அன்பானவர்களே, "கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது" (சங்கீதம் 111:2) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தம். ஆம், கர்த்தர் பெரிய கிரியைகளைச் செய்கிறார். நாம் அவரைப் பணிந்துகொள்ளும்போது, 'கர்த்தாவே நீர் எவ்வளவு அதிசயமானவர்," என்று கூறி, அவருடைய மகத்துவத்துக்காக அவரை துதிக்கிறோம். நாம் அவரைத் துதிக்கும்போது, அற்புதங்கள் நடக்கின்றன. வேதம், "ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" (யோபு 5:9) என்று கூறுகிறது. அன்பானவர்களே, நாம் இந்தக் கிரியைகளை ஆராய்ந்து பார்த்து, நம் வாழ்வில் அந்த அதிசயங்கள் நடந்ததற்காக, அவற்றில் பிரியப்படவேண்டும். "கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்" (சங்கீதம் 77:11) என்று வேதம் கூறுகிறது.

ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் என் கணவர் எங்கள் அனைவரையும் குடும்ப ஜெபத்தில் கூடி வரப்பண்ணுவார். நாங்கள் தேவனை துதித்து, அவருடைய வார்த்தையை தியானிப்போம். அப்போது, ஆண்டவர், அந்த ஆண்டு வாழ்வில் செய்த விஷயத்தை சாட்சியாக பகிர்ந்துகொள்ளும்படி எங்கள் ஒவ்வொருவரையும் கேட்பார். ஆனால், ஆண்டவர் அநேக அற்புதங்களைச் செய்திருக்கிறபடியினால், நாங்கள் அனைவரும் சொல்லிக்கொண்டே போவோம். எங்களுக்கு ஆண்டவர் செய்த காரியங்களை ஒவ்வொருவரும் மற்றவருடன் பகிர்ந்துகொள்வோம். அவற்றை ஆராய்ந்துபார்த்து, தேவனை துதிப்போம். குடும்பமாக ஆண்டவருடைய பெரிய கிரியைகளை நினைவுகூர்வது எவ்வளவு சந்தோஷமான தருணமாயிருக்கிறது.

சகோதரர் கோட்டீஸ்வரராவ் அவரது மனைவி சகோதரி பிரியங்காவை குறித்து அற்புதமான ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்களுக்கு 2016ம் ஆண்டு திருமணமானது. அவர்கள் வாழ்க்கை நல்ல முறையில் நடந்தாலும், பல ஆண்டுகள் கழிந்த பின்னும் அவர்கள் கருத்தரிக்க இயலவில்லை. ஒன்பது ஆண்டுகள் என்ற நீண்ட காலத்திற்குப் பின்னரும் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசித்தனர். ஆனால், எல்லா முயற்சிகளும் வீணாகிப்போயின. அவர்கள் ஏராளமான சிறுமையை அனுபவித்தனர். உடைந்து மனச்சோர்வுக்குள்ளாகினர். அவர்கள் தினமும் இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள். செய்திகளும் ஜெபங்களும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். ஒருநாள், அவர்கள் செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சையை செய்ய தீர்மானித்தனர். மருத்துவர்கள் கருவை சோதிக்க சாதாரண மருந்துகளை கொடுத்தனர். இருபது நாட்கள் கடந்தன. 2024 டிசம்பர் 20ம் தேதி அவர்கள் இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்தனர். என் கணவர் செய்தியை பகிர்ந்துகொண்டிருந்தார். ஜெப நேரத்தில் என் கணவர் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்காக ஜெபித்தார். இந்தத் தம்பதியரும் அதிக விசுவாசத்துடன் ஜெபித்தனர். கணவர், தம் கரத்தை மனைவியின் வயிற்றின்மேல் வைத்து ஜெபித்தார். அற்புதம் நிகழ்ந்தது. 22ம் தேதி அவர்கள் கருவுற்றதற்கான சோதனையை செய்தபோது, கருத்தரித்திருப்பது உறுதியானது. அது, முற்றிலும் தேவன் செய்த அற்புதமாக விளங்கியது. ஒன்பது ஆண்டுகள் நீண்ட காலமாக அவர்கள் வடித்த கண்ணீரை ஆண்டவர் துடைத்தார். சோதனையில் உறுதியானதும் அவர்கள் தங்கள் முதல் பிள்ளையை தேவனுடைய ஊழியத்திற்குக் கொடுக்க தீர்மானித்தனர். ஆண்டவர் மேல் அவர்களுக்கு எவ்வளவு அன்பு பாருங்கள்! அன்பானவர்களே, ஆண்டவர் இப்படியே உங்களுக்கும் செய்வார். கர்த்தருடைய செயல்கள் பெரியவை. அவற்றில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராய்ந்து பார்க்கப்படுகிறவை. உங்கள் வாழ்க்கையிலும் ஆண்டவர் பெரிய கிரியையைச் செய்வாராக.

ஜெபம்:
பரம தகப்பனே, என் வாழ்வில் நீர் செய்யும் பெரியவையும் ஆச்சரியமானவையுமான கிரியைகளுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எண்ணற்ற அற்புதங்களைச் செய்யும் நீர் ஆச்சரியமான தேவனாயிருக்கிறீர். நீர் என் வாழ்வில் செய்த யாவற்றையும் நினைவுகூரவும் ஆராய்ந்து பார்க்கவும் எனக்கு உதவி செய்யும். என் காத்திருப்பின் காலத்தையும், கண்ணீரையும் சந்தோஷமான சாட்சியாக்கும். உம் கிரியைகளில் நான் பிரியமாயிருக்கிறபடியால் அனுதினமும் என் விசுவாசத்தை பெலப்படுத்தும். ஆண்டவரே, நான் உம் நன்மைகளை ஆராய்ந்து பார்த்து உம்மை துதிப்பதால், என் வாழ்வில் சிறந்த அதிசயங்களைச் செய்யும். என் வாழ்க்கை எப்போதும் உம் மகத்துவத்தை அறிவிப்பதாய் இருக்கவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.