எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்" (சங்கீதம் 103:13) என்ற வசனத்தை தியானிக்கும்படி உங்களை அழைக்கிறேன். எவ்வளவு அன்பான வசனம் இது! நம் பரம தகப்பனின் இருதயம் தம் பிள்ளைகள் அனைவர்மேலும் இரக்கத்தால் நிறைந்ததாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் நடப்பவர்கள் கிருபையை பெற்றுக்கொள்வார்கள் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் நடக்கவேண்டும் என்பதே தேவன் எனக்குக் கற்றுக்கொடுத்த முதல் பாடம். அந்த பரிசுத்த பயமானது, பயங்கரம் அல்ல; அவரோடு நம்மை கிட்டிச்சேர்க்கும் ஆழமான மரியாதை கலந்த அன்பான பயபக்தியாகும். தேவ பயம் நமக்கு இருந்தால் அவரது கிருபை நம்மை தொடரும். தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாயிருந்த தாவீது இதை ஆழமாய் அனுபவித்தான். "கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது" (2 சாமுவேல் 24:14; 1 நாளாகமம் 21:13) என்று கூறினான். அன்பானவர்களே, நீங்கள் இன்று கொடிய இடுக்கணில் இருக்கிறீர்களா? வேதனையும் நிச்சயமின்மையும் உங்களைச் சூழ்ந்திருக்கிறதா? ஆண்டவர் மனதுருக்கமுள்ளவராயிருக்கிறார் என்பதை மறந்துபோகாதிருங்கள். அவரது கரங்களில் விழுந்திடுங்கள்; அவர் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்.

தேவ இரக்கத்தைக் குறித்த சாட்சிகள் வேதாகமத்தில் அநேகமாய் இருக்கின்றன. "அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி...அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம்... ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு" (தானியேல் 9:9,10) என்றும், "நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்" (யோனா 4:2) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். இரக்கமே நம் தேவனின் சுபாவமாகும். அநேகவேளைகளில் நாம் பாடுகளின் வழியாக கடந்து செல்லும்போது, நம்மை தேற்றுவதற்கும் உதவுவதற்கும் சுற்றிலுமிருக்கிறவர்களை நோக்குகிறோம். ஆனால், மக்கள் நமக்கு உதவி செய்ய தவறிவிடலாம். அன்பு சகோதர, சகோதரிகளே, மனுஷனை சார்ந்திருப்பதற்கு பதிலாக, தேவனிடம் ஓடுங்கள். முடிவில்லாத மனதுருக்கம் அவரிடம் மாத்திரமே உண்டு. "நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்" (எபிரெயர் 4:16) என்று வேதத்தில் வாசிக்கிறோம். நீங்கள் தாழ்மையுள்ள இருதயத்துடன் தேவனிடம் செல்லும்போது, தமது சமுகத்திற்குள் அவர் உங்களை வரவேற்கிறார். அங்கே நீங்கள் மன்னிப்பை, பெலனை, சமாதானத்தை கண்டடையலாம். நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரையும் அவர் காண்கிறார். உங்கள் இருதயத்தின் பெருமூச்சுகளையெல்லாம் அவர் கேட்கிறார். உதவிக்காக நீங்கள் கூப்பிடும்போது, அவர் இரக்கமுடன் பதிலளிப்பார். அல்லேலூயா!

பிரியமானவர்களே, நம் நற்கிரியைகளின் அடிப்படையில் தேவ கிருபை கிடைக்காது. அவரது அன்பினால் அது இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. "நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்" (தீத்து 3:4,5) என்று வேதம் கூறுகிறது. எவ்வளவு மகத்துவமான இரட்சகர் நமக்கு இருக்கிறார்! நாம் உடைந்துபோகும்போது அவரது மனதுருக்கம் நம்மை தாங்கும்; அவரது இரக்கம் நம் தோல்விகளை மூடிப்போடும்; அனுதினமும் அவரது அன்பு நம்மை புதுப்பிக்கும். வியாதி, தனிமை, அக்கிரமம் அல்லது குழப்பம் எந்நிலையில் நீங்கள் இருந்தாலும் தைரியமாக அவரது கிருபாசனத்தண்டை வாருங்கள். கர்த்தரின் கரங்கள் விரிக்கப்பட்டிருக்கின்றன. அவர் உங்களை புறக்கணிக்கமாட்டார். புண்பட்ட தன் பிள்ளையை ஒரு தகப்பன் அணைத்துக்கொள்வதுபோல, அவர் உங்களை தம்மோடு சேர்த்துப் பிடிப்பார். அவரது இரக்கம், உங்கள் வாழ்க்கையை மறுபடியுமாய் கட்டியெழுப்பும்; உங்கள் இருதயத்தை சந்தோஷத்தால் நிரப்பும். இரக்கமுள்ள இந்த தேவன் முன் நம்மை நாம் தாழ்த்தி, பெருகிவரும் அவரது கிருபையை பெற்றுக்கொள்வோமாக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய பெரிதான மனதுருக்கத்திற்காகவும் இரக்கத்திற்காகவும் ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, இளைத்துப்போய், உடைந்த நிலையில் இருக்கும் என்னை கண்ணோக்கிப் பாரும். கலங்கிய என் உள்ளத்தை உம் இரக்கம் தேற்றட்டும். என் பாவங்களை மன்னித்து, உம் கிருபையால் அவற்றைச் சுத்தப்படுத்துவீராக. என் வீட்டை சமாதானத்தாலும் தெய்வீக பெலனாலும் நிரப்புவீராக. ஆண்டவரே, என் வாழ்விலிருந்து வியாதியையும் பயத்தையும் வேதனையையும் அகற்றுவீராக. உம் பரிசுத்த ஆவியை என்மேல் ஊற்றி, என் உள்ளத்தை புதுப்பியும். எப்போதும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் நடக்க எனக்கு உதவ வேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.