அன்பானவர்களே, "நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது" (1 தெசலோனிக்கேயர் 2:13) என்று வேதம் சொல்லுகிறது. தேவனின் வார்த்தை கிரியை செய்யும் என்று நீங்கள் விசுவாசிப்பதால் அது உங்களுக்குள் வல்லமையாய் செயல்படும். தேவன் உங்களுக்குக் கொடுக்கும் வார்த்தையை விசுவாசியுங்கள். இன்றைக்கு உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தேவ வார்த்தையின்படி, தம்முடைய வாக்குத்தத்தத்தின்படி தேவன் கிரியை செய்வதைக் காண்பீர்கள். தேவனுடைய வார்த்தை எது? இயேசுவே அந்த வார்த்தையாயிருக்கிறார். "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது" (யோவான் 1:1) என்று வேதம் கூறுகிறது. அந்த வார்த்தை இயேசு கிறிஸ்துவாயிருக்கிறது. ஆம், இயேசு உங்கள் உள்ளத்துக்குள் வரும்போது அந்த வார்த்தையும் உங்களுக்குள் வந்து கிரியை செய்யும். இயேசுவாகிய வார்த்தை, உங்களுக்குள் கிரியை செய்யும்போது, எல்லாமும் தேவ வல்லமைக்கு ஏற்றவண்ணம் நடக்கும். ஆகவே, பயப்படாதிருங்கள்.

தேவனுடைய வார்த்தை நாம் கேட்பதெல்லாவற்றையும் அருளிச்செய்கிறது. இயேசு, "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்," என்று கூறியிருக்கிறார்(யோவான் 15:7). நீங்கள் எந்த அற்புதத்தை விரும்பினாலும், அது அருளப்படும். எது வேண்டும் என்று கேட்டாலும் கொடுக்கப்படும். எவை அகற்றப்படவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவை அகற்றப்படும். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. உங்களுக்குள் இருக்கும் வார்த்தையாகிய இயேசுவுக்கு வல்லமை உண்டு. தேவனுடைய வார்த்தைக்கு சிருஷ்டிக்கும் வல்லமை இருக்கிறது (ஏசாயா 43:1; ரோமர் 4:17). இல்லாதவற்றை அவர் இருக்கிறவைகளைப்போல அழைப்பார். தேவனுடைய வார்த்தை வரும்போது, அது உங்கள் வாழ்வில் தேவன் விரும்புகிறவற்றை உண்டாக்கும்.

ஒரு பெண்மணியின் ஒரே மகள் கடும் காய்ச்சலினால் மரிக்கும் தறுவாயில் கிடந்தாள். உதவி செய்ய அவர்களுக்கு கணவரும் இல்லை; மிகுந்த வறுமையில் இருந்தார்கள். மருத்துவர் தவறான ஊசி போட்டதினால், காய்ச்சல் அதிகமாகி, குழந்தையின் கண்கள் காய்ந்த தக்காளிபோல் ஆகிவிட்டன. அவள் பார்வையை இழந்துபோனாள். மிகுந்த வேதனையில் மரிக்கும் தறுவாயில் இருந்தாள். அந்தப் பெண்மணிக்கு, "பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது" (ஏசாயா 43:1,2) என்ற வார்த்தை வந்தபோது, தேவ வல்லமையும் கடந்து வந்தது. அந்தச் சிறுமி, "அம்மா," என்று அழைத்தாள். காய்ச்சல் குணமானது. அவள் ஜீவன் காப்பாற்றப்பட்டது. ஆம், தேவனுடைய வார்த்தை நம்மை சுத்திகரிக்கிறது; புது ஜீவனை அளிக்கிறது; மிகுந்த ஆறுதலை தருகிறது (1 தெசலோனிக்கேயர் 4:7; எபிரெயர் 4:12). தேவனுடைய வார்த்தை உங்களுக்குள் கிரியை செய்கிறது. இந்த வார்த்தையை சுமந்து செல்லுங்கள்; அதை விசுவாசியுங்கள்; உங்கள் வாழ்வில் தேவனுடைய மகத்தான கிரியைகளைக் காண்பீர்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, உம் ஜீவனுள்ள வார்த்தை எனக்குள் கிரியை செய்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் வார்த்தை அனைத்தையும் விசுவாசிக்கிறேன். விலையேறப்பெற்ற வார்த்தையாகிய இயேசு என்னுள்ளத்திற்குள் வாசம்பண்ணட்டும். எல்லா பயத்தையும் அகற்றி, உம் வார்த்தைகளை நம்புவதற்கான தெய்வீக விசுவாசத்தினால் என்னை நிரப்பிடும். ஆண்டவரே, என்னில் குறைவாக இருப்பவற்றை உம் வல்லமையுள்ள வார்த்தையால் சிருஷ்டிக்க உம்மால் முடியும் என்று நான் முற்றிலும் விசுவாசிக்கிறேன். தயவாய் என்னை சுத்திகரியும்; ஜீவனை அருளும் உம் வார்த்தையை எனக்குள் புதுப்பித்தருளும். உம் மகத்துவமான கிரியைகள் எனக்குள் காணப்படட்டும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.