பிரியமானவர்களே, உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் தேவனுடைய வார்த்தையை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வேதம், "இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்" (கொலோசெயர் 3:14) என்று கூறுகிறது. இது ஆச்சரியமான சத்தியமாகும். இந்த வசனம், மனுஷீகமல்லாத, தேவனிடமிருந்து வரும் தெய்வீக அன்பை மகிமைப்படுத்துகிறது. வேதம், இந்த அன்பு பூரணசற்குணமுள்ளது என்று கூறுகிறது. நம்மில் விளங்கும் தேவனுடைய இயல்பில் அவருடைய இரக்கம், பொறுமை, தாழ்மை, வல்லமை ஆகிய குணாதிசயங்கள் அனைத்தும் பூரணமாய் விளங்கும் என்று கூறுகிறது. அன்பு இல்லாத நிலையில் மற்ற எந்த செயல்பாடுகளும் முழுமை பெறாது. ஆனால், அன்பு இருந்தால் எல்லாம் பூரணமடையும். மற்ற எல்லா குணங்களையும் ஒருங்கிணைக்கும் அன்பானது இதன் கிரீடமாகும். நம் இயல்பு, நம் மூலமாக செயல்படும் தேவனுடைய வல்லமை, நமக்கான தேவனுடைய வழிகளின் பூரணம் இவை எல்லாமே அன்பினால் மாத்திரமே தூண்டப்படுகின்றன.
நாங்கள் ஜனங்கள் முன்பு நின்று அவர்கள் போராட்டங்களை, பாரங்களை, விண்ணப்பங்களை கேட்கும்போது, வல்லமையான ஒன்று நிகழ்கிறது. பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய அன்பை எங்கள் இருதயங்களுக்கு ஊற்றுகிறார்; அந்த அன்பு செயல்படும்படி எங்களை நெருக்குகிறது. அது, இரக்கத்துடன் கிரியை செய்யும்படி அல்லது பலருக்கு தீர்வுகள் கிடைக்கும்வண்ணம் தேவனுடைய பெரிதான திட்டத்தை திறக்கும்படி எங்களைத் தூண்டுகிறது. சிலவேளைகளில் பரிசுத்த ஆவியின் வல்லமையானது, அற்புதங்களைச் செய்யும்படி, தீர்க்கதரிசன வார்த்தைகளைப் பேசும்படி, இயேசு கிறிஸ்துவின் அன்புக்குள்ளும் இரட்சிப்புக்குள்ளும் ஒரு ஆத்துமாவை வழிநடத்தும்படி வெளிப்படுத்தப்படுகிறது. இவை அனைத்துமே தெய்வீக அன்பினால் பாய்கிறது. மனுஷீக அன்பானது பெரும்பாலும் நிபந்தனைகள் கொண்டதாய், குறுகிய காலம் நீடிப்பதாய் இருக்கிறது; ஆனால், தேவ அன்பு நித்தியமானதாய், சுத்தமானதாய், மனதுருக்கம் நிறைந்ததாய் இருக்கிறது. நம் வாழ்விலும் மற்றவர்கள் வாழ்விலும் தேவனுடைய ஆசீர்வாதங்களை கொண்டு வருவதாய் இந்த அன்பு விளங்குகிறது. ஆகவேதான் வசனம், அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறது. அன்பு இல்லையென்றால் நம்முடைய நல்ல குணம் கூட சுயநலமிக்கதாகிவிடும். ஆனால், அன்பிருந்தால் நம் சுபாவம், பக்திக்குரியதாக, நமக்காக இல்லாமல் பிறருக்காக கிரியை செய்வதாக, கிறிஸ்துவின் இருதயத்தை பிரதிபலிப்பதாக மறுரூபமாக்கப்படும்.
ஆகவே பிரியமானவர்களே, தேவனிடமிருந்து வரும் அன்பையே தேடுவோம். எல்லைக்குட்பட்ட மனுஷீக அன்பை சார்ந்திருக்காமல், தெய்வீக அன்பால் நம் இருதயத்தை நிரப்புவதற்கு பரிசுத்த ஆவிக்கு இடங்கொடுப்போம். இந்த அன்பை நாம் தரித்துக்கொள்ளும்போது, அது மன்னிப்பதற்கு, ஊக்குவிப்பதற்கு, சேவை செய்தவதற்கு, தேவனை மகிமைப்படுத்தும்வண்ணம் ஊழியம் செய்வதற்கு நம்மை பெலப்படுத்தும். தேவனுடைய ராஜ்யத்திற்கென கனிகொடுக்கவும் பிரயாசப்படவும் வைத்து, கிறிஸ்துவுடனான நம் பயணத்தை அது பாதுகாக்கும். தேவன்தாமே நம்மிலும் நம் மூலமாகவும் கிரியை செய்வதால் அன்பு ஒருபோதும் தோற்காது. இன்றைக்கு அன்பைத் தரித்துக்கொள்வோமா? இன்று நம் இருதயத்தைத் திறந்து அவருடைய மனதுருக்கத்தை, தயையை, இரக்கத்தைப் பெற்றுக்கொள்வாமா? அப்படிச் செய்தால், தம் திட்டங்களை நிறைவேற்ற, தமது அற்புதங்களைச் செய்ய, கணக்கற்றோரின் வாழ்க்கையை நம் மூலமாக ஆசீர்வதிப்பதற்கு நம்மை அவர் பயன்படுத்துவார். மெய்யாகவே, அன்பு பூரணத்தின் கட்டாக இருக்கிறது.
ஜெபம்:
பரம தகப்பனே, அன்பைக் குறித்து எனக்குக் கற்றுக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அன்பு பூரணத்தின் கட்டு என்று எனக்குக் காண்பிப்பதற்காக உமக்கு நன்றி. என் உள்ளத்தை உம் தெய்வீக, நிபந்தனையற்ற அன்பினால் நிரப்பும். மனுஷீக சுபாவத்தை தாண்டி பக்தியுள்ள சுபாவத்திற்குள் செல்ல எனக்கு உதவி செய்யும். பரிசுத்த ஆவியின் மூலமாக உம் மனதுருக்கத்தை எனக்குள் ஊற்றும். நான், என்னைக் காட்டிலும் மற்றவர்கள்பேரில் அக்கறை காட்டும்படி நடத்தும். உம்முடைய அன்பு, தயவான காரியங்களை, பலத்த காரியங்களை என் மூலம் செய்வதாக. மற்றவர்களுக்கு அற்புதங்களை, இரட்சிப்பை, நம்பிக்கையை கொண்டு வர என்னை பயன்படுத்தும். இந்த உலகில் என்னை, உம்முடைய பூரண அன்பின் கருவியாக்க வேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.