அன்பானவர்களே, இன்று காலையும் உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு, "என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்" (சங்கீதம் 2:8) என்ற வசனத்தை தியானிப்போம். இந்த வசனம் கூறுகிறவண்ணம், தேவன், தேசங்களை உங்களுக்குச் சுதந்தரமாக கொடுப்பார். இன்றைக்கு நீங்கள், "எனக்கு ஒரு வேலையிருந்தால், எனக்கு ஒரு வீடு இருந்தால், எனக்கு ஒரு குடும்பம் இருந்தால் அது எனக்குப் போதும்; திருப்தியாக இருப்பேன்," என்று கூறலாம். ஆனால், அன்பானவர்களே, தேவன், தேசங்களை உங்களுக்குச் சுதந்தரமாக கொடுக்க விரும்புகிறார். அவர் உங்களை உயர்வான இடங்களில் வைப்பார்; உங்கள் பேரை பெருமைப்படுத்துவார்; அப்போது உங்கள் மூலம் அவரது நாமம் மகிமைப்படும். ஆம், ஒருவேளை நீங்கள் வேறு ஓரிடத்தில் வேலை கிடைப்பதற்காக காத்திருக்கலாம்; நல்ல நிறுவனத்தில், வேறு ஒரு நாட்டில் அல்லது உங்களுடைய வேலையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல காத்திருக்கலாம். இன்றைக்கு நீங்கள், "நான் என் வேலையில் முன்னேறுவதற்கான வழியே தென்படவில்லை," என்று கூறலாம். ஆனால், அன்பானவர்களே, தேசங்கள் உங்களுக்குச் சொந்தமானவை என்று கூறுகிறார்; அவர் உங்களை உயர்ந்த இடத்தில் வைப்பார்.

திருமதி ராணியின் மகன் வைஷாக்கின் வாழ்க்கையில் இப்படித்தான் நடந்தது. அவர்கள் தன் சாட்சியை பகிர்ந்துகொண்டார்கள். அவர் இந்திய மென்பொருள் நிறுவனம் ஒன்றில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பணிபுரிந்து வந்தார். ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது வேலையில் எந்த பிரச்னையும் இல்லை. திடீரென்று அந்த நிறுவனம் அந்த வேலை முடிந்துவிட்டதாக அறிவித்தது. அவர் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும்; ஆனால், விசா இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இருந்தது. அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தன்னுடைய பழைய நிறுவனத்தில் ஒரு வேலை வாங்கலாம் என்று முயற்சித்தார். ஆனால், அவர்கள் தற்போது எந்த புராஜக்ட்டும் இல்லை என்று கூறிவிட்டார்கள். என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அவர் இருந்தார். அப்போது, அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கவேண்டும் என்று ஜெபிக்கும்படி, Dr. பால் தினகரனுக்கு கடிதம் எழுதினார்கள். Dr. பால் தினகரன், "நிச்சயமாகவே உங்கள் மகனுக்கு வேலை கிடைக்கும்," என்று பதில் எழுதினார்; அவர்கள் முழு விசுவாசத்தோடு தைரியப்பட்டார்கள். அவர் ஜெபித்தபடியே தேவன், அவருக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அரசு சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அருமையான வேலை கிடைக்கும்படி அருள்புரிந்தார். இதற்காக அவரது தாயார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தாங்கும்படி ஸ்தோத்திர காணிக்கை அனுப்பினார்கள். அதற்கு பிறகு, தேவன், அவருக்கு கிரீன்கார்டு கிடைக்கும்படி செய்தார். அன்பானவர்களே, தேவன் அவருக்கு வேலையை மட்டும் கொடுத்து ஆசீர்வதிக்கவில்லை; நிரந்தரமாக அந்த நாட்டிலேயே தங்கும்படியான ஆசீர்வாதத்தையும் கொடுத்தார்.

"நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எரேமியா 23:23). பூமியின் எல்லையெங்கும் அவருக்குச் சொந்தமானதாயிருக்கிறது. ஆகவே, நாம் ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை. நமக்காக எதையும் செய்வதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது. உலகம் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. தேசங்கள் அவருடைய ஆளுகையின் கீழ் இருக்கின்றன. இன்றைக்கு, உங்களுக்காக அவர் மகத்தான திட்டங்களை வைத்திருக்கிறார். அவர் உங்களை வெறுமனே நிலைப்படுத்த மட்டும் விரும்பவில்லை. நீங்கள் அவரை விசுவாசிப்பதால், அவருக்குக் கீழ்ப்படிவதால், அவருடைய நாமத்தை சுமப்பதால் உங்களை மகா உயரங்களுக்கு உயர்த்த, கனப்படுத்த விரும்புகிறார். உங்கள் மூலம் அவருடைய நாமம் மகிமைப்படும். ஆகவே, அன்பானவர்களே, எதைக் குறித்தும் கலங்காதீர்கள். உங்கள் எதிர்காலம் தேவனுடைய கரங்களில் இருக்கிறது.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, தேசங்களை எங்களுக்குச் சுதந்தரமாகவும் பூமியின் எல்லைகளை சொந்தமாகவும் கொடுப்பேன் என்கிற உம்முடைய வல்லமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, சிலவேளைகளில் நான் எது வசதியாக இருக்கிறதோ அது போதும் என்று எண்ணிவிடுகிறேன். ஆனால், நீர் அதிகமதிகமானவற்றை எனக்காக வைத்து வைத்திருக்கிறீர். ஆண்டவரே, நீர் எனக்கென்று ஆயத்தம் பண்ணியிருக்கிற இடங்களுக்கு என்னை உயர்த்தும். என் மூலமாக உம்முடைய நாமம் மகிமைப்படுகிற இடத்தில் என்னை அமர்த்தும். நீர் சமீபத்திற்கும் தூரத்திற்கும் தேவனாயிருக்கிறீர். எனக்காக, என்னை கனப்படுத்த, மகா உயரங்களுக்கு உயர்த்த பெரிதான திட்டங்கள் உம்மிடம் உண்டு என்று நம்புகிறேன். விசுவாசித்து நடப்பதற்கு, உம்முடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவதற்கு, தைரியமாக உம்முடைய நாமத்தை எடுத்துச்செல்வதற்கு எனக்கு உதவி செய்யும். என்னில் உம்முடைய மகிமை காணப்படட்டும்; உம்முடைய நோக்கம் என் வாழ்வில் பரிபூரணமாக நிறைவேறட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.