அன்பானவர்களே, இன்று உங்களோடு தேவ வார்த்தையை தியானிப்பதில் மகிழ்ச்சி. இன்று தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசத்தோடு பெற்றுக்கொள்வோம். வேதம், "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்" (நீதிமொழிகள் 13:12) என்று கூறுகிறது.

ஒரு சகோதரி தன்னுடைய சாட்சியை பகிர்ந்துகொள்ளும்படி எழுதியிருந்தார்கள். வங்கியில் பணிபுரிந்த அவர்களுக்கு கர்நாடகாவில் திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கையை சந்தோஷத்தோடு அவர்கள் ஆரம்பித்தார்கள். தம்பதியர் மகிழ்ச்சியாக இணைந்து வாழ ஆரம்பித்து, ஆறே மாதத்தில் எல்லாமும் மாறின. அவர்கள் கணவர் திடீரென அவர்களை திட்டவும், அடிக்கவும் தொடங்கினார். இனிமையான அவர்கள் இல்லற வாழ்க்கை கொடுமையான ஒன்றாக மாறிப்போனது. அவர்கள் நம்பிக்கை, கனவுகள் எல்லாம் மங்கிப்போயின. என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஓராண்டுக்குள் கணவர் அவர்களை விட்டுச் சென்று விட்டார். இரு குடும்பத்தினரும் விவாகரத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். வேதனையான அந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் நம்பிக்கையை விட மறுத்தார்கள். இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார்கள். என் அப்பாவுக்கு கடிதம் எழுதி தன் பாரத்தை பகிர்ந்துகொண்டார்கள். என் அப்பா அவர்களுக்காக ஜெபித்ததுடன், "தேவன் உங்கள் வாழ்க்கையில் யாவற்றையும் செய்து முடிப்பார்," என்று பதிலும் எழுதினார். அவர்கள் அந்த வாக்குத்தத்தத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டார்கள். நம்பிக்கையற்ற சூழ்நிலையின் நடுவில் அது அவர்களுக்கு விசுவாசத்தை அளித்தது. விவாகரத்து நடைமுறைக்காக அவர்கள் ஆந்திர பிரதேசத்திலிருக்கும் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். ஆனால், ஆண்டவர் ஓர் அற்புதத்தைச் செய்தார். எதிர்பாராதவிதமாக அவர்கள் கணவர் அவர்களோடு தொடர்பு கொண்டார். மட்டுமல்ல, அவரே ஆந்திர பிரதேசத்துக்கு வந்து, "உன்னை என்னுடன் கர்நாடகாவுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்," என்று கூறினார். தேவனுடைய அற்புதமான கிரியை அது. ஆண்டவர், அவர்கள் இல்லறத்தை மீட்டு,  உறவை சுமூகமாக்கினார்; அவர்கள் வீட்டை மறுபடியும் மகிழ்ச்சியால் நிரப்பினார். ஓராண்டு கடந்ததும், தேவன் தங்களுக்கு அழகிய மகளைக் கொடுத்திருப்பதாக சந்தோஷத்துடன் சாட்சி கூறினார்கள். ஆண்டவர் எவ்வளவு பெரிய அற்புதத்தைச் செய்தார் பாருங்கள்!

அன்பானவர்களே, உங்கள் ஏக்கம் நிறைவேறாமல் இருப்பதற்கு ஆண்டவர் அனுமதிக்கமாட்டார். நீங்கள் நெடுங்காலம் காத்திருக்கலாம்; உங்கள் குடும்பத்துக்காக, உங்கள் திருமணத்துக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக, உங்கள் சுகத்துக்காக, உங்கள் வேலைக்காக, உங்கள் எதிர்காலத்துக்காக கண்ணீரோடு ஜெபித்துக்கொண்டிருக்கலாம். உங்கள் இருதயத்தின் விருப்பங்களை தம் பரிபூரண சித்தத்தின்படி நிறைவேற்றுவதாக ஆண்டவர் இன்று உறுதியளிக்கிறார். அவர் உங்கள் வாழ்க்கையை ஜீவ விருட்சத்தைப்போல் செழிக்கப்பண்ணுவார். உங்கள் துக்கம் சந்தோஷமாகவும், உங்கள் காத்திருத்தல், சாட்சியாகவும் மாறும். நீங்கள் தேவனுடைய பலத்த அற்புதத்தைக் காண்பீர்கள். ஆண்டவர்தாமே உங்கள் இருதயத்தின் பக்தியான எல்லா வாஞ்சைகளையும் நிறைவேற்றுவாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் பரிபூரண சித்தத்தின்படி எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுகிற தேவனாக நீர் இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் ஜெபங்களுக்கு பதில் தாமதிக்கிறபடியால் உள்ளம் சோர்ந்துபோகும்போது, புது நம்பிக்கையாலும், திடமான விசுவாசத்தாலும் என்னை நிரப்பும். உம் பலத்த கரத்தை நீட்டி என் வாழ்வில் அற்புதங்களைச் செய்வீராக. முறிந்த உறவுகளைச் சீர்ப்படுத்தும்; எல்லா வியாதிகளையும் சுகப்படுத்தும்; மூடப்பட்ட வாசல்களைத் திறந்திடும்; எல்லா ஏமாற்றங்களையும் பயத்தையும் அகற்றிடும். என் வாழ்க்கை, ஜீவ விருட்சத்தைப்போல் உம் சமுகத்தில் செழிப்பதாக; உம் மகிமைக்கென்று கனி கொடுப்பதாக. உம் வேளையில் நம்பிக்கை வைக்கவும், உமக்காக காத்திருப்பதால் உள்ளம் சோர்ந்துபோகாதிருக்கவும் உதவும். உம் சந்தோஷம் எல்லா துக்கத்தையும் மாற்றுவதாக; என் வாழ்விலும் என் குடும்பத்திலும் உம் வாக்குத்தத்தங்கள் நிறைவேறவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.