விலையேறப்பெற்ற தேவ பிள்ளைகளே, தேவனின் வல்லமையுள்ள நாமத்தில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். நாம் இன்று உபாகமம் 28:5-ல் உள்ள வாக்குத்தத்தத்தை தியானிப்போம். "உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்." நாம் எப்போது இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்? உபாகமம் 28:1-2 வரையுள்ள வசனங்கள், "இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்". "நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்" என்று கூறுகிறது. நீதிமொழிகள் 28:20 "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்" என்று கூறுகிறது. மல்கியா 3:10 கூறுகிறது, "என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." எவ்வளவு வல்லமையான வாக்குத்தத்தம்.
ஆகவே நண்பர்களே, தொடர்ந்து முழுமனதோடு தேவனை தேடுங்கள். காலை, மாலை, இரவு என்று எவ்வேளையும் அவரைத் துதியுங்கள். அதையே தாவீது, சங்கீதம் 55:17-ல் "அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்" என்று கூறுகிறார். மேலும், மல்கியா 3:10-ல் கூறியிருப்பது போல, ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள். அப்பொழுது, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கபண்ணுவார். எனக்கு முதலில் இது புரியவில்லை. பத்தில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை வைத்து அந்த மாதம் முழுவதையும் கடத்துவது மிகவும் கடினம் நான் நினைத்தேன். ஆனால், ஆண்டவர் எனக்கு அழகான பாடம் ஒன்றை கற்றுக்கொடுத்தார். நாங்கள் அவருக்கு உண்மையாக கீழ்ப்படிந்தபோது அவர் அளவில்லாமல் எங்களை ஆசீர்வதித்தார். ஆகவே நண்பர்களே, எங்களை போன்று நீங்களும் ஆண்டவருக்கென்று பத்தில் ஒரு பகுதியை கொடுக்கும்போது ஆசீர்வதிக்கப்படுவீர்கள். உண்மையாக தேவனை தேடுங்கள், நேர்மையாக வாழுங்கள், உதாரத்துவமாக கொடுங்கள். அப்போது தேவனின் அளவற்ற இந்த ஆசீர்வாதத்தை நீங்களும் பெற்றுக்கொள்வீர்கள்.
ஜெபம்:
அன்பின் தேவனே, இந்த அளவற்ற ஆசீர்வாதத்தின் வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய சத்தத்தைக் கேட்டு, தொடர்ந்து உம் வழியில் நடக்க எனக்கு உதவி செய்யும். என் இருதயத்தில் விசுவாசத்தையும், ஜெபத்தில் உறுதியையும் தந்து, உம்முடைய வசனத்தில் நிலைத்திருக்க எனக்கு உதவி செய்யும். உம்முடைய சமாதானத்தினாலும், தயவினாலும் என் வீட்டை நிரப்பும். என் காணிக்கையினாலும், தசமபாகத்தினாலும் உம்மை கனம்பண்ண எனக்கு உதவி செய்யும். வானத்தின் பலகணிகளைத் திறந்து உம்முடைய அளவில்லாத ஆசீர்வாதத்தினால் என் வாழ்வை நிரப்பும். என் கூடையையும், மாப்பிசைகிற என் தொட்டியையும் நிரம்பி வழியப்பண்ணும். நான் காலை, மாலை, இரவு வேளைகளில் உம்மை தேடும்போது, உம்முடைய ஆசீர்வாதங்கள் என்னை தொடரச் செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!