எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்றைய தியானத்தின்போது, ஆண்டவர்தாமே உங்கள் இருதயத்தை தம் பரிபூரண ஆசீர்வாதங்களின், மகிழ்ச்சியினாலும் சந்தோஷத்தினாலும் ஊக்கத்தினாலும் நிரப்புவாராக. "நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்" (லேவியராகமம் 20:24) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாயிருக்கிறது. வல்லமையான இந்த வாக்குத்தத்தத்தை நீங்கள் வாசித்து, விசுவாசித்து, உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும்.
நம்மில் அநேகர் வாழ்க்கையில் வெவ்வேறு ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருப்போம். சிலர் சுகத்திற்காக, சிலர் வேண்டியவை கிடைப்பதற்காக, சிலர் எல்லாமும் மாறும்படி, மற்றவர்கள் நீண்டகாலமாக பதில் கிடைக்காத தங்கள் ஜெபத்திற்காக விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருப்பார்கள். இன்று ஆண்டவர், "என் பிள்ளையே, உனக்கென்று நான் ஆயத்தம்பண்ணியிருக்கிற ஆசீர்வாதங்களை நீ சுதந்தரித்துக்கொள்வாய். நான் அதை உனக்குச் சுதந்தரமாகவே தருவேன்," என்று நிச்சயமாய் கூறுகிறார். வாக்குத்தத்தங்களை தம் பிள்ளைகள் வாழ்வில் நிறைவேற்றி அவர்களை ஆசீர்வதிக்க தேவன் பிரியமாயிருக்கிறார்.
இந்தச் சத்தியத்தை ஆபிரகாமின் வாழ்க்கையில் பார்க்கிறோம். ஆபிரகாம், தன் முழு இருதயத்தோடும் உண்மையாய் கர்த்தரைத் தேடினான். அவனது விசுவாசத்தாலும் கீழ்ப்படிதலாலும் தேவன் அவனை பூரணமாய் ஆசீர்வதித்தார். கர்த்தர், ஆபிரகாமுக்கு, "நான் உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் கானான் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன்," என்று வாக்குக்கொடுத்தார். தேவன், உண்மையாய் இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். ஆபிரகாமை ஆசீர்வதித்த அதே தேவன் இன்று உங்களையும் ஆசீர்வதிக்க ஆயத்தமாயிருக்கிறார்.
தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம் என்று வேதம் நினைவுப்படுத்துகிறது (எபேசியர் 1:12). ஆண்டவர் தம் வாக்குத்தத்தங்களைக் காத்துக்கொள்ள ஒருபோதும் தவறுவதேயில்லை. ஆபிரகாம் விசுவாசித்தபடியே தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டபடி, நீங்களும் அவருடைய வார்த்தையை விசுவாசத்தோடும் திடநம்பிக்கையோடும் பற்றிக்கொள்ளவேண்டும்.
தேவன் தம்மை நம்புகிறவர்களுக்கு நித்திய ஆசீர்வாதங்களை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் என்று வேதம் போதிக்கிறது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை வாசித்து, அவருடைய வாக்குத்தத்தங்களைச் சொந்தமாக்கிக்கொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையில் தாம் நியமித்திருக்கிற எல்லா ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொள்வதற்கான கிருபையை உங்களுக்குத் தருவார். இன்று அவரை நம்புங்கள். தம் வாக்குத்தத்தங்களை ஆபிரகாமுக்கு நிறைவேற்றிய தேவன் உங்கள் வாழ்க்கையிலும் தாம் உரைத்த எல்லா வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றுவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எங்கள் சுதந்தரத்தை எங்களுக்கு அளிப்பதோடு, நீர் எங்களுக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிற எல்லா ஆசீர்வாதத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள உதவுவதாக கொடுக்கும் விலையேறப்பெற்ற வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆபிரகாம் உம்மை நம்பி, உம் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதுபோல, உம் வார்த்தையை நம்பும்படி எங்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்தும். எங்கள் வாழ்க்கையின் எல்லா தேவையும் உம் மகிமையின் ஐசுவரியத்தின்படி சந்திக்கப்படுவதாக. சுகத்தை, வேண்டியவற்றை, சமாதானத்தை, மாற்றத்தை தேடும் ஒவ்வொருவரையும் தொடும். இன்று உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் உம் பலத்த கரத்தை வைத்து, உம் வாக்குத்தத்தங்களை பெற்றுக்கொள்ளும் கிருபையை அருளிச்செய்யும். உம் உண்மைக்குச் சாட்சிகளாக மாறும்படி அவர்களைப் பரிபூரணமாக ஆசீர்வதித்திடவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


