பிரியமானவர்களே, இந்த மாதம் உங்களுக்கு விடுதலையின் காலமாக இருக்கும் என்று ஆண்டவர் அறிவிக்கிறார். பயம், மனச்சோர்வு, அடிமைத்தனங்கள், வியாதி, நம்பிக்கையின்மை போன்ற அநேக கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகள் உங்களைக் கட்டியிருக்கலாம். பட்டமேற்படிப்பு முடித்து, நல்ல வேலையில் சேர்ந்த மகன் திடீரென்று ஆழமான மனச்சோர்வில் விழுந்ததைக் கண்டு தந்தை ஒருவர் அழுதது எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த மகன், ஓர் அறைக்குள் பூட்டிக்கொண்டு, "என் கதை முடிந்துபோனது. நான் இங்கே சாகப்போகிறேன்," என்று கூறிக்கொண்டிருந்தான். அது ஓர் அடிமைத்தனம். ஆனால், ஆண்டவர் இயேசு, கட்டுக்குள் இருக்கிற ஒவ்வொருவரையும் விடுவிப்பதற்காக இந்த உலகத்திற்கு வந்தார். "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவான் 8:32) என்று அவரின் வார்த்தைகள் வல்லமையாக ஒலிக்கின்றன. சத்தியம் என்றால் என்ன? அது தத்துவமோ அல்லது சட்டமோ அல்ல; அவர் ஒரு நபர். இயேசுதாமே, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று கூறினார் (யோவான் 14:6). அவர் உங்கள் எதிர்காலத்தைத் திறக்கிறார்; உங்களுக்கு ஜீவனை அளிக்கிறார்; சத்துருவின் எல்லா பொய்யையும் அகற்றுகிறார். அவர் பிலாத்துவின் முன்பு நின்று தைரியமாக சத்தியத்தின் ராஜாவாக தம்மை பிரகடனம் பண்ணினார். சிலுவையில் அவர் எல்லா பாவத்தையும், எல்லா சாபத்தையும், எல்லா கட்டுகளையும் சுமந்தார். அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்; அவருடைய இரத்தத்தால் கழுவப்படுகிறோம். "ஆண்டவரே, என் வாழ்க்கையை பொறுப்பெடுத்துக்கொள்ளும். மற்றவை எல்லாம் பொய்யாயிருக்கிறது," என்று நீங்கள் சொல்லும்போது, அவருடைய சத்தியமும் அவருடைய ஆவியும் உங்களுக்குள் நுழைந்து சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் விடுதலையையும் அளிக்கிறது.
இயேசு மன்னிக்க மாத்திரம் செய்கிறவரல்ல; அவர் சுத்திகரிக்கிறார்; குணமாக்குகிறார். வேதம், "இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7) என்று சொல்லுகிறது. பாவத்தை எந்த மருந்தாலும், எந்த சடங்காச்சாரத்தாலும், மனுஷீக முயற்சியாலும் கழுவ முடியாது. இயேசுவின் இரத்தத்தால் மாத்திரமே கழுவ முடியும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை என்று வேதம் நினைவுறுத்துகிறது (எபிரெயர் 9:22). ஆகவேதான், தேவன்தாமே இயேசுவின் உருவில் வந்தார்; தம்மைத்தாமே பரிசுத்தப்படுத்தினார்; தம் பரிசுத்த இரத்தத்தை நமக்காக சிந்தினார். விசுவாசத்தினாலே நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் பரிசுத்தமாக்கப்படுகிறீர்கள்; நீதிமான்களாக்கப்படுகிறீர்கள் (1 கொரிந்தியர் 6:11). அவரது காயங்களின் வழியாக சுகம் புரண்டோடுகிறது. வேதம், "அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5) என்று கூறுகிறது. இயேசு தாம் உயிர்த்தெழுந்த பிறகு, தம் காயங்களை, சுகத்தை அளிக்கும்படியாக இன்றும் இருப்பவற்றை காட்டினார். பலர் இந்த வல்லமையைக் குறித்து சாட்சி கூறுகிறார்கள்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு சகோதரி, சாதுராம் என்பவரை திருமணம் செய்தார். அவர் குடிப்பழக்கமுடையவராக இருந்தார். 20 ஆண்டுகள் தம் கணவரின் அடிமைத்தனத்தால் வேதனை அனுபவித்தார்கள். அவரது கல்லீரல் செயல்படவில்லை. மருத்துவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். ஆனாலும், இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் ஏறெக்கப்பட்ட ஜெபங்கள் வாயிலாக விசுவாசம் அந்த சகோதரியின் உள்ளத்தில் எழுந்தது. அவர்கள் கணவர் மீது கைகளை வைத்து ஜெபித்தபோது, இயேசு அவரை பரிபூரணமாக விடுவித்தார். அவரது ஆரோக்கியம் திரும்ப கிடைத்தது; குடும்ப வாழ்க்கை மறுரூபமானது. இன்று அவர்கள் தேவனுடைய ஊழியத்தில் பங்காளர்களாக இருக்கின்றனர்; வியாபாரம் செழிப்பாக இருக்கிறது. மெய்யாகவே, கழுவுகிற, குணமாக்குகிற, செழிக்கப்பண்ணுகிற சத்தியமாக இயேசு கிறிஸ்து இருக்கிறார். அன்பானவர்களே, அதே ஆண்டவர் இப்போது உங்களுக்குள் இருக்கிறார். நீங்கள் விசுவாசிக்கிறபடி, எல்லா கட்டுகளையும் அவர் உடைப்பார். எல்லா வியாதியும் அகன்றுபோகும். கர்ப்பங்கள் திறக்கும்; வியாதிகள் குணமாகும்; உறுப்புகள் இயேசுவின் நாமத்தில் உயிர்ப்பிக்கப்படும். பிசாசு திருடிய பெலன், சமாதானம், சந்தோஷம் எல்லாம் திரும்ப கிடைக்கும். அவரை பெற்றுக்கொள்ளுங்கள்; தேவ ஆவியானவர் உங்களுக்குள் தங்கியிருப்பார் (2 கொரிந்தியர் 3:17,18). நீங்கள் அவரது சாயலுக்கு மறுரூபமாக்கப்படுவீர்கள்; அவரது ஆலயமாக மாறுவீர்கள்; அவரது அதிகாரத்திற்குள் கடந்து செல்வீர்கள் (1 கொரிந்தியர் 6:19; மாற்கு 16:17). இந்த மாதம் பூரண விடுதலையின் மாதமாகும். அதேவேளையில், இயேசு அழைக்கிறார் தொலைபேசி ஊழியத்தில் ஜெபிக்க என்னோடு இணைந்துகொள்ளும்படி உங்களை அழைக்கிறேன். மாதந்தோறும் ஜெப உதவி கேட்டு 9 மொழிகளில் ஏறக்குறைய 5 லட்சம் அழைப்புகள் வருகின்றன. பயிற்சி பெற்ற 360 ஜெப வீரர்கள் இரவும் பகலும் அவற்றுக்கு பதில் அளிக்கிறார்கள். இந்தச் சேவைகள் எல்லாமே இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. ஆனால், ஊழியர்கள், தொழில்நுட்பம், தொடர்ந்த சேவைகள் என்று தேவைகள் அதிகமாகும். இந்த ஊழியத்திற்காக ஜெபிப்பதுடன், எங்களுடன் நிற்கும்போது தேவன்தாமே உங்களை நிச்சயமாய் ஆசீர்வதித்து, அநேகருக்கு விடுதலையை அளிப்பவராக உங்களை பயன்படுத்துவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை விடுதலையாக்கும் சத்தியமாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் பாவமற என்னை கழுவும். என் வாழ்விலிருக்கும் எல்லா கட்டுகளையும், சாபத்தையும், அடிமைத்தனத்தையும் முறித்தருளும். என் சரீரத்தை, சிந்தையை, ஆவியை உம் தழும்புகளால் குணமாக்கும். என் குடும்பத்தை சீர்ப்படுத்தி, எதிர்காலத்தை செழிக்கப்பண்ணும். உம்முடைய ஆவியால் என்னை நிரப்பி, சமாதானத்தை அருளிச்செய்யும். நாளுக்கு நாள் என்னை உம்முடைய சாயலாய் மறுரூபமாக்கும். கட்டப்பட்டிருக்கிறவர்களுக்கு என்னை ஆசீர்வாதமாக மாற்றுவீராக. என்னுடைய விடுதலையைப் பெற்றுக்கொண்டு, உமக்குள் களிகூருகிறேன் என்று இயேசுவின் வல்லமையான நாமத்தில் அறிக்கைசெய்கிறேன், ஆமென்.