அன்பானவர்களே, இன்றைக்கு, "கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்" (சங்கீதம் 85:12)என்ற வசனத்தை தியானிக்கிறோம். இன்றைக்கு நீங்கள், "வாழ்க்கையையே இழந்துவிட்டேன். என்னிடம் இருக்கும் எந்தக் காரியத்தாலும் பயனில்லை. வேலையில் சிறந்து விளங்கவில்லை. வியாபாரம் நஷ்டமாக இருக்கிறது. உறவுகளை இழந்துபோனேன். வீட்டில் சமாதானம் இல்லை. படிக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். நான் செய்கிற எந்த முயற்சியும் வாய்க்கவில்லை. கடினமாக முயற்சிக்கிறேன். சிரமப்பட்டு வேலை செய்கிறேன். முயற்சி செய்து படிக்கிறேன்; உறவுகளை பேண முயற்சிக்கிறேன். ஆனால், எந்த முயற்சியும் பலன் தரவில்லை," என்று கூறுகிறீர்களா? அன்பானவர்களே, ஆண்டவர் இன்றைக்கு உங்களை ஆசீர்வதிப்பார். அவர் உங்களுக்கு சிறந்தவற்றையே தந்திருக்கிறார். இன்றிலிருந்து உங்கள் பிரயாசத்திற்கான பலனை காண்பீர்கள்.

பாபி என்ற சகோதரரின் சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். அவர் ஆந்திர பிரதேச மாநிலம் ஏலூருவை சேர்ந்தவர். ஆசிரியராக வேலை செய்த அவருக்கு வியாபாரம் செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தது. 2023ம் ஆண்டில் அவர் விசுவாசத்துடன் தைரியமாக அதில் கால் வைத்தார். வேலையை விட்டுவிட்டு வியாபாரத்தை ஆரம்பித்தார். ஆனால், ஆரம்ப கட்டம் சிரமமாக இருந்தது. வியாபாரத்தில் லாபம் கிடைக்கவில்லை. அவரது நண்பர்கள் அவரை கேலி செய்ய தொடங்கினார்கள். குடும்பத்தினரோ, "உன்னால் ஒரு பிரயோஜனமும் இல்லை. எதையும் உன்னால் ஒழுங்காக செய்ய முடியாது. தேவையில்லாத காரியங்களை செய்து நேரத்தை வீணாக்குகிறாய்," என்று கூறினார்கள். அவர்கள் பேசிய வார்த்தைகள் அவரது உள்ளத்தை குத்தின. மிகுந்த வேதனையடைந்தார்; அதைரியப்பட்டு, மனச்சோர்வுற்றார். செய்யும் காரியம் ஒன்றும் வாய்க்கவில்லை. வியாபாரத்தை மூடிவிடும் முடிவுக்கு வந்தார்.

2024 அக்டோபர் 19ம் தேதி, உள்ளமுடைந்தவராய் யூடியூப்பை பார்த்துக்கொண்டிருந்தார். அதில் இயேசு அழைக்கிறார் தெலுங்கு யூடியூப் சேனலை பார்த்தார். அன்று, இன்றைய இறை தியானம் பகுதியில் Dr. பால் தினகரன் செய்தியளித்தார். சகோதரர் பாபி, அதைக் கவனித்து, அவருடன் இணைந்து ஜெபித்தார். அப்போது அற்புதமான காரியம் நிகழ்ந்தது. ஜெப வேளையில் Dr. பால் தினகரன், "பாபி, நீங்கள் இயேசுவின் நாமத்தில் விடுதலை அடைகிறீர்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்," என்று கூறினார். அதைக்கேட்ட பாபி, அதிர்ச்சியடைந்தார். Dr. பால் தினகரனிடம் அவர் ஒருபோதும் பேசியதில்லை; தன்னுடைய பிரச்னைகளை கூறியதில்லை. ஆனாலும், ஆண்டவர் அவற்றை அறிந்திருந்தார். அந்த தருணத்திலேயே சகோதரர் பாபி, எல்லா கட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். சமாதானம் தன் ஆத்துமாவுக்குள் பாய்ந்து வருவதை உணர்ந்தார். ஒன்றன்பின் ஒன்றாக அவரது பிரச்னைகள் அனைத்தும் மறைந்துபோயின. ஆண்டவர் அவரது வியாபாரத்தை பூரணமாக ஆசீர்வதித்தார். இப்போது அவர் முன்பைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமான லாபத்தை பார்க்கிறார். ஆம், முன்பு அவர் கேலி செய்யப்பட்டார்; உடைந்துபோயிருந்தார்; பயன் கிடைக்காமல் இருந்தார். ஆனால், ஆண்டவர் அவருக்குக் கொடுத்தது நன்மையாய் மாறியது. தேவன் அவரை சந்தித்தார்; தைரியப்படுத்தினார்; அவரது பிரயாசத்தின் பலனை ஆசீர்வதித்தார்.

அன்பானவர்களே, இன்றைக்கு வாழ்வில் எல்லாம் தோல்வியாகிப்போனதுபோல் தோன்றலாம். "நான் ஏன் இந்தக் குடும்பத்தில் இருக்கிறேன்? ஏன் இந்தப் பள்ளியில் இருக்கிறேன்? ஏன் இந்த வேலையை செய்கிறேன்? ஏன் இந்த வியாபாரத்தை செய்கிறேன்?" என்று கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் எண்ணத்தை இன்று மாற்றுங்கள். "ஆண்டவரே, நீர் எனக்குத் தந்திருக்கும் இந்த வேலைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் கணவருக்காக / மனைவிக்காக, பிள்ளைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய பள்ளிக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வியாபாரத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் எல்லாவற்றையும் எனக்கு நன்மையாகவே தந்திருக்கிறீர் என்று நாள்தோறும் நன்றி சொல்லுங்கள். அப்போது, பலனை, அறுவடையை காண ஆரம்பிப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் சமாதானத்தை, சந்தோஷத்தை காண்பீர்கள். வேலையில் விருத்தியை காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள். படிப்பில் இதுவரை கிடைக்காத நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். "ஆண்டவரே, நீர் எனக்கு தந்திருப்பவை நன்மைக்கேதுவானவை," என்று அவரை ஸ்தோத்திரிக்க தொடங்கும்போது, பெருக்கத்தை, பலனை, அறுவடையை காண ஆரம்பிப்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உடைந்த உள்ளத்தோடு, எதுவும் வாய்க்காத நிலையில் உம்மண்டை வருகிறேன். நான் கடினமாய் பிரயாசப்பட்டும் பலனை காண இயலவில்லை. இன்றைக்கு உம்மை நம்புவதற்கு தீர்மானித்துள்ளேன். எனக்கு இதுவரை தந்திருக்கும் ஆசீர்வாதங்களுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் அறுவடையை காணும் முன்னரே, நீர் எனக்காக கிரியை செய்துகொண்டிருக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். நீர் எனக்கு தந்திருப்பவை அனைத்தும் நன்மைக்கானவை; எனக்கு ஆசீர்வாதமானவை என்று முற்றிலும் நம்புகிறேன். என் இருதயத்தை உம்முடைய சமாதானத்தினாலும் சந்தோஷத்தினாலும் நிறைத்து, அவை என் வீட்டினுள்ளும் பாயும்படி செய்யும். வெற்றிக்கான வாசலை திறந்து, என் கையின் கிரியைகளை ஆசீர்வதியும். நீர் நியமித்திருக்கிற வேளையில் என் பிரயாசத்திற்கு பலன் கிடைக்கும்; அறுவடையை காண்பேன் என்று விசுவாசிக்கிறேன். என் குறைவை மாற்றி, பூரணமாக்குவதற்காக உமக்கு நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.