அருமையானவர்களே, இன்றைக்கு ஆண்டவர் உங்கள்மேல் ஆசீர்வாதமான மழையை ஊற்றப்போகிறார். ஆசீர்வாதமான மழை. உங்கள் வாழ்க்கையில் வறண்டு போனவை அனைத்தும் செழிக்கும்; தேவன் திட்டம்பண்ணியிருக்கிறவை யாவும் நிறைவேறும். சகலத்தையும் அனுபவிக்கும்படியான அருள் இறங்கும். தயவுசெய்து மனம் கலங்காதிருங்கள். ஆண்டவர் உங்களை மறக்கவில்லை. இயேசுவின் நாமத்தில் இந்த ஆசீர்வாத மழை பெய்வதாக. கண்ணீர் எல்லாம் மறையட்டும். ஆனந்த கண்ணீர் வழியட்டும். இன்றைய வாக்குத்தத்த வசனம், "நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்" (லேவியராகமம் 26:4) என்று கூறுகிறது. நிச்சயமாகவே ஆண்டவர் உங்கள் வேலைக்கான பலனை கொடுப்பார்; நீங்கள் காட்டிய அன்புக்கு பலனை அனுபவிப்பீர்கள். நீங்கள் அன்பின் செயலை, தியாகத்தை செய்திருக்கிறீர்கள். அதற்கெல்லாம் தம் வாக்குப்படியே பரிபூரண பலன் கிடைக்கும்படி தேவன் செய்வார்.
தேவ அன்பின் மழை: வேதத்தில், "இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்" (மத்தேயு 5:45) என்று வாசிக்கிறோம். இதுதான் ஆண்டவரின் இருதயம். "நான் பாவத்தில் இருக்கிறேன். எனக்கு எல்லாம் செழிப்பாக இருக்கிறது. எனக்கு இயேசுவெல்லாம் தேவையில்லை. கடவுளே தேவையில்லை. எல்லாம் நன்றாக இருக்கிறது. நீடித்த ஆயுள் இருக்கிறது," என்று சிலர் சொல்வார்கள். ஆனால், அது ஆண்டவரின் இரக்கம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாதிருக்கிறார்கள்.
அதிகாரத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை அழிக்கிறவர்கள், தங்களுக்கு எதிரியே இருக்கக்கூடாது; தங்கள் பெயர்தான் இருக்கவேண்டும்; தங்கள் திட்டம் நிறைவேறவேண்டும்; தங்களுக்குத்தான் பொருள் வரவேண்டும் என்று அநீதியாய் மற்றவர்களை அழிக்கிறவர்கள், ஏழைகளை விசாரியாமல், விசாரிக்கிறவர்களுக்கும் அநியாயமாய் தடையை உண்டு பண்ணும் பொல்லாத ஜனங்கள்மேலும் ஆண்டவர் மழையை அனுப்புகிறார். இதுதான் ஆண்டவருடைய இருதயம். மனுக்குலம் முழுவதையும் அவர் நேசிக்கிறார். எப்படியாவது அவர்கள் அவர் அன்பை அறிந்து மனம் திரும்பவேண்டுமென்று மழையை அனுப்புகிறார்.
அதனால் நாம் யாரையும் குறைசொல்வதற்கு வழியே இல்லை. நாமும் எல்லாரையும் நேசித்து, எல்லோருக்கும் ஆண்டவருடைய அன்பை கொண்டுவரவேண்டும். பயப்படவும் கூடாது; பொறாமை கொள்ளவும் கூடாது. கோபப்படவும் கூடாது. எரிச்சலடையவும் கூடாது. அத்தனைபேர் மேலேயும் அவர் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். நாமும் அன்பின் மழையைப் பெய்யப்பண்ணவேண்டும்.
தேவனுடைய ஆசீர்வாதமான மழையை அனுபவித்தல் : ஆண்டவர் தம் மழையை எல்லோர் மேலும் பெய்யப்பண்ணுகிறார். மழை எல்லோர்மேலும் பெய்கிறது. நல்ல நிலத்தில் ஏற்ற சமயத்தில் அது பெய்யும்போதுதான் பலன் வருகிறது; விளைச்சல் வருகிறது. மற்றவர்கள், தங்கள் சூழ்நிலையைப் பார்த்து சிலவேளைகளில் மழையை திட்டிவிட்டு போகிறார்கள். அவர்களுக்கு, ஆசீர்வாதத்தின் பலனை அனுபவிக்க தெரியவில்லை. வேதம், "என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்" (2 நாளாகமம் 7:14) என்று கூறுகிறது. ஆண்டவரின் நாமத்தை தரித்துக்கொண்ட ஜனங்கள், இயேசுவின் பெயரை தரித்துக்கொண்ட ஜனங்கள், தங்களை தாழ்த்துகிறார்கள். மழை பெய்வதற்காக, ஆண்டவர் முன்னால், ஜனங்கள், அநீதி செய்கிறவர்கள் முன்னால் கூட தாழ்த்துகிறார்கள். யாருக்கும் பயப்படாமல் ஆண்டவரின் முகத்தைத் தேடுகிறார்கள். அப்போது அவர் மன்னிப்பை அருளுகிறார்; சுகப்படுத்துகிறார்; சீர்ப்படுத்துகிறார்.
தானியேலின் விசுவாசமும் தெய்வீக பாதுகாப்பும்:
தேவனை நோக்கிப் பார்க்கிறவர்களை சிறையில் எறியவேண்டும் என்று தந்திரமாக சட்டம் இயற்றப்பட்டது. தான் சிங்கக்கெபிக்குள் போடப்படுவோம் என்பதை அறிந்தும் தானியேல் எல்லோரும் பார்க்கிறபடி ஜன்னலையெல்லாம் திறந்துவைத்து ஜெபம் பண்ணினார். சிங்கக்கெபிக்குள் அவரை தூக்கி எறிந்தார்கள். ஆனால் ஒரு சிங்கமும் அவரை சேதப்படுத்தாமல் கர்த்தர் பாதுகாத்தார். உயிரோடே திரும்ப வந்தார். இன்னும் உயர்ந்த ஸ்தானத்துக்கு போனார். தானியேலை பாதுகாத்த அதே தேவன் இன்று தம்மை நம்புகிறவர்கள் வாழ்வில் கிரியை செய்ய வல்லவராயிருக்கிறார். அருமையானவர்களே, நாம் தொடர்ந்து உண்மையாய் தேவனுடைய வழிகளை தேடுவோம். நாம் அவருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி, அவருடைய சத்தியத்தில் நடக்கும்போது, அவர் சமாதானத்தை, சீர்ப்படுத்துதலை அளிப்பார்; தேசங்களிலும் நம் வாழ்விலும் ஆசீர்வாதம் வரும்படி செய்வார்.
வேலையிலும் எதிர்காலத்திலும் ஆசீர்வாதம் : அருமையானவர்களே, ஆண்டவர், உங்கள் உழைப்பின் மீது, படிப்பின் மீது ஆசீர்வாதமான மழையை அனுப்புவார். அவற்றுக்கேற்ற பலனை கொடுப்பார். ஸ்திரமாய் உங்களை வாழ்க்கையில் ஸ்தாபிப்பார். வீட்டை, குடும்பத்தைக் கட்டுவார்; பாக்கியத்தைக் கொடுப்பார். அவருடைய அன்பு வெள்ளம்போல உங்கள்மேல் இறங்கி இவற்றை கொண்டு வரும். ஆகவே, தைரியமாய் இருங்கள்; வாக்குத்தத்தத்தை நம்புங்கள்.
ஆவிக்குரிய மழையைக் குறித்த வாக்குத்தத்தம்: "எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது" (யாக்கோபு 5:17,18). அருமையானவர்களே, ஆவிக்குரிய மழைக்காக நாம் ஜெபம்பண்ணவேண்டும். ஆவிக்குரிய முன்மாரி, பின்மாரி எல்லாம் வரும். தேசத்தில் குமாரர், குமாரத்திகளெல்லாம் தீர்க்கதரிசனம் உரைக்கும்படி முன்மாரி மழை, பின்மாரி மழை வரட்டும்; "என் பிள்ளைகள் தீர்க்கதரிசனம் உரைக்கவேண்டும்," என்று ஜெபம்பண்ணுவோம். தேவனின் ஆவிக்குரிய மழை இருதயங்களை நிரப்புட்டும்; வாழ்வை மறுரூபமாக்கட்டும்; அநேக ஜனங்கள் அவர் அன்பண்டை நடத்தட்டும். அவரது ஆசீர்வாதம், சமாதானம், பாதுகாப்பு, உருக்கமான கிருபையால் குடும்பங்கள்மேல், தேசங்கள்மேல் வரட்டும். ஆண்டவரே, விலையேறப்பெற்ற உம் வாக்குத்தத்ததத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, அருமையான ஆசீர்வாத வாக்குத்தத்தத்தை அளித்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய ஏற்றவேளையை நம்பவும், என்மேல் உம் கிருபையின் மழையைப் பெறவும் எனக்கு உதவும். என் உள்ளம் நல்ல நிலமாக, உம் வார்த்தையை ஏற்றுக்கொண்டு, மிகுந்த கனிகளைக் கொடுக்கும்படி செய்திடும். என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதித்து, குடும்பத்தை பெலப்படுத்தும், உம் பாதைகளில் வழிநடத்தும். மற்றவர்கள்மேல் உம் அன்பை பொழிந்திடவும், உமக்கு முன்பாக தாழ்மையுடன் நடக்கவும் எனக்குக் கற்பித்தருளும். உம் ஆவிக்குரிய மழை என் வாழ்வையும் தேசத்தையும் செழிக்கப்பண்ணட்டும். உம் நன்மையையும் சமாதானத்தையும் நான் அனுபவிக்கவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


