அன்பானவர்களே, ஆண்டவர் உங்கள் பாதையை நீதிமானின் பாதையாக நிலைப்படுத்தப்போகிறார். உங்களைச் செழிக்கப்பண்ணி, கனப்படுத்துவார். அவர் உங்களை நீதியின் பாதையில் நடத்துவார். வேதம், "நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசம்போலிருக்கும்" (நீதிமொழிகள் 4:18) என்று கூறுகிறது.
உங்கள் பாதையில் இருள் நிறைந்திருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? அது கசப்பினாலும், பயத்தினாலும், இழப்பினாலும் நிறைந்திருக்குது என்று கூறுகிறீர்களா? திருடர்களால், வஞ்சனையுள்ள மக்களால், பிசாசின் தாக்குதல்களால் சூழப்பட்டிருக்கிறதா? பாதையே கண்ணுக்குத் தெரியாமல் உள்ளதா? நண்பகலின் சூரிய ஒளிபோல அதிகமதிகமாய் பிரகாசிக்கிற பாதையை ஆண்டவர் உங்களுக்கு ஆயத்தமாக்கிக்கொண்டுள்ளார். இந்த வாக்குத்தத்தத்திற்காக இன்று ஆண்டவரை ஸ்தோத்திரித்து, இயேசுவின் நாமத்தில் இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
கர்த்தர், "நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்....அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்" (ஏசாயா 45:2,4) என்று கூறுகிறார். உங்களைச் சுற்றிலும் எங்கும் இருளாக தெரியலாம். ஆனால் கர்த்தர்தாமே, புதையல்களையும் மறைவான ஆசீர்வாதங்களையும் கண்டுபிடிப்பதற்கான வழியை உங்களுக்கு உருவாக்குவார். உங்களுக்கு முன்பாக கோணலாகக் காணப்படும் பாதையை அவர் நேராக்குவார். அன்பானவர்களே, இன்று இயேசுவின் நாமத்தில் அந்தப் பாதை உங்களுக்குத் திறப்பதாக.
அந்தப் பாதை எப்படி திறக்கும்?
முதலாவது, பாவங்கள் மன்னிக்கப்படுவதால் திறக்கிறது. தேவ மன்னிப்பு உங்களுக்குக் கிடைக்கும்போது, நீதிமானின் பாதை பிரகாசிக்கத் தொடங்குகிறது. இயேசு, சிலுவையில் தொங்கியபோது, மனுக்குலத்தின் பாவம் முழுவதும் அவர்மேல் சுமத்தப்பட்டதால், ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் இருள் சூழ்ந்தது. அது அந்தகாரமாயிருந்தது (லூக்கா 23:44).
ஒருவேளை இன்று உங்கள் பாதையே பாவத்தினால் இருண்டிருப்பதாக நினைக்கலாம். நீங்கள், "என்னால் தேவனிடம் வர இயலாது. மக்களை எதிர்கொள்ள இயலாது. நான் செல்லுமிடமெங்கும் சாபம் என்னை தொடருகிறது. குற்றவுணர்ச்சி என்னை நசுக்குகிறது," என்று கூறலாம். இயேசுவின் நாமத்தினால் இருள் இன்று உங்களை விட்டு அகலுவதாக. தாம் ஏற்கனவே கடந்து சென்றிருப்பதால் இருளின் ஆதிக்கத்தின் வேதனை இயேசுவுக்குத் தெரியும். நம் பாவங்களின் அந்தகாரத்தை அவர் தம் சரீரத்தில் சுமந்தார்.
ஆனாலும் அவர், "நானே உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன். என்னை பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல், ஜீவ ஒளியை அடைந்திருப்பான்," என்று கூறுகிறார். ஒவ்வொருவர்மேலும் பாவம் சுமத்தப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்தாலும், இயேசு ஒளியாகவும் நீதியாகவுமே இருந்தார். அவருடைய நீதியினால், நமக்காக இருளை மேற்கொண்டார். இன்றும் இயேசுவை பின்பற்றி நடக்கிறவர்கள், இருளில் நடவாமல் ஜீவ ஒளியை அடைவார்கள். அவர் பாவ இருளை அகற்றி, நம்மை ஜீவனாலும் வெளிச்சத்தாலும் நிரப்புகிறார். நாம் அவருடன் நடக்கும்போது, நம் வாழ்க்கை பரிசுத்தமும் நீதியும் உள்ளதாய் மாறுகிறது; கறையற்றவர்களாய் வாழ்ந்து, நடுப்பகலின் வெளிச்சம்போல பிரகாசிக்கப்பண்ணுகிறது. இந்த ஆசீர்வாதத்தை ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் இன்று அருளுவாராக. உங்கள் முழு இருதயத்தோடும் இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அதை வாஞ்சித்திருங்கள்.
இரண்டாவதாக, கர்த்தர் சுகத்தைத் தருகிறார். அவர் நடுப்பகலின் சூரிய ஒளியைப் போல தம் சுகத்தை அனுப்புகிறார். வேதம், "என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்" (மல்கியா 4:2) என்று கூறுகிறது. வியாதியின் இருள், நோயின் தீவிரம், உடல்நலக் கேட்டின் அறிகுறிகள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவிடமிருந்து வரும் ஜீவனை தரும் வல்லமையால் அழிக்கப்படும். உங்கள் உடலிலிருந்து இருளின் எல்லா அறிகுறிகளும் அகன்றுபோகட்டும். இயேசுவின் நாமத்தினால் எல்லா புற்றுநோய் செல்களும் செத்துப்போகட்டும்; உங்கள் உடல் பூரண சுகம் பெறுவதாக.
நிறைவாக, சத்துருக்களால் ஏற்படுத்தப்படும் இருளை ஆண்டவர் நீக்குகிறார். கர்த்தர், எமோரியரை இஸ்ரவேலரின் கைகளில் ஒப்படைத்த தினத்தன்று யோசுவா, "சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும் தரித்துநில்லுங்கள்," என்று கட்டளையிட்டான் (யோசுவா 10:12). இருட்டத் தொடங்கியது. இரவாகிவிட்டால் சத்துருக்கள் தப்பித்துவிடக்கூடும் என்று யோசுவா அறிந்தான். ஆகவே, பகல் வெளிச்சம் தொடரவேண்டும் என்று அவன் கர்த்தரிடம் முறையிட்டான். தேவன் அவன் ஜெபத்திற்குப் பதிலளித்தார். இஸ்ரவேலர் தங்கள் விரோதிகளை முற்றிலும் முறியடிக்கும்வரை சூரியன் தரித்து நின்றது.
அன்பானவர்களே, உங்கள் வாழ்விலும் அப்படியே நடக்கும். கர்த்தருடைய வெளிச்சம் உங்கள்மேல் பிரகாசிக்கும். உங்களுக்கு விரோதமாக எழும்பும் சத்துருக்கள் அனைவரும், பிசாசின் சகல தாக்குதலும், இழப்பின் எல்லா ஆவியும், எல்லா பெலவீனத்தின் ஆவியும் விரட்டியடிக்கப்படும். கர்த்தர் உங்களுக்குப் பூரண விடுதலையை அளிக்கிறார். நீங்கள் இழந்த அனைத்தையும் அவர் இரட்டிப்பாக திரும்ப தருவார். இன்றே உங்கள் சுதந்தரத்தை பெற்றுக்கொள்ளுங்கள். இயேசுவின் வல்ல நாமத்தில் எல்லா இருளும் அகன்றுபோவதாக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீதிமானின் பாதை மென்மேலும் பிரகாசிக்கும் என்று வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்; உம்மிடமிருந்து என்னை விலகச் செய்யும் எல்லா இருளையும் அகற்றுவீராக. இயேசுவின் பிரகாசம் என் இருதயத்தை நிரப்புவதாக; என்னை வழிநடத்துவதாக. எனக்கு முன்னாக இருக்கும் கோணலான எல்லா பாதைகளையும் நேராக்குவீராக. ஒருவரும் பூட்டக்கூடாதபடி வாசல்களைத் திறப்பீராக. எல்லா வியாதியிலிருந்தும் என் சரீரத்தை குணப்படுத்தி, சத்துருவின் சகல கிரியையையும் அழித்துப்போடுவீராக. எல்லா பயம், இழப்பு, அதைரியத்திலிருந்தும் என்னை விடுவிப்பீராக. என்னில் காணப்படும் எல்லா இருளையும் உம் வெளிச்சம் மேற்கொள்ளட்டும். நான் இழந்தவற்றையும் திரும்ப தந்து, நீர் எனக்காக ஆயத்தம்பண்ணியிருக்கிற மகிமையான எதிர்காலத்துக்குள் என்னை வழிநடத்துவீராக. நான் நீதியில் நடந்து, உம் வெளிச்சத்தை பிரகாசித்து, என் வாழ்நாளெல்லாம் உம் நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வரவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


