அன்பானவர்களே, நாம் அனைவரும் தேவனுக்கு முன்பாக சரியானவற்றை செய்ய விருப்பப்படுகிறோம். நாம் ஒருபோதும் தவற்றை, பாவத்திற்கு வழிநடத்தும் காரியங்களைச் செய்ய விரும்புவதில்லை. ஆனாலும் வேதம், "உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்" (பிரசங்கி 3:11) என்று கூறுகிறது. இதன் காரணமாக நம் உள்ளங்கள் அடிக்கடி உலக ஆசைகள்பேரில், இன்பங்கள்பேரில் இழுக்கப்படுகின்றன. அப்போஸ்தலனாகிய பவுல், "நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்" (ரோமர் 7:19) என்று அறிக்கை பண்ணுகிறார். ஒவ்வொரு மனுஷனுக்கும் இருக்கும் போராட்டம் இதுவே! மாம்சம் நம்மை தவற்றுக்கு நேராக இழுக்கும்; ஆனால் தேவ ஆவியானவர், சரியானவற்றை செய்ய நம்மை அழைக்கிறார். இதற்காகவே நாம் ஆண்டவர் அனுதினமும் தேட வேண்டும். வேதம், "துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்" (நீதிமொழிகள் 28:5) என்று கூறுகிறது. நாம் தேவனை முழு இருதயத்தோடும் தேடும்போது, அவர் எது சரியானது என்பதை அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் அதைச் செய்வதற்கான பெலனையும் அளிப்பார்.

இயேசு, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:33) என்று கூறியுள்ளார். தேவன், தூரமானவர் இல்லை; அவரை கூப்பிடுகிறவர்களுக்கு சமீபமாயிருக்கிறார் (அப்போஸ்தலர் 17:27). "ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும். என்னை உம் ஆவியால் நிரப்பும். உமது சுபாவத்தை தந்தருளும்," என்று நீங்கள் கூறினால், அவர் உங்களுக்கு சமீபமாக வருவார்; தம் பெலனை தருவார். ஆகவேதான் சங்கீதக்காரன், "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை" (சங்கீதம் 16:8) என்று கூறுகிறான். கர்த்தர் உங்களுக்கு முன்பாக இருக்கும்போது, நீங்கள் ஒருபோதும் தவற்றை செய்யும்படி நகர்த்தப்படுவதில்லை. நீங்கள் சத்தியத்திலும் சுத்தத்திலும் நடப்பீர்கள். கர்த்தரை தேடுகிறதால் உங்கள் உள்ளம் மென்மையானதாகவும், சரியானவற்றை அறிவதற்கு உணர்வுள்ளதாகவும் இருக்கும். அனுதினமும் ஜெபித்து அவரை நோக்கும்போது அவரது சுபாவம் உங்களுக்குள் வளரும். அவரது ஆவியானவர் உங்கள் எண்ணங்களை வழிநடத்துவார்; அவரது சமுகம் உங்கள் பெலனாகும்.

கடந்த காலத்தில் நீங்கள் தவறுகளை செய்திருந்தாலும் தேவன் கிருபையாயிருக்கிறார். வேதம், "என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்" (2 நாளாகமம் 7:14) என்று கூறுகிறது. நீங்கள் அவருடைய முகத்தை உண்மையாய் தேடுவீர்களானால், அவர் மன்னிப்பார்; சுத்திகரிப்பார்; உங்கள் வாழ்க்கையில், குடும்பத்தில், வேலையில் க்ஷேமத்தைக் கொடுப்பார். வேதம், "கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" (சங்கீதம் 34:10) என்று வாக்குக்கொடுக்கிறது. ஈசாக்குக்கு செய்ததுபோல, தேவன் நீங்கள் செய்கிற யாவற்றிலும் நூறு மடங்கு பலன் கிடைக்கும்படி செய்வார் (ஆதியாகமம் 26:12,13). எவ்வளவு அதிகமாக அவரைத் தேடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாய் எது சரியென்பதை அறிந்துகொள்வீர்கள்; அதை எளிதாகச் செய்வீர்கள். ஆண்டவர்தாமே உங்களை தம் ஆவியினால் நிரப்பி, தம் சத்தியத்தில் வழிநடத்தி, நீங்கள் செய்கிற யாவற்றையும் பரிபூரணமாக ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:
அன்பு பரம தகப்பனே, சரியானதை செய்வதற்கான விருப்பத்தை எனக்குக் கொடுப்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இந்த உலகத்தின் சோதனைகளை மேற்கொள்வதற்கு எனக்கு உதவும். ஆண்டவரே, என்னை உம் ஆவியாலும் சுபாவத்தாலும் நிரப்பும். எடுக்கும் எல்லா முடிவுகளிலும் உம்மை தேடுவதற்குக் கற்றுக்கொடுத்தருளும். நான் தவறு செய்த தருணங்களுக்காக என்னை மன்னித்தருளும். என் இருதயத்தை சுத்திகரித்து உமக்கு முன்பாக சுத்தவானாக்கியருளும் / சுத்தமான பெண்மணியாக்கியருளும். என் குடும்பத்தை, வேலையை, என் ஆத்துமாவை குணப்படுத்தும். உம் வழிகளை நான் பின்பற்றுவதால் நூறு மடங்காய் வர்த்திக்கப்பண்ணும். தினமும் உம் சமுகத்தில் மகிழ்ந்திருக்கப்பண்ணவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.