எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு நமக்குத் தரப்பட்டுள்ள, "நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்" (நீதிமொழிகள் 21:21) என்ற வசனத்தைத் தியானிப்போம். அருமையான இந்த வசனத்தின்படி ஆண்டவர் எல்லாவிதங்களிலும் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேதம், "நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்," (சங்கீதம் 17:15) என்று கூறுகிறது. ஆம், அன்பானவர்களே, நாம் முழு மனதுடன் தேவனை தேடும்போது, பலமுறை தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது, எப்போதும் தேவனை நோக்கிப் பார்த்து ஜெபிக்கும்போது நம் வாழ்க்கை முற்றிலுமாய் மாறும். ஆண்டவர் நமக்கு என்ன செய்வார்? தேவன், "என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்" என்று கூறுகிறார் (ஏசாயா 41:10).

"...அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்" என்றும் வேதம் கூறுகிறது (ஏசாயா 61:10). ஆம், அன்பானவர்களே, நாம் ஆண்டவரைத் தேடும்போது, நம் வாழ்க்கை தானாகவே முற்றிலுமாய் மறுரூபமாகும். கர்த்தர், இரட்சிப்பின் வஸ்திரத்தை உங்களுக்கு உடுத்துவிப்பார். இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராகக் கொண்டிருப்பீர்கள். கர்த்தர் உங்களை நீதியின் விருட்சமாக்குவார். கர்த்தரின் நாமம் உங்கள் வாயிலாக மகிமைப்படும். வேதம், "நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது" என்றும் கூறுகிறது (யாக்கோபு 3:18).

இந்நாட்களில், மக்கள், 'எனக்குச் சமாதானமேயில்லை' என்று கூறுகின்றனர். 'அலுவலகத்தில் சமாதானம் இல்லை', 'காரணமேயில்லாமல் எல்லோரும் எனக்கு விரோதமாய் இருக்கிறார்கள்', 'வீட்டில் சமாதானமில்லை', 'கணவனுக்கும், மனைவிக்கும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே சமாதானமில்லை' என்கின்றனர். ஏன்? எப்படி தேவனை தேடவேண்டுமோ அப்படி அவரைத் தேடாமல் இருக்கிறோம். தேவனுடைய வார்த்தையை வாசிப்பதேயில்லை; ஜெபிப்பதே இல்லை. பேருக்கு இவற்றை செய்கிறோம். எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நீங்கள் பெரிய ஆசீர்வாதத்தை தவறவிடுகிறீர்கள். நீங்கள் உண்மையாய் ஆண்டவரை தேடினால், அவர் உங்களை பூரணமாய் ஆசீர்வதிப்பார் (நீதிமொழிகள் 21:21). முதலில் வீடு சமாதானத்தினால் நிறைந்திருக்கும். கணவன் - மனைவிக்கு இடையே சமாதானம், எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கெல்லாம் சமாதானம் என்று எல்லா இடத்திலும் உங்களுக்குச் சமாதானம் கிடைக்கும். ஆம், உங்கள் செய்கைகளையெல்லாம் இயேசு பொறுப்பெடுத்துக் கொள்வார். இப்போது, தேவன் உங்கள் வாழ்க்கையில் அப்படிப்பட்டதான சமாதானத்தைத் தருவார்.

ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, இன்றைக்கு உண்மையுள்ள இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். நான் செய்யும் எல்லாவற்றிலும் நீதியை பின்பற்றுவதற்கு எனக்கு உதவும். தேவனுடைய வார்த்தையை வாசித்தும், ஜெபித்தும் தினமும் உம்மைத் தேடுவதற்கு எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். இரட்சிப்பின், நீதியின் வஸ்திரத்தை எனக்கு உடுத்துவித்தருளும். ஆண்டவரே, உம் நீதியின் வலக்கரத்தினால் என்னை தாங்கும். உம் சமாதானம் என் உள்ளத்தை, வீட்டை, நான் செல்லும் எல்லா இடத்தையும் நிறைத்தருளட்டும். உம் மகிமைக்கென்று என்னை நீதியின் விருட்சமாக நாட்டியருளும். என் வாழ்க்கையில் உம் அன்பு விளங்கட்டும்; மற்றவர்களுக்கு என் வாயிலாக சமாதானம் சென்று சேரட்டும் என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினால் ஜெபிக்கிறேன், ஆமென்.