அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்" (நீதிமொழிகள் 22:29) என்று கூறுகிறது. இது, தேவன் திறமையை, கடின உழைப்பை, சாமர்த்தியத்தை கனம்பண்ணுகிறார் என்று காட்டுகிறது.இந்த உண்மையை லியொனார்டோ டா வின்சி போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றின் வாயிலாக பார்க்கலாம். அவர் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர். ஆனாலும், மிகுந்த அர்ப்பணிப்புடன் கலைத்திறமையை கற்றுக்கொண்டார்; வளர்த்துக்கொண்டார்; பழகிக்கொண்டார்; தினந்தோறும் மேம்படுத்திக்கொண்டார். அவரது அர்ப்பணிப்பினால், அவரது ஓவியங்கள் ராஜாக்களின் அவைகளில் கனப்படுத்தப்பட்டன.

வேதாகமம், தானியேலின் வாழ்க்கையையும் காட்டுகிறது. அவன் பாபிலோனிலுள்ள மற்ற அனைவரைக் காட்டிலும் பத்து மடங்கு ஞானவானாகக் காணப்பட்டான். அவனது ஞானத்தினாலும் சாமர்த்தியத்தினாலும் ராஜா, மாகாணம் முழுவதற்கும் அதிகாரமுள்ள பதவியில் அவனை அமர்த்தினான்; தேவன், ராஜாக்களுக்கு முன்பாக அவனை உயர்த்தினார்.

அன்பானவர்களே, தேவன் உங்களையும் உயர்த்த விரும்புகிறார். நீங்கள் மாணவராகவோ, மாணவியாகவோ, ஆசிரியராகவோ, பணியாளராகவோ இருந்தால் உங்கள் அன்றாடவேலையை சாமர்த்தியமாக செய்திடுங்கள். வேதம், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்," (கொலோசெயர் 3:24) என்று கூறுகிறது. உங்கள் வேலை அற்பமானது என்றோ, கவனிக்கப்படாதது என்றோ எண்ணாதீர்கள். நீங்கள் உண்மையாகவும், அர்ப்பணிப்போடும் வேலை செய்யும்போது, தேவன், தயவு, திறமை, பதவி உயர்வு ஆகிய வாசல்களைத் திறப்பார். தலைவர்கள் முன் நிற்கும்படியும் ஆசீர்வாதமாக விளங்கும்படியும் அவர் உங்களை ஆயத்தப்படுத்துவார். ஆகவே, திறமையை வளர்த்துக்கொண்டு தேவனுக்கு சிறப்பானதைச் செய்யவேண்டுமென்று உங்கள் இருதயத்தில் தீர்மானித்துக்கொள்ளுங்கள். அவர் உங்கள் கரங்களைப் பெலப்படுத்துவார்; மனதை வழிநடத்துவார். தமது வேளையில் அவர் உங்களை உயர்த்தி கனப்படுத்துவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்திருக்கும் வேலைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னை உம் ஞானத்தாலும் அறிவாலும் சாமர்த்தியத்தாலும் நிரப்பிடும். நான் செய்கிற எல்லாவற்றிலும் கற்றுக்கொண்டு, வளர்ந்து, என்னால் இயன்ற அளவு சிறப்பாக விளங்கிட உதவும். சோம்பலையும் பயத்தையும் அதைரியத்தையும் என் உள்ளத்தை விட்டு அகற்றும். உம்மைப்போல முழு மனதுடன் வேலை செய்ய எனக்குக் கற்பித்தருளும். ஆண்டவரே, என் கைகளின் வேலையை ஆசீர்வதித்து, என் மனதையும் தகுதிகளையும் பெலப்படுத்துவீராக. உம் நோக்கத்தின்படியே என்னை உயர்த்துவீராக; என் வாழ்க்கை உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வரட்டும் என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.