அன்பானவர்களே, தேவன் உங்கள்மேல் பிரியமாயிருப்பதால் சத்துருக்கள் உங்களை ஜெயிக்க முடியாது. "என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்" (சங்கீதம் 41:11) என்று வேதம் கூறுகிறது. ஆம், உங்கள் சத்துருக்கள் உங்களை ஜெயிக்க இயலாது. தேவன் உங்கள்மேல் பிரியமாயிருப்பதை இது காட்டுகிறது. தேவன் உங்கள்மேல் பிரியமாயிருப்பதால் கர்த்தரை துதித்து அவர்பேரில் களிகூருங்கள். கர்த்தர், "வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்" (யாத்திராகமம் 23:20) என்று கூறுகிறார். உங்கள் எல்லா சத்துருக்களின் மத்தியிலும் அவர் உங்கள் பெயரை, உங்கள் குடும்பத்தை, உங்கள் வேலையை, உங்கள் வியாபாரத்தை, உங்கள் வீட்டை, உங்கள் ஆஸ்தியை பாதுகாப்பார். இது உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தமாகும். அவர் உங்களைப் பாதுகாப்பார். தேவன் உங்களுக்கு ஆயத்தமாக்கியிருக்கிற இடத்துக்கு தேவதூதன் உங்களைக் கொண்டு வந்து சேர்ப்பான். எந்தச் சத்துருவாலும் அதை நிறுத்த முடியாது. உங்கள்பேரில் தாம் பிரியமாயிருப்பதை காண்பிக்க தேவன் அதைச் செய்வார். இயேசு எவ்வளவாய் உங்களை நேசிக்கிறார்!
வேதம், "அவர் வாக்குக்குச் செவிகொடு" (யாத்திராகமம் 23:21) என்று கூறுகிறது. கர்த்தர் என்ன கூறுகிறாரோ அதன்படியே செய்யுங்கள். அப்போது சத்துரு உங்களை மேற்கொள்ள முடியாது. "நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்" என்று 22ம் வசனம் கூறுகிறது. ஆனால், தேவனுடைய வார்த்தைகளுக்கும், அவரது சத்தத்துக்கும் கீழ்ப்படியாதவர்களை, "நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்" (எபேசியர் 4:30) என்று வேதம் கூறுகிறது. அப்போது உங்கள் சத்துருக்கள் உங்கள்மேல் வெற்றி சிறப்பர். யூதாஸை பாருங்கள். இயேசு தம் சீஷர்கள்மேல் அன்புகூர்ந்தார் என்று வேதம் கூறுகிறது (யோவான் 13:1). யூதாஸையும் அவர் நேசித்தார். இராப்போஜனத்தின்போது சகல அதிகாரமும் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டது. யூதாஸ் தம்மை காட்டிக்கொடுப்பானென்று அறிந்த பின்னரும், அவனுடைய கால்களையும் அவர் கழுவினார்; அப்பத்தைப் பிட்டு, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது," என்றார். ஆனால், யூதாஸ் இயேசுவின் சரீரத்தைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். ஆயினும், தம்மை முப்பது வெள்ளிக்காசுகளுக்காக காட்டிக்கொடுக்கும்படி அவனை அனுப்பினார். இயேசுவை சிறைப்பிடிக்கும்படி யூதாஸ் சேவகர்களை அழைத்து வந்தான். அவரை முத்தமிட்டான். இயேசு, "சிநேகிதனே" என்றார். அவன், "நான் உம் சத்துரு," என்றான். ஆனால் இயேசு, "சிநேகிதனே" என்றார். இயேசு அவனை மேற்கொண்டார்.
அதன் பிறகு இயேசு எல்லா பாடுகளையும் சகித்தார். சிலுவைக்குச் சென்றார். எல்லா தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றினார்; தன் ஜீவனை கொடுத்தார். மூன்றாம் நாளில் அவர் மறுபடியும் எழுந்தார்; ஜீவனோடிருக்கிறார்; வெற்றி சிறந்தார். யூதாஸ், தன்னைத்தானே தூக்கிட்டு இறந்துபோனான். ஆனால், இயேசு, பிதாவை பிரியப்படுத்தியபடியால் தன் சத்துருக்களை ஜெயித்தார். அன்பானவர்களே, இன்றும் ஆண்டவர், "என் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து என்னை பிரியப்படுத்து," என்று கூறுகிறார். இயேசுவின் குரல் என்ன கூறுகிறது? " உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்" (லூக்கா 6:27). ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டுங்கள். உங்கள் ஆஸ்தியை ஒருவன் எடுத்துக்கொண்டால், இன்னும் கொடுங்கள். வேதம், "உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே" (நீதிமொழிகள் 24:17) என்றும், "உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு" (ரோமர் 12:20) என்றும் கூறுகிறது. உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள். அதுவே, இயேசுவின் பாதை. அப்போது இயேசு உங்கள் விரோதிகள்மேல் உங்களுக்கு ஜெயம் கொடுத்து, தாம் உங்கள்மேல் பிரியமாயிருப்பதை உலகிற்குக் காட்டுவார். தேவன் அந்தக் கிருபையை உங்களுக்குத் தருவாராக. நாம் இயேசுவைப்போல, முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக, தேவ அன்பினால் பல லட்சம்பேரை, நம் விரோதிகளையும் நேசிக்கிறவர்களாக இருப்போம். நீங்கள் ஒருபோதும் கீழாவதில்லை; எப்போதும் தலையாக இருப்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்மேல் பிரியமாக இருப்பதோடு, உம்முடைய தயவு என்னை சூழ்ந்துகொள்ளச் செய்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எந்த சத்துருவும் என்னை ஜெயிக்காதவண்ணம் உம் கரம் என்னை பாதுகாப்பதற்காகவும் நன்றி. என் அடிகளைக் காக்கும்படி உம்முடைய தூதனை எனக்கு முன்பாக அனுப்பும். வாழ்வின் எல்லா தருணங்களிலும் உம்முடைய சத்தத்துக்குக் கீழ்ப்படியும்படி இளகியதாக இருக்கும்வண்ணம் என் இருதயத்தை காத்துக்கொள்ளும். உம் பரிசுத்த ஆவியானவரை ஒருபோதும் துக்கப்படுத்தாதபடி, உமக்குப் பிரியமான வழியில் நடப்பதற்கு எனக்கு உதவி செய்திடும். கிறிஸ்துவைப் போல சத்துருக்களை நேசிக்கவும், தீமையை நன்மையினால் வெல்லவும் எனக்குக் கற்பியும். உம் உள்ளத்தை மற்றவர்களுக்குக் காட்டும்படி உம் அன்பினால் என்னை நிரப்பும். உமக்கு சந்தோஷம் தரும்படி நான் வாழட்டும்; உம் கிருபை முற்றும் ஜெயங்கொள்ளுகிறவனா(ளா)க என்னை மாற்றட்டும் என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


