அன்பானவர்களே, இன்றைக்கும் தேவன் உங்களுக்கென்று ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார். ஒவ்வொரு புதிய நாளிலும் நம்முடைய பெலத்தினால் அல்ல; அவரது இரக்கத்தினாலும் கிருபையினாலுமே நாம் வாழ்கிறோம். வேதம், "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்" (ரோமர் 12:12) என்று கூறுகிறது. வாழ்வின் எல்லா காலத்திலும் இந்த வார்த்தைகள் உண்மையாயிருக்கின்றன. தேவன், அவர் நமக்காக நேர்த்தியான ஒன்றை ஆயத்தமாக்கி வைத்திருக்கிறார் என்ற நம்பிக்கையோடு நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். இன்று நாம் அதை காணாவிட்டாலும் நம் நன்மைக்காக எல்லாவற்றையும் செய்து முடிக்க அவர் பின்னணியில் கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்று நம்பலாம். தேவன் உங்களை பயன்படுத்துவார்; மகா உயரங்களுக்கு உயர்த்துவார்; உங்கள் வாழ்க்கையில் தம் நோக்கத்தை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள். மக்கள்மேல் அல்லது சூழ்நிலைகளின்மேல் அல்லாமல் தேவனுடைய மாறாத அன்பின்மேலே நம் நம்பிக்கை இருக்கிறது.
இரண்டாவதாக, "உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்" என்று அந்த வசனம் கூறுகிறது. உபத்திரவங்கள், வேதனை அல்லது தாமதம் நம்மை சூழ்ந்துகொள்ளும்போது, தேவன் பொறுமையாயிருக்கும்படி நம்மை அழைக்கிறார். நம்மை அழிக்கும்படியல்ல; சுத்திகரித்து பெலப்படுத்துவதற்காக சில உபத்திரவங்களை அவர் அனுமதிக்கிறார். கண்ணீரின் மத்தியிலும் அவர்மேல் ஆழமான நம்பிக்கை வைக்கும்படி நம் உள்ளங்களை அவர் உருவாக்குகிறார். தேவனுடைய திட்டத்தை முழுவதுமாக புரிந்துகொள்ளாவிட்டாலும் உண்மையாய் பேழையைக் கட்டிய நோவாவைப்போல, நாமும் ஆண்டவருக்குச் சந்தோஷமாக கீழ்ப்படிவோம். வெள்ளம் வந்தபோது நோவாவும் அவன் குடும்பத்தினரும் ஒருநாள் தேவன் தங்களை வெளியே கொண்டுவருவார் என்ற நம்பிக்கையில் உள்ளே இருந்தனர். அவர்கள் தங்கள் உபத்திரவத்தை பொறுமையோடு சகித்தார்கள். கர்த்தர் கதவை திறந்தார். அவர்கள் வாயிலாக புதிய உலகம் தொடங்கியது. அவர்கள் விசுவாசத்தினிமித்தம் நீதியுள்ள சந்ததி எழுந்தது. அதுபோலவே நீங்கள் பொறுமையோடு சகித்தால், உங்கள் உபத்திரவம் தோல்வியில் முடிந்துபோகாது. தேவன் ஏற்றவேளையில் உங்களை வெளியே அழைத்து வந்து, நிலைப்படுத்துவார்; அநேகருக்கு உங்களை ஆசீர்வாதமாக வைப்பார்.
இறுதியாக, வேதம், "ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்" என்று கூறுகிறது. பரலோக தயவைப் பெறுவதற்கு திறவுகோல் ஜெபமேயாகும். நாம் உண்மையாய் ஜெபிக்கும்போது, நம்பிக்கை புதுப்பிக்கப்படுகிறது; பெலன் திரும்பக் கிடைக்கிறது; அற்புதங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. பலவேளைகளில் நாம் விசுவாசத்தையும் துக்கத்தையும் பரிமாறிக்கொள்கிறோம். ஜெபிக்கிறதற்கு பொறுமையில்லாத நாம், பயப்பட உண்மையுள்ளவர்களாயிருக்கிறோம். ஆனால், தேவன் நம்மை தலைகீழாக மாற்றுவதற்கு விரும்புகிறார். அவர், "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்" என்று கூறுகிறார். இந்த வார்த்தைகளின்படி நாம் வாழும்போது, சமாதானம் நம் உள்ளங்களை நிரப்பும். நோவாவை வழிநடத்திய, தானியேலை விடுவித்த, ஆபிரகாமை ஆசீர்வதித்த அதே தேவன் நமக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பார் என்று நம்புவோம். இந்த ஆண்டே அவரது வாக்குத்தத்தங்கள் உங்களுக்கு வெளிப்படுத்தப்படட்டும். உங்களுக்கு சிறந்தவை இனிதான் வரவேண்டியதிருப்பதால் நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய இரக்கமும் நம்பிக்கையும் நிறைந்திருக்கும் இந்தப் புதிய நாளுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் நன்மைக்கானவற்றை நீர் செய்துகொண்டிருக்கிறீர் என்று அறிந்து நம்பிக்கையில் எப்போதும் சந்தோஷமாயிருக்க எனக்குக் கற்றுத்தாரும். உம்முடைய திட்டத்தை புரிந்துகொள்ளாத நிலையிலும் நோவாவைப்போல சந்தோஷமாக கீழ்ப்படிய எனக்கு உதவும். எல்லா உபத்திரவங்களையும் பயமின்றி, குறைசொல்லாமல் சகித்துக்கொள்ள எனக்கு பொறுமையை தந்தருளும். ஆண்டவரே, எல்லா வேதனையிலிருந்தும் இக்கட்டிலிருந்தும் என்னை மீட்டு உம் சமாதானத்தால் நிறைத்திடும். தினமும் உண்மையாய் உம்மில் நிலைத்திருக்க என் விசுவாசத்தை பெலப்படுத்தும். உமக்காக நான் காத்திருக்கும்போது என் உள்ளம் சந்தோஷத்தாலும் நன்றியாலும் நிரம்பி வழிவதாக. உம்முடைய வாக்குத்தத்தங்களை நான் பற்றிக்கொண்டிருப்பதால் அற்புதங்கள் என் வாழ்வில் நிகழ்வதாக. உம்மை மகிமைப்படுத்துகிற, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வாழும்படி என்னை உருவாக்கிடவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


