அன்பானவர்களே, இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை உங்களோடு பகிர்ந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சி. "அவர் (கர்த்தர்) என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்" (ஆபகூக் 3:19)என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். தேவன், மானின் காலை பெலப்படுத்துவதுபோல, உங்கள் கால்களையும் பெலப்படுத்துவார்.

வலிமை வாய்ந்த சிங்கத்தையோ, வேகமான சிறுத்தையையோ, பெலன் நிறைந்த கால்களைக் கொண்ட யானையையோ, நீண்ட கால்களைக் கொண்ட ஒட்டகசிவிங்கியையோ ஏன் ஒப்பிடவில்லை என்று நீங்கள் எண்ணக்கூடும். அன்பானவர்களே, மானின் கால்களைப் பார்க்கும்போது, அவை ஒல்லியாக தோன்றலாம். இவை எப்படி உடலின் எடையை தாங்கக்கூடும் என்ற கேள்வி எழும்பலாம். ஆனாலும் அந்தக் கால்களில் பெலன் நிறைந்தவையாய், மான் நடப்பதற்கும், ஒடுக்கமான பாதையின் வழியாக, மலைகளின்மேல், பர்வதங்களின்மேல் ஏறி, மிகவும் உயரமான இடங்களை அடைவதற்கும் உதவுகின்றன.
அவ்வாறே, தேவன் நம் பாதங்களும் கால்களும் மான்கால்களைப் போல உறுதியாகும்படி செய்கிறார். "அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்" (சங்கீதம் 18:33)என்று தாவீது கூறுகிறான். வாழ்வில் இடுக்கமான, கோணலான வழிகளில் நீங்கள் நடக்க நேர்ந்தாலும், உபத்திரவங்களும் தடைகளும் எதிர்ப்பட்டாலும், தேவன் உங்கள் கால்களை பெலப்படுத்தி, ஏற்ற உபாயங்களை தந்து நீங்கள் அவற்றை கடந்து செல்ல உதவுவார்.
ஆகவே, அன்பானவர்களே, சந்தோஷமாயிருங்கள். இன்றைக்கு நீங்கள் வாழ்க்கையில் இடுக்கமான பாதையின் வழியாக செல்ல நேரிடலாம். ஆனால், இன்றைய வாக்குத்தத்தத்தின்படி, எல்லா சுமையையும் தோள்களின்மீது சுமந்து, இடுக்கமான பாதை வழியாக செல்லுவதற்காக தேவன் உங்களை கால்களை மான்கால்களைப் போல மாற்றுவார்.  நீங்கள் உயரே ஏறுவதற்காக தேவன் உங்கள் கால்களை மான்கால்களைப்போல மாற்றுவார். நீங்கள் எளிதாக ஏறி, உயரமான ஸ்தலங்களை அடையலாம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.


ஜெபம்:
பரம தகப்பனே, நீர் கொடுத்துள்ள வாக்குத்தத்தங்களையும், உம்முடைய அளவற்ற வல்லமையையும் அன்பையும் எண்ணி நன்றி நிறைந்த இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். நான் உயர்ந்த ஸ்தலங்களுக்கு ஏறும்படி நீர் என் கால்களை மான்கால்களைப்போல ஆக்குகிறீர்.  மான்களின் கால்கள், இடுக்கமான வழிகளிலும் செங்குத்தான மலைகளிலும் ஏறுவதற்கு உதவுகிறதுபோல, வாழ்வின் இக்கட்டுகள், தடைகள் இவற்றை கடந்து செல்வதற்கு நீர் என்னை பழக்குவிக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். என்னுடைய பாரங்களை சுமப்பதற்கான பெலனை தந்து, கடினமான பாதைகளை கடந்து செல்ல எனக்குப் போதிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் உபத்திரவ காலத்தை எதிர்கொள்ளும்போது இந்த வாக்குத்தத்தத்தை நினைவுகூர எனக்கு உதவும். வாழ்வின் இடுக்கமான பாதைகளை கடந்துசெல்வதற்கு தேவையான உபாயங்களையும் பெலனையும் எனக்குத் தந்தருளும். நீர் எப்போதும் என்னோடு இருக்கிறீர் என்றும், நான் உயர்ந்த ஸ்தலங்களை அடைவதற்கு உதவி செய்து, என் வாழ்வின் மேலுள்ள உம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவீர் என்பதை அறிந்து நான் தேறுதலடையும்படி செய்யும். இன்றைக்கு இந்த வாக்குத்தத்தத்தை நான் ஏற்றுக்கொண்டு, என் வாழ்வுக்கென அதை அறிக்கை பண்ணுகிறேன். நான் உயர்ந்த ஸ்தலங்களுக்கு ஏறும்படி என் கால்களை மானின் காலைப்போல மாற்றுவதற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.