூறினான். சிறைச்சாலைக்காரன் நடுங்கியவனாக அவர்கள் முன்பாக விழுந்து, "இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான். அன்று ராத்திரியிலே அவன் வீட்டார் அனைவரும் விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்; ஆண்டவருக்குள் இரட்சிப்பைப் பெற்ற சந்தோஷத்தினால் நிறைந்தார்கள்.
சந்தோஷம் எங்கு தொடங்குகிறது? சிறைச்சாலையில்! அது சிறைச்சாலைக்காரனின் வீட்டுக்கு பரவுகிறது. நிச்சயமாகவே அவன் சென்று மற்றவர்களுக்கு இயேசு அருளும் சந்தோஷத்தை குறித்துக் கூறியிருப்பான். அநேகவேளைகளில் நாம் ஆலயத்தில் அல்லது குறிப்பிட்ட இடங்களில்தான் அப்படிப்பட்டதான சந்தோஷம் காணப்படும் என்று நினைக்கிறோம். ஆனால், இயேசு, "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்" (மத்தேயு 18:20) என்று சொல்லியிருக்கிறார். பவுலும் சீலாவும் பரிசுத்தமே இல்லாத இடத்தில், குற்றவாளிகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் ஆண்டவரை துதித்தார்கள்; அவரது பிரசன்னம் சிறைச்சாலையை நிரப்பியது. அந்த சந்தோஷம் இரட்சிப்பின் வழியாய் நிரம்பி வழிந்து, சுற்றியிருந்த அனைவரையும் தொட்டது. கர்த்தரின் சந்தோஷம் ஓரிடத்தையோ, சூழ்நிலையையோ பொறுத்ததல்ல. எங்கும் இருதயத்தை நிரப்ப அந்த சந்தோஷத்தால் முடியும்.
ஆம், அன்பானவர்களே, இன்றும் தேவன் நமக்கு புது ஜீவனை தந்து தம்முடைய சந்தோஷத்தால் நம்மை நிரப்ப விரும்புகிறார். அவர் நமக்குள் இருக்கிறபடியால், அவரது பிரசன்னமும் நமக்குள் இருக்கிறது. காலைதோறும் அவரை வாழ்க்கைக்குள் அழைக்கும்போது, அவர் யாராலும் பறிக்க முடியாத சந்தோஷத்தால் நம்மை நிரப்புவார். அந்த சந்தோஷம் நிரம்பி வழியும்;உங்கள் நண்பர்களை, உடன் பணிபுரிகிறவர்களை, குடும்பத்தினரை தொடும். அவர்களும், "இந்த சந்தோஷத்தை நான் எப்படிப் பெற்றுக்கொள்வது?" என்று கேட்பார்கள். உங்கள் சாட்சியின் மூலம் அவரது இரட்சிப்பின் கிருபையை அறிந்துகொள்வார்கள். இன்றைக்கு, "ஆண்டவரே, காலையில் உம்மோடு நேரம் செலவழிக்கிறேன். என்னை உம்முடைய சந்தோஷத்தால் நிரப்பும். மற்றவர்களும் அடையும்படி, உம்முடைய இரட்சிப்பின் கிருபைக்கு நேராக வழிநடத்தப்படும்படி, அது என்னிலிருந்து நிரம்பி வழியட்டும்," என்று அர்ப்பணிப்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய சமுகத்தின் சந்தோஷத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய ஆவி எனக்குள் இருக்கிறது என்று அறிந்து, பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் உம்மை துதித்ததுபோல எல்லா சூழ்நிலையிலும் உம்மை துதிக்கக் கற்றுத்தாரும். நான் மட்டுமல்ல, என்னை சுற்றிலும் இருக்கிறவர்களும் உம்முடைய அன்பை ருசிக்கவும் உம்முடைய தயவை காணவும் தக்கதாக உம்முடைய சந்தோஷம் நிறைந்து வழியும்படி என்னை நிரப்பும். என் வாழ்க்கை இரட்சிப்பின் சந்தோஷத்தால் பிரகாசிக்கட்டும்; மற்றவர்களை வழிநடத்தட்டும். இன்று நான் என் உள்ளத்தை அர்ப்பணிக்கிறேன்; என்னை உம் சமுகத்தால், சந்தோஷத்தால், கிருபையால் நிரப்பவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.