அன்பானவர்களே, தீமையின் எல்லா கிரியைகளையும் மேற்கொள்ளும் வல்லமையை தேவன் உங்களுக்குத் தருகிறார். வேதம், "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்" (ரோமர் 8:11) என்று கூறுகிறது. ஆம், தேவ ஆவியானவர், ஜீவனை கொண்டிருக்கிறார். அவரால் யாரையும் உயிர்த்தெழப்பண்ண முடியும். சிலுவையில் தம் ஜீவனை விட்ட இயேசுவின் சரீரத்தை அவரால் உயிர்த்தெழப்பண்ண முடியுமானால், உங்கள் சரீரத்தையும், வாழ்க்கையையும் அவரால் எவ்வளவாய் உயிர்த்தெழப்பண்ண முடியும். நிச்சயமாகவே, அவர் உங்களை உயிர்த்தெழப் பண்ணுவார். "என் வாழ்வில் எல்லாமும் செத்துப்போனது. என் ஆவி செத்துப்போய்விட்டது. என் மனம் செத்துப்போய்விட்டது. என் வாழ்க்கை, குடும்பம் எல்லாமும் செத்துப்போய்விட்டன. வெற்றி பெறுவதற்கான தகுதியும், என் ஜெப வாழ்க்கையும் கூட செத்துப்போய்விட்டன," என்று நீங்கள் கூறலாம். பயப்படாதிருங்கள். தேவன், ஜீவனும் உயிர்த்தெழுதலுமாயிருக்கிறார். இயேசு, அதை சம்பாதித்துள்ளார். உங்களை முற்றும் ஜெயங்கொள்ளுகிறவராக மாற்றும்படி அவர், மரணத்தின் வழியாகக் கடந்து சென்றார். இன்று அவரது ஆவியானவர் உங்களுக்குள் வருகிறார். இனி நீங்கள் அல்ல; கிறிஸ்துவே உங்களுக்குள் ஜீவிக்கிறார். எல்லாமும் மீண்டும் எழும்பும். உங்களை நேசிக்கும்படியும், தயவு காண்பிக்கும்படியும் எல்லோரும் எழும்புவார்கள். பரிசுத்த ஆவியானவரால் உங்களுக்குள் பாயும் கிறிஸ்துவின் ஜீவனால் எல்லா காரியங்களிலும் நீங்கள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவராக விளங்குவீர்கள்.
ஆம், ஆண்டவர், "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (யோவான் 10:10) என்று கூறுகிறார். இவ்வளவு காலமும் நீங்கள் திருடன் (சாத்தான்) வருவதையும், அவனால் முடிந்த அளவு மோசமானவற்றை செய்கிறதையும், திருடுகிறதையும், கொல்வதையும் பலவற்றை அழித்துபோடுவதையும் பார்த்தீர்கள். இப்போது இயேசு, "என் பிள்ளையே, நீ ஜீவன் பெறும்படியும், பூரண ஜீவனையும் உனக்குத் தேவையானவற்றை விட அதிகமானவற்றை பெற்றுக்கொள்ளும்படியும் நான் உன்னிடம் வந்திருக்கிறேன்," என்று கூறுகிறார். இப்போதே அவர் உங்களிடம் வருகிறார். அவரது ஜீவன் உங்களுக்குள் பாய்கிறது. அவரை ஏற்றுக்கொண்டு, "இயேசுவே ஸ்தோத்திரம். நீரே என் ஜீவன். நீரே என் உயிர்த்தெழுதல். நீர் என்னை பிழைக்கப்பண்ணுவீர்," என்று கூறுங்கள். ஆம், அதற்காகவே வேதம், "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்," (கலாத்தியர் 2:20) என்று கூறுகிறது. "என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்," என்று நீங்கள் கூறினால், "மாம்சத்தின் இச்சைகளையும், கூடவே தேவனையும் அனுபவித்து மகிழவேண்டும்," என்றால், அது முடியாது.
முழு உலகத்தின் பாவங்களையும் சுமந்து, இயேசு சிலுவையில் அறையப்பட்டதுபோல, இந்த உலகத்தின் காரியங்களை, மாம்ச இச்சைகளை, எல்லா தீமைகளையும் சிலுவையில் அறையவேண்டும். அதன்பிறகு கிறிஸ்துவை உங்களுக்குள் ஜீவிக்க அனுமதிக்கவேண்டும்; கிறிஸ்துவின் சிந்தையைக் கொண்டு, கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றி, இயேசு கிறிஸ்துவின் நோக்கத்தை உங்கள் வாழ்வில் செய்யவேண்டும். ஆம், தம் வெளிச்சம் உங்கள் வாயிலாக பிரகாசிக்கும்படி, உலகத்தில் உங்கள் வாழ்க்கை இயேசுவை பிரதிபலிப்பதாக அமையவேண்டும் என்று உங்களைக் குறித்து அவருக்கு ஒரு நோக்கம் உண்டு. ஆகவே, மாம்சத்தின், உலகத்தின், சாத்தானின் எந்தக் காரியமும் உங்களிடம் இருக்கமுடியாது; நீங்கள் இயேசுவை மாத்திரமே கொண்டிருக்கவேண்டும். ஆகவே, கிறிஸ்துவுடன் உங்களை சிலுவையில் அறைந்திடுங்கள்; கிறிஸ்துவுடன் இணைந்திருங்கள். கிறிஸ்துவுடன் உங்களைச் சிலுவையில் அறைவது என்பது, உலக இன்பங்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்து, அவரது நித்திய பிரசன்னத்தில் மட்டும் மகிழ்ந்திருப்பதாகும்; உங்கள் வாழ்க்கைக்குள்ளும், வாழ்க்கை வாயிலாகவும் இயேசுவை கொண்டு வருவதாகும். அப்போது கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றிருப்பீர்கள். அவர் எல்லாவற்றையும் செய்து முடிப்பார்; சாத்தான் கொண்டு வரும் அனைத்தையும் அழித்துப்போடுவார். சாத்தான் திருடிய எல்லாவற்றையும் இயேசு திரும்ப தருவார். உங்கள் வாழ்க்கையில் பிசாசு கொன்றுபோட்டவற்றையெல்லாம் இயேசு உயிர்ப்பிப்பார்.
ஜெபம்:
பரம தகப்பனே, உம் உயிர்த்தெழுதலின் வல்லமை என்னில் கிரியை செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்வில் செத்ததாய் காணப்படும் எல்லா பகுதிகளுக்குள் இன்று உம் ஜீவனை ஊதுவீராக. உம் ஆவியானவர், என் சிந்தையை, சரீரத்தை, ஆவியை உயிர்ப்பிப்பாராக. எல்லா உலக இச்சைகளையும் அர்ப்பணித்துவிட்டு, உமக்காக மாத்திரமே ஜீவிப்பதை தெரிந்துகொள்கிறேன். கிறிஸ்துவே எனக்குள்ளும் என் வாயிலாகவும் பிழைத்திருப்பாராக. என் வாழ்விலிருந்து சத்துரு திருடிக்கொண்ட எல்லாவற்றையும் திரும்ப தந்தருளும். உம் பரிபூரண ஜீவனாலும் நிரம்பி வழியும் ஆனந்தத்தினாலும் என்னை நிரப்பிடும். உம் பரிபூரண சித்தத்தின்படியே என் வாழ்வை கட்டியெழுப்பவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


