அன்பானவர்களே, நானும் கேட்டியும் இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் இன்றைய வாக்குத்தத்தத்தை பகிர்ந்துகொள்கிறோம். "...உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்" (உபாகமம் 15:10) என்ற இந்த வசனத்திற்கு சாட்சியாகவே நான் கேட்டியை இதில் இணைத்துள்ளேன். ஆம், ஆண்டவர் உங்கள் கைகளின் முயற்சிகள் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் எதைச் செய்தாலும் ஆண்டவர் அதை ஆசீர்வதிப்பார். என் வாழ்க்கையில் நான் இதைப் பார்த்திருக்கிறேன். என் மகள் கேட்டியின் வாழ்க்கையிலும் இதைக் கண்டிருக்கிறேன்.
கேட்டி, சிறுவயதில் மழலையர் பள்ளிக்குச் சென்றது முதல் தேவ கிருபையால் நன்றாக படிக்கிறாள். நான், அவள் எப்போதும் ஆண்டவருக்குப் பயந்திருப்பதாலேயே நன்றாக படிக்கிறாள் என்று உணருகிறேன். கேட்டி, பள்ளிக்குச் செல்லும் முன்னர், எப்போதும் குடும்பமாக ஜெபிப்போம். ஆம், எல்லோரும் சேர்ந்து ஜெபிப்போம். நான் மறந்துவிட்டால் கூட, அவள், "அம்மா, பொறுங்கள். நான் ஜெபிக்க போகவேண்டும்," என்று சொல்லுவாள். இரவில் படுக்கச் செல்லும் முன்னரும், குடும்பமாக ஜெபிப்போம். குடும்பத்தில் வேறு யாரும் இல்லாதபோதும், தனக்கு கெட்ட சொப்பனங்கள் வரக்கூடாது என்பதற்காக என்னை ஜெபிக்கச் சொல்லுவாள். ஆம், அவள் ஆண்டவருக்குப் பயப்படுவாள். தான் இயேசுவிடம் எதைக் கேட்டாலும் அவர் அதை அருளிச்செய்வார் என்று விசுவாசிக்கிறாள்.
ஆகவே இன்று எதையும் ஆரம்பிக்கும் முன்னர், புதிய வியாபாரத்தை, நீங்கள் எதையும் எழுதும் எழுத்தாளராக இருந்தால், புதிதாக எதையும் எழுதுவதற்கு முன்னர் ஆண்டவரிடம் ஜெபியுங்கள். ஒருவேளை எதைக் குறித்தாவது ஓர் எண்ணம் உங்களுக்குள் இருக்கலாம்; ஆனால் அதைச் செய்வதற்கு முன்னர் ஆண்டவரிடம் கூறுங்கள்; அவர் நிச்சயமாகவே அதை ஆசீர்வதிப்பார். வேதம், "...உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்" (உபாகமம் 15:10) என்று கூறுகிறது. ஆம், நாம் அதை விசுவாசிப்போம்; ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்வோம்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என் கைகளின் வேலையின்மேல் நீர் கரிசனையாயிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எதையும் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் உம்மை நோக்கி ஜெபிக்க எனக்குக் கற்றுத்தாரும். நான் எடுக்கும் எல்லா முடிவுகளிலும் உம்மை நம்புவதற்கு உதவும். என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றிலும் உம் ஆசீர்வாதம் தங்கியிருப்பதாக. உமக்கு பயப்படுவதும், தினமும் உம்மை தேடுவதுமான இருதயத்தை எனக்குத் தந்தருளும். என் எண்ணங்களை, திட்டங்களை, செயல்களை வழிநடத்துவீராக. எனக்கு முன்னே சென்று, எல்லா பாதைகளையும் வெற்றியானதாக மாற்றுவீராக. நான் செய்யும் எல்லாமும் உமக்கு மகிமையை கொண்டு வருவதாக என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


