அன்பானவர்களே, இன்று நாம் தேவனை ஆவலுடன் தேட போகிறோம். உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்மை ஆசீர்வதிக்கும்படி கேட்கப்போகிறோம். அவர் நிச்சயமாக ஆசீர்வதிப்பார். சங்கீதம் 34:8-ல் வேதம் கூறுகிறது, "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்" என்று.
என்னுடைய சிறுவயதில், நான் என் உறவினர் வீட்டிலிருந்து படித்துக்கொண்டிருந்தேன். அந்த நாட்களில் எனக்கு நூடுல்ஸ் சாப்பிடவே பிடிக்காது. ஆனால், எனக்கு தெரியாமல் அவர்கள் ஒருநாள், அந்த நூடுல்ஸை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி பிரைட்ரைசை போல மாற்றி எனக்கு கொடுத்தார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் நன்றாக ருசித்து சாப்பிட்டுவிட்டு, "உங்கள் பிரைட்ரைஸ் மிகவும் ருசியாக உள்ளது" என்றேன். அப்போதுதான் அவர்கள் கூறினார்கள், "நீ சாப்பிட்டது பிரைட்ரைஸ் அல்ல, நூடுல்ஸ்" என்று. பாருங்கள், நாம் ஒன்றை ருசி பார்ப்பதற்கு முன்பாக, அது வேண்டாம் என்று சொல்லக்கூடாது.
ஆம், நாமும் சில நேரம் பிறருடைய கருத்துக்களை வைத்தோ அல்லது பிறர் சொல்வதைக் கேட்டோ தேவனை பற்றி வெவ்வேறு அபிப்ராயங்கள் கொண்டிருப்போம். ஆனால், தேவன் எவ்வளவு நல்லவர் என்று அவரை ருசித்துப்பார்க்க வேண்டும்.. நமது வாலிபர் முகாம் ஒன்றில் தேவனை நம்பாத ஒரு சிறுவன் வந்திருந்தான். அவன் கூறினான், "நான் இதற்கு முன்பாக தேவனை நம்பாததினால் வேடிக்கையான காரியங்களை செய்து, ஆடம்பரமாக வாழ்ந்தேன். ஆனால், ஜெப வேளையில் அவனை அறியாமலேயே என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதுவரை நான் உணர்ந்திராத ஓர் புதிய உணர்வு என் இருதயத்தை நிரப்பியது. நான் இன்று நான் தேவ அன்பை உணர்ந்துகொண்டேன் " என்று. நண்பர்களே, இயேசு மிகவும் நல்லவர். அவர் நல்லவர் என்பதை நீங்கள் ருசித்துப்பாருங்கள். ஒருபோதும் நீங்கள் அவரை விடமாட்டீர்கள். இந்த அருமையான இயேசுவை இன்று நீங்கள் பெற்றுக்கொள்வீர்களா?
ஜெபம்:
அன்பின் தேவனே, நான் என் உள்ளத்தைத் திறந்து, உம்மை ஆவலுடன் தேடி, நீர் மனதார எனக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வந்துள்ளேன். நீர் நல்லவர் என்பதை ருசித்துப்பார்க்க நீர் என்னை அழைக்கிறீர். நான் நானாகவே அந்த நன்மையை உணர விரும்புகிறேன். நான் சில நேரம் பிறர் கூறுவதைக் கேட்டு, நீர் யார் என்பதை உணராமல் சந்தேகங்களால் உம்மை மறைத்துவிடுகிறேன். ஆனால், இப்பொது நான் நானாகவே உம்மை அறிந்துக்கொள்ள விரும்புகிறேன். பிறர் கூறும் கதைகளை வைத்து அல்ல. நான் தனிப்பட்ட முறையில் உம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன். இயேசுவே, உமக்காக நான் என் இதயத்தை திறக்கிறேன். நீர் என் உள்ளத்தில் வந்து, உம் அன்பை எனக்கு காண்பியும். உம்முடைய பிரசன்னத்தின் இனிமையை நான் உணர எனக்கு உதவி செய்யும். உம்முடைய இனிமையான பிரசன்னத்தின் சுவை, என் வாழ்வை மாற்ற போதுமானது. இயேசுவே, உம்மை என் நண்பராக, என் இரட்சகராக நான் பெற்றுக்கொள்ளுகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.