அன்பானவர்களே, இன்றைக்கு, "குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்" (யோவான் 3:36) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். எவ்வளவு அன்பு! தேவன், அன்பைக் குறித்து பேசிக்கொண்டிருப்பவரல்ல; நம்முடைய இரட்சிப்புக்காக, தம் ஒரே குமாரனை கொடுத்து அதை வெளிப்படுத்தினார். இந்த வசனம், நாம் நித்திய ஜீவனை நம் நற்கிரியைகளாலோ, செல்வத்தாலோ, பெலத்தாலோ சம்பாதிக்கவில்லை; மாறாக, இயேசு கிறிஸ்துவின் மேலான விசுவாசத்தின் வாயிலாக ஈவாக பெற்றுக்கொண்டோம் என்று நினைப்பூட்டுகிறது. வேதம், "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23) என்று கூறுகிறது. அன்பானவர்களே, நித்திய ஜீவன், தற்காலிகமான மகிழ்ச்சி அல்ல. அது முடிவற்ற, தேவனோடு ஐக்கியம் கொண்ட ஜீவனாயிருக்கிறது. நாம் விசுவாசிக்கும்போது, நம்பும்போது, இயேசுவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, ஒருபோதும் முடிவற்ற ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். இயேசு இல்லாத சந்தோஷம் எப்போதும் துக்கத்தில் முடிந்துபோகும் என்பதால், இயேசு இல்லாத நிலையில் எல்லா ஐசுவரியமும் சந்தோஷங்களும் வெறுமையாயிருக்கிறது.
அநேகர், "எனக்கு வயதாகும்போது இயேசுவை ஏற்றுக்கொள்வேன்," என்று நினைக்கிறார்கள். ஆனால், வேதம், "நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை" (பிரசங்கி 12:1) என்று நம்மை எச்சரிக்கிறது. அன்பானவர்களே, உங்கள் இரட்சிப்பை தள்ளிப்போடாதிருங்கள். இன்றே இரட்சணிய நாள். "இப்போது வாழ்க்கையை அனுபவி. தேவனை பிறகு பின்தொடரலாம்," என்று சாத்தான் அநேகரை வஞ்சிக்கிறான். ஆனால், வாழ்க்கை நிச்சயமற்றது. இரட்சகரை நீங்கள் அலட்சியம் பண்ணினால், நித்திய ஜீவனையே அலட்சியம் செய்கிறீர்கள். வேதம், "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்" (1 யோவான் 5:12) என்று தெளிவாகக் கூறுகிறது. உலக இன்பங்களால் அல்லது ஐசுவரியத்தால் நாம் வஞ்சிக்கப்படாதிருப்போமாக. சாலொமோன் ராஜாவும், "தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக....என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்" என்று ஜெபித்தான் (நீதிமொழிகள் 30:8,9). ஐசுவரியவானோ, ஏழையோ, வாலிபனோ, வயோதிகரோ, எல்லோருக்கும் இயேசு தேவை. அவரால் மாத்திரமே உண்மையான சமாதானத்தை, மெய்யான சந்தோஷத்தை, நித்திய ஜீவனை அளிக்க முடியும். அவர், "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார் (யோவான் 14:6).
ஆகவே, அன்பானவர்களே, இன்றே இயேசுவிடம் வருவோம். அவரை விசுவாசிப்போம். முழுவதும் நம்புவோம். உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, அவரது ஜீவன் உங்களுக்குள் வரும். நீங்கள் இனி தேவ கோபாக்கினையில் அல்ல; அவரது அன்பான கிருபையின் கீழ் இருப்பீர்கள். இயேசுவுடனான வாழ்வு, நோக்கம், சமாதானம், பரலோக நிச்சயம் கொண்ட ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கும். அவருடைய அன்பிலிருந்து எதுவும் நம்மை பிரிக்காதிருக்கட்டும். இன்று, உங்கள் இருதயத்தை திறந்து, "ஆண்டவர் இயேசுவே, நான் உம்மை ஏற்றுக்கொள்கிறேன். நீரே என் இரட்சகராகவும் ஜீவனாகவும் இருக்கிறீர்," என்று கூறுவோம். அப்போது நீங்கள் எப்போதும் தேவனோடு வாழும் விலையேறப்பெற்ற நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வீர்கள்.
ஜெபம்:
அன்பு ஆண்டவரே, என்னை பாவத்திலிருந்து இரட்சிப்பதற்காக இவ்வுலகத்திற்கு வந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே என் இரட்சகர்; நித்திய ஜீவனை அருளுகிறவர். ஆண்டவரே, என்னை உம் நித்திய அன்பாலும் சமாதானத்தாலும் நிரப்பிடும். உம்மை விசுவாசிக்கவும் முழுமையாக நம்பவும் உதவி செய்யும். நான் இந்த செய்தியை வாசிக்கும்போதே உமது ஜீவன் என் இருதயத்துக்குள் பாய்ந்து செல்வதாக. சத்துருவின் சகல வஞ்சகத்திலிருந்தும் என்னை விடுவித்தருளும். ஐசுவரியமோ, பெருமையோ, இன்பமோ என்னை உம்மை விட்டு விலக்காதிருப்பதாக. நான் இளமையிலும், முதுமையிலும் கூட உம்மை நினைப்பதற்கு உதவி செய்யும். நான் எப்போதும் பரலோகத்தில் உம்மண்டையில் வாழும்படி என்னை உம்மோடு வைத்துக்கொள்ளும். ஆண்டவரே, நித்திய ஜீவனை எனக்கு ஈவாக தருகிறபடியால் உம்மை ஸ்தோத்திரித்து அருமையான இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


