இன்றைய வாக்குத்தத்தம், "என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்" (யாத்திராகமம் 20:6) என்று கூறுகிறது. ஆச்சரியமான இந்த வாக்குத்தத்தம் ஒவ்வொரு குடும்பத்தையும், தலைமுறையையும் குறித்து தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறது. ஆண்டவர் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிறார்; இன்று அவரது இரக்கத்தின் கரம் அவர்கள் மீது நீட்டப்பட்டுள்ளது.
இயேசு, "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்," (மாற்கு 10:14-16) என்று வரவேற்றார். அவர், அவர்களை அணைத்தார்; தம் கரங்களை அவர்கள்மீது வைத்து ஆசீர்வதித்தார். அதே இயேசு உங்கள் பிள்ளைகளையும் இன்று அரவணைக்க விரும்புகிறார். ஆகவே, அதைரியப்படாதிருங்கள். ஆண்டவர், "சிறுபிள்ளைகளை என்னிடம் கொண்டு வாருங்கள்," என்று கூறுகிறார். உங்கள் பிள்ளைகள் வழிதப்பிப் போனால் அவர்களை அவரது கரங்களில் ஒப்படையுங்கள். அவர், அவர்கள் வாழ்க்கையை மறுரூபமாக்கி, தம் ஜீவனால் நிரப்புவார்; அவர்களுக்கு ஞானத்தையும், மக்கள் கண்களில் தயவையும், ஆவிக்குரிய வளர்ச்சியையும், பரிபூரண கிருபையையும் அருளிச்செய்வார். நம் தேவன் மனதுருக்கமுள்ளவர்; கிருபையினால் நிறைந்தவர். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பிள்ளையையும் அவர் ஒருபோதும் மறந்துபோகிறவரல்ல. உடலில், மனதில் குறைகளோடு போராடும் சிறுபிள்ளைகளையும் ஆண்டவர் நினைவுகூருகிறார். மூளையில் பெலவீனப்பட்ட, ஞாபக சக்தி குறைபாடுடைய, வளர்ச்சியில் சிக்கலுள்ள குழந்தைகள்பேரிலும் அவர் நினைவாயிருக்கிறார். அவரது சுகமளிக்கும் கரம் இன்று அவர்கள்மேல் அமர்கிறது. ஒவ்வொரு சிறுபிள்ளையையும் ஜீவன் அளிக்கும் தம் வல்லமையால் சீர்ப்படுத்த, பெலப்படுத்த, ஆசீர்வதிக்க ஆண்டவர் வல்லவராயிருக்கிறார்.
கர்த்தர் தம் பிள்ளைகளை ஆசீர்வதிக்க விரும்புகிறார்; தம்மிடம் அன்புகூருகிறவர்களுக்கு, தம் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு ஆயிரம் தலைமுறை வரைக்கும் அவர் இரக்கம் செய்கிறார் என்று வேதம் கூறுகிறது (யாத்திராகமம் 20:6). அவரது அன்பின் உடன்படிக்கை, ஒரு தலைமுறையுடன் நின்றுவிடுவதில்லை. அது உங்கள் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைகள் என்று தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே, தைரியமாயிருங்கள். உங்கள் குடும்பத்தின்மேல் அவரது இரக்கம் நிலைத்திருக்கும். கர்த்தர் தம் ஜனங்களை நினைவுகூர்வதாகவும், அவர்களை ஆசீர்வதிப்பதாகவும், அவர்களையும் அவர்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவதாகவும் வாக்குக்கொடுக்கிறார் (சங்கீதம் 115:12-14). உங்கள் பிள்ளைகள் ஞானத்தில், அறிவில், தயவில், தேவ கிருபையில் வளரும்படி அவர் செய்வார். பயப்படாதிருங்கள். கர்த்தர்தாமே அவர்களை நிலைப்படுத்தி, வாழ்வில் செழிக்கப்பண்ணுவார்.
கர்த்தர் கொடுக்கிற கட்டளைகளுக்கும் கற்பனைகளுக்கும் கீழ்ப்படிந்தால் நாமும் நம் பிள்ளைகளும் செழிப்பதோடு, அவரது ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கலாம் என்று வேதம் கூறுகிறது (உபாகமம் 4:40). பெற்றோர் தேவனுடைய வழிகளில் உண்மையாக நடந்தால், கர்த்தர் அவர்கள் பிள்ளைகளும் அதே வழியில் செல்லுவதற்கு உதவுவார். அவர்களைச் செழிக்கப்பண்ணுவதோடு, நன்மையினால் நிரப்புவார்; கனத்துக்குரிய இடங்களுக்கு உயர்த்துவார்.
ஒவ்வொரு பிள்ளையைக் குறித்தும் தேவன் விசேஷித்த நோக்கத்தை வைத்திருக்கிறார். சாலொமோன் பிறந்த பிறகு, கர்த்தர் அவன்பேரில் அன்பாயிருந்தார்; அவனைக் குறித்து தெய்வீக திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதைக் காட்டும் வண்ணம் தீர்க்கதரிசி வாயிலாக அவனுக்கு விசேஷித்த பெயர் ஒன்றையும் கொடுத்தார் (2 சாமுவேல் 12:24,25). அவ்வண்ணமே தேவன் உங்கள் பிள்ளைகளைக் குறித்தும் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். அவர், அவர்களை தனிப்பட்டவிதத்தில் அறிந்திருக்கிறார்; பெயர் சொல்லி அழைக்கிறார்; தம் பூரண திட்டத்தின்படியே அவர்களை நிலைப்படுத்துவார். சாலொமோனை மகா ராஜாவாக உயர்த்தியபடி, உங்கள் பிள்ளைகளையும் செல்வாக்கும் கனமுமுள்ள இடங்களுக்கு உயர்த்த அவர் வல்லவராயிருக்கிறார்.
உங்கள் பிள்ளைகள் தேசத்தில் பெலத்திருப்பார்கள். அவர்கள் மிகுந்த சமாதானத்தை அனுபவிப்பார்கள்; தேவ தயவை பெற்றுக்கொள்வார்கள்; அவருடைய பாக்கியங்களால் நிரம்புவார்கள். பெற்றோராக நாம் அவர்களுக்கு முன்பாக நீதியாக வாழ்ந்து பக்தியுள்ள முன்மாதிரியை உருவாக்கவேண்டும். நம் வார்த்தைகள், செயல்கள், இருதயத்தின் தியானம் கூட ஆண்டவருடைய பார்வைக்குப் பிரியமாய் இருக்கவேண்டும்; அப்போது நம் பிள்ளைகளும் நம் மாதிரியை பின்பற்றி தேவனுடைய வழிகளில் உண்மையாய் நடப்பார்கள். அப்போது தேவனின் இரக்கத்தையும், தயவையும், வரும் சந்ததிகளுக்குமான ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள். ஆண்டவர்தாமே உங்கள் பிள்ளைகளை அதிகமாய் ஆசீர்வதித்து, தம் மகிமையில் அவர்களை நிலைப்படுத்துவாராக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம் உண்மைக்காகவும் மாறாத கிருபைக்காகவும் ஸ்தோத்திரிக்கிறேன். என் பிள்ளைகளை ஞானம், அறிவு, தயவு, பரிபூரண கிருபையால் ஆசீர்வதித்திடும். பெலவீனமாக, வியாதிப்பட்டு, படிப்பதற்கு தத்தளிக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் தொட்டு, சீர்ப்படுத்தி, குணமாக்குவீராக. அவர்கள் உள்ளங்களை அன்பு கூரும்படியும் உமக்குப் பயப்படும்படிக்கும் மறுரூபப்படுத்துவீராக. அவர்கள் ஞானத்திலும் கீழ்ப்படிதலிலும் பக்தியுள்ள சுபாவத்திலும் வளர உதவும். அவர்கள் உம் வழிகளில் நடந்து உம் நோக்கத்தை நிறைவேற்றுவார்களாக. எங்கள் குடும்பத்தின்மேல் உம் சமாதானமும் பாதுகாப்பும் தயவும் எப்போதும் தங்கியிருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


