அன்பானவர்களே, இன்றைக்கு ஆண்டவர் அவருக்குள்ளான ஜீவனை தருவதற்காக வந்திருக்கிறார். அவரது ஜீவன் நம் வழியாக பாய்வதால் நாம் வாழ்கிறோம். வேதம், "...என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்" (கலாத்தியர் 2:20) என்று கூறுகிறது. இதுவே இன்றைக்கான மகிமையுள்ள வாக்குத்தத்தம். இன்றைக்கு நாம் வாழ்வது நம்முடைய சுய பெலத்தினால் அல்ல; நமக்குள்ளிருக்கும் கிறிஸ்துவின் ஜீவனால்தான் என்பதே பெரிய சத்தியமாயிருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு மூச்சும், நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் தேவனுடைய அன்பினாலும் அவர் சிலுவையில் செய்த தியாகத்தினாலும் தாங்கப்படுகிறது. இயேசு நம்மை நேசித்தார்; தம்மையே நமக்காகக் கொடுத்தார் என்ற சத்தியமே நம் விசுவாசத்திற்கான அடிப்படையாக இருக்கிறது. "இவ்வளவு உபத்திரவங்கள் வந்தாலும், எதிர்ப்புகள் எழுந்தாலும், தோல்விகள் நேரிட்டாலும் ஏன் இயேசுவை பின்பற்றுகிறீர்கள்?" என்று அநேகர் கேட்கலாம். உலகம் நம் போராட்டங்களை காணக்கூடும்; ஆனால் நாம் தேவனுடைய அன்பை காண்கிறோம். இயேசு எங்களை நேசித்தார்; அவரையே எங்களுக்காக கொடுத்தார். இயேசுவுக்குள்ளான விசுவாசத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்று எளிமையாக நாம் பதில் கூறலாம். எல்லா உபத்திரவங்களைப் பார்க்கிலும் இந்த அன்பு உறுதியானது; எல்லா வேதனையைக் காட்டிலும் அதிகமானது. கிறிஸ்துவுடன் நம் ஜீவன் தேவனுக்குள் மறைந்திருக்கிறபடியால் சந்தோஷமாக அவருக்கு ஊழியம் செய்கிறோம்; அவரைப் பற்றிக்கொள்கிறோம்.

அவரது தியாகத்தின்மேல் நாம் விசுவாசத்தை வைக்கும்போது தெய்வீகமான ஒன்று நமக்குள் நிகழ்கிறது. அவரது அன்பு நம்மை சுத்திகரிக்கிறது. அவரது இரத்தம் நம்மை குணமாக்குகிறது. அவரது சிலுவை பாவத்திலிருந்தும் எல்லா சாபத்திலிருந்தும் நம்மை விடுவிக்கிறது. அவரது விலையேறப்பெற்ற தியாகத்திலிருந்து புரண்டு வரும் இரட்சிப்பு, விடுதலை, சமாதானம், பெலன் ஆகிய ஆசீர்வாதங்களை நாம் சுதந்தரிக்கிறோம். இன்றைக்கு நீங்கள் அனுபவிக்கும் எல்லா ஆசீர்வாதமும் உங்களது கிரியையால் சம்பாதிக்கப்பட்டதல்ல; இயேசு ஏற்கனவே உங்களுக்காக சம்பாதித்து வைத்ததை விசுவாசத்தின் மூலமாக பெற்றுக் கொண்டுள்ளீர்கள். அதுவே சிலுவையின் வல்லமை. "இயேசுவே, என்னை நேசித்து உம்மையே எனக்காக கொடுப்பதற்காக உமக்கு நன்றி," என்று கூறும்போதெல்லாம் ஏற்கனவே அவர் செய்து முடித்த வேலையின்மேலான உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறீர்கள். அந்த விசுவாசத்தில் நீங்கள் வாழும்போது, முழு விடுதலையை அனுபவிப்பீர்கள். பாவத்தின் கட்டிலிருந்தும், வியாதியின் வேதனையிலிருந்தும், நாளைய தினத்தைக் குறித்த பயத்திலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட்டுள்ளீர்கள். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தினால் நீங்கள் தேவனுக்கு முன்பாக சுத்தமாக்கப்பட்டு, பூரணராக்கப்பட்டுள்ளீர்கள். நம்மைச் சுற்றியுள்ள யாவும் குலுங்கும்போது அவரது தியாகத்தின்மேல் கொண்டிருக்கும் விசுவாசமே நம்மை ஸ்திரமாகக் காக்கிறது. வாழ்க்கை எத்தனை முறை நம்மை விழ தள்ளினாலும் மீண்டும் எழும்பும் தைரியத்தை அதுவே நமக்கு அளிக்கிறது.

ஆனாலும் அன்பானவர்களே, இந்த சத்தியத்தை அறியாதவர்களுக்கு இந்த உலகில் இன்னும் ஏராளமானவை உள்ளன. அவர்கள் தங்கள் விசுவாசத்தின் அடிப்படையுடனே போராடுகிறார்கள். அர்த்தத்தை, சமாதானத்தை, விடுதலையை தவறான இடங்களில் தேடுகிறார்கள். கிறிஸ்துவை அறியாததால் அவர்கள் வாழ்க்கை புயல்களால் எளிதாக அசைக்கப்பட்டுப்போவார்கள். இந்த விலையேறப் பெற்ற சத்தியத்தை நமக்கு வெளிப்படுத்தியதால் தேவனை ஸ்தோத்திரிப்போம். நம்மை நேசித்து நமக்காக தம்மையே கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் வைத்திருக்கும் விசுவாசத்தினாலே நாம் பிழைத்திருக்கிறோம். இந்த விசுவாசத்தில் உறுதியாக இருப்போம். சிலுவைக்காக, நம்மை மீட்ட அவருடைய அன்புக்காக, நமக்குள் அவர் வைத்திருக்கிற ஜீவனுக்காக அனுதினமும் அவரை ஸ்தோத்திரிப்போம். இயேசுவில் கொண்ட விசுவாசத்தால் நீங்கள் பிழைப்பதால், சிலுவையிலிருந்து அவர் தரும் மன்னிப்பு, சுகம், சந்தோஷம், வெற்றி போன்ற எல்லா ஆசீர்வாதங்களையும் நீங்கள் அனுபவிக்க முடியும். உங்கள் இருதயம் சமாதானத்தினால் நிரப்பப்பட்டு, உங்கள் வீடு அவருடைய பாதுகாப்பினால் மூடப்பட்டு, உங்கள் வாழ்க்கை அவர் இரட்சிப்பின் அன்புக்கு சாட்சியாக பிரகாசிப்பதாக. தினமும் அவரை ஸ்தோத்திரிக்கும்போது, உங்கள் மூலமாய் செயல்படும் அவரது உண்மையான வல்லமையை காண்பீர்கள். தரிசிப்பதால் அல்ல; நமக்காக தம்மையே தந்தவர் மேல் வைக்கும் விசுவாசத்தினால் வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வின் இரகசியமாயிருக்கிறது.

ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, என்னை நேசிப்பதற்காக, எனக்காக உம்மையே தந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய சிலுவையிலிருந்து எனக்குள் பாய்ந்து வரும் ஜீவனுக்காக நன்றி செலுத்துகிறேன். உம் மீதான விசுவாசத்தில் அனுதினமும் வாழ்வதற்கு எனக்கு உதவி செய்யும். உம் இரத்தம் என்னை சுத்திகரித்து பூரணமாக்குவதாக. ஆண்டவரே, எல்லா பெலவீனத்திலிருந்தும் பயத்திலிருந்தும் என்னை விடுவித்தருளும். உம் சமாதானத்தாலும் சுகத்தினாலும் பெலத்தினாலும் என்னை நிரப்பியருளும். நீர் செய்த தியாகத்திற்கு என் வாழ்க்கை மகிமையை கொண்டு வருவதாக இருப்பதாக. இந்த விசுவாசத்தில் நான் உறுதியாயிருந்து, தினமும் உம்முடைய ஆசீர்வாதங்களை வெளிப்படுத்தும்படி செய்வீராக. எனக்காக நீர் செய்து முடித்துள்ள யாவற்றுக்காகவும் நன்றி செலுத்தி இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.