அன்பானவர்களே, இன்றைக்கு உங்களோடு பேசுகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். தேவன், "உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்" (சங்கீதம் 37:18) என்று கூறுகிறார். உத்தமனாயிருப்பது என்பது என்ன? மற்றவர்கள் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நேர்மையுடன் வாழ்வதாகும். இந்த உலகில் அநேகவேளைகளில் மக்கள் பார்ப்பதற்கு ஒருவிதமாகவும், அந்தரங்கத்தில் இன்னொருவிதமாகவும் வாழ்கிறார்கள். சுயநலம், வஞ்சகம், நேர்மையின்மை எல்லா இடங்களில் காணப்படுகிறது. ஆனால், ஆண்டவர், நேர்மையாக, உண்மையுடன், பரிசுத்தமாக வாழும்படி அழைக்கிறார். தமக்கு முன்பாக உத்தமமாக வாழ்வதை நாம் தெரிந்துகொள்ளும்போது, நம்முடைய சுதந்தரம் எப்போதும் நிலைத்திருக்கும்படி தாம் அக்கறையாயிருப்பதாக வாக்குப்பண்ணுகிறார்.
பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் நேர்மையை பற்றிய சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவரது ஆட்டோவில் பணப்பை ஒன்றை யாரோ விட்டுச்சென்றுவிட்டார்கள். அதில் ஐந்து லட்ச ரூபாய் பணம் இருந்தது. அவரும் அவருடைய குடும்பத்தாரும் அவ்வளவு பணத்தை வாழ்க்கையில் பார்த்ததில்லை. அதைக் கொண்டு அவர்களுடைய பல பிரச்னைகளை எளிதாக தீர்த்திருக்கலாம். ஆனால், அதை தான் வைத்துக்கொள்வதற்குப் பதிலாக உரியவரிடம் ஒப்படைத்தார். அந்தப் பணத்தை சிகிச்சைக்காக அவர் வைத்திருந்தார். அந்தச் செய்தி எங்கும் பரவியது. காவல்துறையினர் அவர் கௌரவித்தனர். செய்தியாளர்கள் குடும்பத்தினரை பேட்டி கண்டனர். அவருடைய நற்பெயர் நாடெங்கும் பரவியது. என்னே ஒரு சாட்சி! அவருடைய நேர்மையான செயல், அவருக்கு மட்டுல்ல, அவரது குடும்பத்தினருக்கே கனத்தைக் கொண்டு வந்தது. நாம் உத்தமமாய் வாழும்போது தேவன் இதைச் செய்கிறார். அவர் நம்மை உயர்த்துவதோடு, நம் சுதந்தரத்தையும் ஆசீர்வதிக்கிறார்.
அவ்வண்ணமே, அன்பானவர்களே, ஆண்டவர் உங்கள் உத்தமத்தை பார்க்கிறார். அவர் உங்கள் நேர்மையை, உத்தமமாய் வாழ்வதற்கான அர்ப்பணிப்பை கனம்பண்ணுகிறார். உலகம் மறந்தாலும், தேவன் ஒருபோதும் மறக்கமாட்டார். அவர் உங்கள் தேவைகளை அருளிச்செய்வார்; உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்; உங்கள் பெயர் கனத்துடன் நினைவுகூரப்படும்படி செய்வார். ஆம், நீங்கள் உத்தமமாய் வாழும்போது, உங்கள் பிள்ளைகளும் சந்ததியினரும் தேவனுடைய தயவை ருசிப்பார்கள். ஆகவே, நம்முடைய வேலையில், படிப்பில், வீடுகளில், சமுதாயங்களில் உண்மையுடன் வாழ்வதற்கு இன்று புதிதாய் தீர்மானிப்போம். ஆண்டவர் நிச்சயமாகவே உங்கள்பேரில் அக்கறையாயிருப்பார்; உங்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, இன்றைக்கு நீர் அளிக்கின்ற வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உமக்கு முன்பாக உத்தமமாய் வாழ எனக்கு உதவி செய்யும். நேர்மையாகவும் உத்தமமாகவும் நடப்பதற்கு எனக்கு பெலன் தாரும். என்னுடைய ஒவ்வொரு வார்த்தையும் செய்கையும் உமக்குப் பிரியமாய் இருப்பதாக. என் குடும்பத்தை உம் கீழ் பாதுகாப்பீராக. என் பிள்ளைகளுக்கு நல்ல வேலைகளை தந்து, அவர்கள் எதிர்காலத்தை தந்து பாதுகாப்பீராக. உம் கிருபையால் என் சுதந்தரம் என்றென்றைக்கும் நிலைத்திருப்பதாக. ஆண்டவரே, மக்களின் கண்கள் முன்பாக என்னை கனப்படுத்தும். எல்லா தடைகளையும் அகற்றி, என் தேவைகளை சந்திக்கவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.