தேவன், "உன் நெடுங்கால விருப்பங்கள் நிறைவேற்றப்படும்," என்று கூறுகிறார். அன்பானவர்களே, நீங்கள் நெடுங்காலமாய் காத்திருக்கலாம்; ஆனால், தேவன் உங்கள் இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவார்; அது ஜீவவிருட்சம் போலிருக்கும் என்று வேதம் கூறுகிறது (நீதிமொழிகள் 13:12). இது தேவன் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தமாகும். தேவன், ஏதேன் தோட்டத்தைப் படைத்தபோது, அவர், நன்மை தீமை அறியக்கூடிய மரம், ஜீவ விருட்சம் ஆகிய இரண்டு மரங்களை அங்கே வைத்தார். ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியக்கூடிய மரத்தின் கனியை புசித்து பாவம் செய்தனர்; ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டனர்; ஆகவே, நித்திய ஜீவனை கொடுக்கக்கூடிய மரத்தின் கனியை அவர்கள் புசிக்கவில்லை. பாவம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆகவே, தேவன் அவர்களை ஜீவவிருட்சத்திலிருந்து பிரித்து விட்டார். ஆனாலும், மரணத்தின் வழியாக கடந்து சென்ற இயேசு கிறிஸ்துவின் வாயிலாக, ஜீவனும் உயிர்த்தெழுதலும் உருவாக்கப்பட்டன. இயேசு, தம்மை விசுவாசிக்கிறவன் பாவத்தின் காரணமாக மரித்தாலும், மீண்டும் பிழைத்து தேவ பிள்ளையாக வாழ்வான் என்று கூறுகிறார் (யோவான் 11:25). அதேவண்ணமாக நம்முடைய வாஞ்சைகளும் இயேசு கிறிஸ்துவினால் நிறைவேற்றப்பட்டு, ஜீவவிருட்சமாகும்.
உங்கள் இருதயத்தின் விருப்பங்களையெல்லாம் இயேசுவின் வாயிலாக நிறைவேற்றும்படி உங்களுக்கு இன்று ஜீவவிருட்சத்தை தருவதற்கு தேவன் விரும்புகிறார். ஜீவவிருட்சத்தினால் நீங்கள் மட்டும் பிழைக்காமல், ஜீவவிருட்சத்தின் இலைகளையும் கொண்டிருப்பீர்கள். அந்த இலைகள் ஜனங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் (வெளிப்படுத்தல் 22:2). தேவன், மற்றவர்களுக்கு மன்னிப்பின் வாயிலாக சுகத்தையும், ஜெபத்தின் வாயிலாகவும், பிசாசுகளை துரத்தியும் அற்புதங்களையும் அளிக்கும்வண்ணமும், பரிசுத்தமாக வாழும்படியும் உங்களை ஆசீர்வாதமாக வைப்பார். இவை அனைத்தும் ஜீவவிருட்சத்தின் வாயிலாக வந்து இந்த உலகில் இயேசுவின் மூலமாக நம்மை பிழைக்கச் செய்கின்றன. அவர் மறுபடியும் ஜீவவிருட்சத்தின் கனியை புசிப்பதற்கான உரிமையை நமக்குத் தருகிறார் (வெளிப்படுத்தல் 2:7). பாவத்தின்மேல் நாம் ஜெயம்பெற்றிருக்கிறபடியால், தேவன் ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கவும், இப்போதும், மரித்த பின்பும் இயேசுவுடன் வாழவும் வல்லமை தருகிறார்.
நாம் எப்படி ஜெயம்பெற்றவர்களாக முடியும்? "மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்" (வெளிப்படுத்தல் 12:11) என்று வேதம் கூறுகிறது. இயேசுவின் இரத்தத்தால் சகல பாவங்களும் நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்படும்படியும், சகல ஜனங்களும் இயேசுவின் மூலம் பிழைக்கும்படி, அவரது சாட்சியின் வசனத்தை சுமந்து செல்லவும் வேண்டிய கிருபையை தேவன்தாமே தந்தருளுவாராக. இன்று இயேசுவுக்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பீர்களா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இருதயத்தில் தாழ்மையுடன் உம் முன்னே வருகிறேன். என்னுடைய ஜீவவிருட்சமாகவும் நித்திய நம்பிக்கையாகவும் இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் ஆத்துமாவின் ஆழத்தில் புதைந்திருக்கும் வாஞ்சைகளை நீர் அறிவீர். உம்முடைய பரிபூரண சித்தத்தின்படி அவற்றை நிறைவேற்றுவீராக. உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை சுத்திகரித்து பூரணனனாக்குவீராக. உம்முடைய ஜீவனை என் வழியாக பாயச் செய்து மற்றவர்களுக்கு சுகத்தை அளிப்பீராக. பரிசுத்தத்தில் நடக்கவும் பாவத்தின்மேல் வெற்றியடையவும் எனக்கு உதவி செய்யும். சாட்சியின் வசனத்தை தைரியமாக சுமந்துசெல்ல எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். என்னை உம் கிருபையின், அன்பின் பாத்திரமாக உருவாக்குவீராக. என் வாழ்க்கையை என் இரட்சகரும் ராஜாவுமான உம்மிடம் முழுமையாக அர்ப்பணித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


