அன்பானவர்களே, நம் இருதயங்கள், "எப்போது எனக்கு நியாயம் கிடைக்கும்? எனக்காக யார் நிற்பார்கள்?" என்று கதறும் நேரங்கள் உண்டு. இந்த உலகில் அடிக்கடி அநியாயங்கள் நடக்கின்றன. நீதிமான்கள் பாடுபடும்போது, துன்மார்க்கர் செழிப்பதுபோல் காணப்படும். ஆனால், தேவன் உங்கள் வேதனையை காண்கிறார். உங்கள் கண்ணீரை அவர் பார்க்கமாட்டாதவரல்லர். உங்கள் ஜெபங்களை கேட்கக்கூடாதவரல்லர். வேதம், "நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்" (சங்கீதம் 9:4) என்று கூறுகிறது.  ஆமாம், நம் தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. அவர் தண்டிக்கிற நீதிபதியல்ல; மாறாக, தம் பிள்ளைகளை தற்காக்கும் தகப்பனாயிருக்கிறார். மற்றவர்கள் உங்களை மறக்கும்போது, அமைப்புகள் தோல்வியுறும்போது, மக்கள் தங்கள் அதிகாரத்தை தவறாய் பயன்படுத்தும்போது, தேவனே உங்கள் நியாயத்திற்காகவும் வழக்குக்காகவும் எழுந்து யுத்தம்பண்ணுவார். அவர், "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" (யாத்திராகமம் 14:14) என்று கூறுகிறார். தேவ பிள்ளையே, அமர்ந்திருங்கள். பழி வாங்க நினைக்காதீர்கள். கலங்காதீர்கள். ஆண்டவர்தாமே உங்களுக்காக நின்று அவரது வேளையில் நியாயத்தை அளிப்பார்; அவரது வேளை எப்போதும் பூரணமானதாக இருக்கிறது.

இரண்டாவதாக, இயேசு, "தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 18:7,8) என்று கற்பிக்கிறார். நீங்கள் தொடர்ந்து நம்பிக்கையாய் ஜெபித்துவந்தால், நியாயம் தாமதியாது. தேவன், தம் பிள்ளைகளின் கூப்பிடுதலுக்கு இரவும் பகலும் செவிகொடுக்கிறார். துன்மார்க்கர் எப்போதும் வெற்றியடைய அவர் அனுமதிக்கமாட்டார். வேதம், "தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்" (சங்கீதம் 75:7) என்று கூறுகிறது. ஆமாம், அநியாயமாய் நடக்கிறவர்களை எப்படி கீழே தள்ளி, உண்மையானவர்களை உயர்த்துவது என்பதை கர்த்தர் அறிந்திருக்கிறார். ஏற்றவேளையில் அவர் நிலைமையை உங்களுக்குச் சாதகமாக மாற்றுவார். நீங்கள் இன்று மறக்கப்பட்டதுபோல உணரலாம்; ஆனால், உங்கள் வழக்கு இன்னும் தேவனுடைய சிங்காசனத்தின் முன்பு திறக்கப்பட்டதாய் இருக்கிறது. உங்கள் ஜெபங்கள் பதிவு செய்யப்படுகின்றன; உங்கள் கண்ணீர் நினைக்கப்படும். நீதியின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கும் கர்த்தர் உங்களுக்காக நிற்பார். அவரது நியாயம் தாமதிக்காது; உங்கள் பூரண நன்மைக்கு ஏதுவாக அது ஆயத்தம்பண்ணப்படுகிறது.

மூன்றாவதாக, தேவன் உங்களுக்காக யுத்தம் செய்யும்போது, நியாயத்தை உங்களுக்கு அளிப்பதோடு, இரட்டிப்பான கனத்தையும் உங்களுக்குக் கொடுப்பார். யோசேப்பின் வரலாறு இந்த சத்தியத்தை நிரூபிக்கிறது. அவன் பொய்யாய்க் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டான்; மனுஷரால் மறக்கப்பட்டான்; ஆனால், தேவன் அவனை நினைவுகூர்ந்தார். ஒரு தருணத்தில் தேவன் அவனை சிறைச்சாலையிலிருந்து அரண்மனைக்கு உயர்த்தினார். அதேபோன்று, தேவன் உங்களையும் இரட்டிப்பாய் உயர்த்துவார். உண்மையாய் வேலை செய்த ஒருவர் எனக்கு நினைவுக்கு வருகிறார். அவர் விடுமுறை நாட்களில் தேவனுக்கு ஊழியம் செய்ததால் உயர் அதிகாரி அவரை வெறுத்தார். ஆனாலும், ஏற்றவேளையில் தேவன் அவருக்கு பதவி உயர்வு கொடுத்தார்; அதே உயரதிகாரி அவருக்குக் கீழ் பணிபுரியும்படி செய்தார். அன்பானவர்களே, உங்களுக்கான பலன் ஆண்டவரிடமிருந்து நிச்சயமாய் வரும். "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" (ஆதியாகமம் 12:2,3) என்று வேதம் கூறுகிறது. மற்றவர்கள் என்ன செய்தாலும் நீங்கள் தொடர்ந்து ஆசீர்வாதமாகவே விளங்குங்கள். உங்கள் நியாயத்தை தேவனின் கரங்களில் விட்டுவிட்டால், அவர் எல்லா சாபத்தையும் ஆசீர்வாதமாகவும், எல்லா அவமானத்தையும் கனமாகவும் மாற்றுவார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, எனக்கு நீதியுள்ள நியாயாதிபதியாகவும் என்னை தற்காக்கிறவராகவும் இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எனக்கு இழைக்கப்படும் அநியாயங்களையெல்லாம் நீர் பார்க்கிறீர்; என் வழக்கை உம் கரங்களில் பிடித்திருக்கிறீர். ஆண்டவரே, எனக்காக போராடும். என் வாழ்வில் உம் நியாயம் விளங்குவதாக. ஏற்றவேளையில் என்னை உயர்த்தி, நீர் எனக்கு தயை செய்வதை என்னை ஒடுக்கிறவர்களெல்லாரும் காணும்படி செய்வீராக. எல்லா வேதனைக்கும் பதிலாக சமாதானத்தையும், எல்லா இழப்புக்கும் பதிலாக இரட்டிப்பான ஆசீர்வாதத்தையும் அளிப்பீராக. நான் தவறு செய்துவிட்டால், உம்மேல் நம்பிக்கை வைத்து அமைதியாய் இருக்க உதவி செய்யும். உம் பிள்ளைகளை தற்காக்கும் நீதியுள்ள தேவன் நீர் என்பதற்கு என் வாழ்க்கை சாட்சியாக அமையட்டும். மற்றவர்கள் என்னை புண்படுத்தினாலும் அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி என்னை ஆசீர்வதித்தருளும். எனக்காக வெற்றியையும் கனத்தையும் நீர் ஆயத்தம்செய்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.