அன்பானவர்களே, இந்த உலகில் தேவனுடைய தயவுதான் நமக்கு மிகவும் தேவையாகும். "நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்" (லேவியராகமம் 26:9) என்று கர்த்தர் வாக்குக்கொடுப்பதே இன்றைய வாக்குத்தத்த வசனமாகும். தேவனுடைய தயவு என்பது அவரது இரக்கம், கருணை மற்றும் கிருபையாகும். கர்த்தர், உங்கள் வாழ்வில் தம் தயவை பெருகப்பண்ணப்போகிறார். அது நம் கிரியைகளையோ, விசுவாசத்தையோ அல்லது பரிசுத்தத்தையோ பொறுத்தது அல்ல; நம்முடைய குறைகளாலும் தீர்மானிக்கப்படுவதல்ல. கர்த்தருடைய இரக்கத்தை நாம் தேடும்போது, அவரது தெய்வீக தயவு நம்மேல் இறங்கும்போது, நம் வாழ்வில் செழிப்பு, ஆசீர்வாதம், பெருக்கம், சுதந்திரம் ஆகியவையும் வந்து சேர்கின்றன.

கர்த்தர் உங்களோடு உடன்படிக்கையை நிலைப்படுத்தி, தம் தயவை  உறுதிப்படுத்துவார். இன்று அவர் தம் கிருபையின் வாசலை உங்களுக்குத் திறக்கிறார். ஒருவேளை, நீங்கள் நெடுங்காலமாக அழுதுகொண்டிருக்கலாம்; குறிப்பிட்ட விஷயத்தில் ஏன் அவர் இடைப்படவில்லை; தயவு காண்பிக்கவில்லை என்று திகைத்துக்கொண்டிருக்கலாம். அவரது வல்லமையை அனுபவிக்காததால், உபத்திரவத்தில் இருக்கலாம். ஆனால் இப்போது, கர்த்தர் அவரது கிருபையான தயவை அனுபவிப்பதற்கு வழியை உங்களுக்குத் திறக்கிறார். அவர், உங்கள் வாழ்வில் தேவையானவற்றை செய்துமுடிக்கும்படி தம் கண்களை உங்கள்மேல் வைத்திருக்கிறார். அவர், நீங்கள் பலன் அளிக்கும்படியும், பெருகும்படியும் பண்ணுவார். இன்று முதல் இயேசுவின் நாமத்தில் இந்த ஆசீர்வாதத்தை அனுபவிப்பீர்கள் என்று கூறுகிறேன்.

அன்பானவர்களே, கர்த்தரின் தயவை நாம் எப்படி அனுபவிக்க முடியும்? அது கீழ்ப்படிதலினால் வருகிறது. இயேசுவைப் பாருங்கள். இயேசு, நாசரேத்தூருக்கு தன் பெற்றோருடன் சென்று, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார் என்று வேதம் கூறுகிறது (லூக்கா 2:51). ஆகவே, இயேசு ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும் மனுஷர் தயவிலும் விருத்தியடைந்தார் (லூக்கா 2:52). இயேசு விருத்தியடைந்ததுபோலவே, கர்த்தர் உங்களையும் பலனளிக்கவும், பெருகவும் பண்ணுவார். இந்த ஆசீர்வாதத்தை அனுபவிப்பதற்கான வழிகளில் ஒன்று கீழ்ப்படிதலாகும். உங்களை வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் காண்பிக்கிறதை செய்திடுங்கள்; பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலுக்குக் கீழ்ப்படிந்து நடந்திடுங்கள். உங்கள் பெற்றோருக்கும் கீழ்ப்படியுங்கள். கர்த்தர் உங்களுக்குத் தம் தயவை காண்பிப்பார். அவர் உங்களை கிருபையுடன் நோக்கிப் பார்த்து, பலனளிக்கவும், பெருகவும் பண்ணுவார். இயேசு விருத்தியடைந்ததுபோலவே, நீங்களும் வர்த்திப்பீர்கள். இன்றைக்கு ஆண்டவர் இந்த ஆசீர்வாதத்தை உங்களுக்கு அருளிச்செய்வாராக. பலன் அளிப்பதற்கும், பலுகிப் பெருகுவதற்கும் தடையாக இருக்கும் எல்லாவற்றையும் அவர் அகற்றிப்போடுவார்.

யாக்கோபைப் பாருங்கள். அவன் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வெறுங்கையாய் பயணித்தான். ஆனாலும், அந்த இக்கட்டான காலங்களிலும் அவன் உபத்திரவங்களை எதிர்கொண்டான். அவன் மாமனும், மனைவிமாரின் சகோதரரும் அவனை எதிர்த்தனர்; அநியாயமாய் நடத்தப்பட்டான். அவன் மாமன், அவனைக் கண்டுகொள்ளாமல், பலமுறை கூலியை மாற்றினான். ஆனாலும் கர்த்தர் யாக்கோபுக்கு உண்மையாயிருந்தார். எல்லா சவால்களினூடாகவும், அநியாயமான ஒவ்வொரு சூழ்நிலையிலும் கர்த்தர் அவனை கண்ணோக்கி, அவன் செய்த யாவற்றையும் வாய்க்கப்பண்ணினார்.
அவன் மாமன், இதுதான் உன் கூலியாயிருக்கும் என்று கூறியபோதெல்லாம், கர்த்தர், யாக்கோபுக்கு வெற்றியை, முன்னேற்றத்தை, பெருக்கத்தை அளித்து அவன் பலன் அளிக்கும்படியும், பெருகும்படியும் செய்தார். அவனது கூலி மாற்றப்பட்டு, குறிப்பிட்ட ஆடு மாத்திரமே அவனுக்குச் சொந்தம் என்று கூறப்பட்டபோது, கர்த்தர் அவ்வகையான ஆடுகளைப் பெருகப்பண்ணினார். அநியாயமாக நடத்தப்பட்டபோதிலும் கர்த்தர், அவன் ஆசீர்வாதங்களைப் பெருகப்பண்ணினார். அவ்வாறே, ஆண்டவர் உங்கள் வாழ்க்கையிலும் செயல்படுவார். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்தினாலும், உங்கள் சூழ்நிலை எத்தனை முறை மாறினாலும், கர்த்தரால் உங்களைச் செழிக்கப்பண்ணி, பெருகச் செய்ய முடியும்.

1985ம் ஆண்டு ஆண்டவர் என் தந்தைக்கு காருண்யா திட்டத்தை அளித்தபோது, அவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. சோதனையின் காலத்தை அவர் கடந்து போனார். அதன்பிறகு என் தங்கை ஏஞ்சல் விபத்தில் மரித்துப்போனாள். எங்கள் குடும்பம் கடும் நெருக்கடிக்குள்ளாகியது. இந்த இக்கட்டான நேரத்தில் சிலர் எங்களைப் பற்றி பொய்யைப் பரப்பினார்கள். பத்திரிகை ஒன்றில் எங்களைப் பற்றி அவதூறாக எழுதினர். "ஒருவரும் அவர்களை ஆதரிக்காமல் இருப்போம்; அப்போது இந்தத் திட்டம் ஈடேறாது," என்பதுபோன்று எழுதினார்கள்.

ஆனால், அந்த இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தர் எங்களுக்குத் தரிசனமாகி, "எந்த அளவு அதிகமாக இந்த மக்கள் உங்களை தவறாக சபிக்கிறார்களோ அந்த அளவு நான் உங்களை ஆசீர்வதித்து, பெருகப்பண்ணுவேன். நான் உங்களை பலுகிப்பெருகப்பண்ணுவேன்," என்று கூறினார். அவர் எங்களிடம், "அவர்களைப் பாராதிருங்கள். என்னை மாத்திரமே நோக்கிப் பாருங்கள்," என்று கூறினார்.

ஆகவே, கர்த்தரின் கிருபையே எங்களை இந்நாள் வரைக்கும் தாங்குகிறது. எந்த எதிர்ப்பு வந்தாலும், பொய்யான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், எங்களுக்கு விரோதமாக உண்மைக்கு மாறானவை கூறப்பட்டாலும் நாங்கள் தொடர்ந்து கர்த்தரின் சித்தத்தையே செய்கிறோம். அவரது கிருபையால், கர்த்தர் எங்களைப் பெருகப்பண்ணியிருக்கிறார்; பலன் கொடுக்கவும், வர்த்திக்கவும், ஊழியத்தின் வாயிலாக கோடிக்கணக்கான மக்களை தொடவும் செய்திருக்கிறார். அவர் உங்களுக்கும் அப்படியே செய்வார். உங்கள் குடும்பத்தை பெருகவும் செழிக்கவும் பண்ணுவார். ஆகவே, தைரியமாயிருங்கள்; கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்திடுங்கள்.

ஜெபம்:
அன்பு பரம தகப்பனே, உம் தயவாலும் இரக்கத்தினாலும் என்னை நோக்கிப் பாரும். உம் வாக்குத்தத்தத்தின்படியே, நான் பலன் கொடுக்கும்படியும் பெருகும்படியும் செய்யும். உமக்கும், உம் வார்த்தைக்கும், என் பெற்றோருக்கும், எனக்கு வழிகாட்டுகிறவர்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்க உதவும். முன்னேறவிடாமல் என்னை தடுக்கும் எல்லா தடையையும் அகற்றும்; எல்லா எதிர்ப்பையும் உம் மகிமைக்கான வாய்ப்பாக மாற்றும். என் குடும்பத்தை, என் வேலையை, நீர் எங்களுக்குத் தந்திருக்கும் ஊழியத்தை ஆசீர்வதித்தருளும். யாக்கோபை தாங்கியதுபோல, இக்கட்டான நேரங்களில் என்னை பெலப்படுத்தும்; உபத்திரவத்தின் மத்தியிலும் ஊழியத்தை ஆசீர்வதித்தருளும். என்னை திடமாக ஸ்தாபித்தருளும்; பிறருக்கு ஆசீர்வாதமாக விளங்கப்பண்ணும்; அநேகருக்கு உம் நன்மையை கொண்டு வருவதற்கு என் வாழ்க்கையைப் பயன்படுத்தியருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.