எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு தியானிப்பதற்கு ஆண்டவர் ஓர் அருமையான வசனத்தைக் கொடுத்திருக்கிறார். வேதம், "அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா" (சங்கீதம் 148:14) என்று கூறுகிறது. அன்னாள் ஒரு குழந்தைக்காக கர்த்தரிடம் ஜெபித்தாள். அவள், "நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்," என்று கூறினாள். வேதம், "என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது" (1 சாமுவேல் 2:1) என்று அவள் மகிழ்ந்ததாகக் கூறுகிறது. அன்பானவர்களே, கர்த்தரிடமிருந்து உங்களுக்கு ஏதேனும் ஆசீர்வாதம் வேண்டுமா? உங்களையே தாழ்த்தி கர்த்தரை நோக்கிப் பாருங்கள். நீங்கள் வேண்டுதல் செய்யுங்கள்; அவர் உங்கள் கூப்பிடுதலுக்குச் செவிகொடுத்து தமது ஆசீர்வாதங்களையெல்லாம் உங்களுக்கு அருளிச்செய்வார். "நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்" (சங்கீதம் 89:17) என்று வேதம் கூறுகிறது. இது தேவனின் வாக்குத்தத்தம். ஆகவே, நாம் ஆண்டவரை நோக்கிப் பார்க்கவேண்டும்.
நாம் அவரை இறுகப்பற்றிக்கொண்டு, "ஆண்டவரே, நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால் நான் எங்கே செல்வேன் அப்பா?" என்று கேட்கவேண்டும். தேவனுடைய பரிசுத்தவான்கள் அனைவரும் இப்படியே கர்த்தரிடம் பேசினார்கள். தேவன் அவர்களுக்கு உதவி செய்து, அவர்களுக்குத் தேவையானவற்றையெல்லாம், அவர்கள் விரும்பியவற்றையும், கேட்டவற்றையும் காட்டிலும் அதிகமாக வழங்கினார். கர்த்தர், "நான் அபிஷேகம்பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்" (சங்கீதம் 132:17) என்று கூறுகிறார். ஆம், ஆண்டவர் தாம் அபிஷேகம் பண்ணினவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணுகிறார். அன்பானவர்களே, நாம் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ணப்படும்போது, அநேக ஆசீர்வாதங்களை பெறுகிறோம். "அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா" (சங்கீதம் 148:14) என்று வேதம் கூறுகிறது. தமக்குச் சொந்தமானவர்களையும் அவரால் சொந்தமென்று அழைக்கப்பட்டவர்களையும் கர்த்தர் நிச்சயமாக உயர்த்துவார்.
என் வாழ்க்கையிலும் நான் குழந்தையற்றிருந்தேன். பலமுறை இந்தச் சாட்சியை பகிர்ந்துகொண்டுள்ளேன். நான் இரண்டு குழந்தைகளை இழந்தபோது, மக்கள், "நீ அதிகமாய் ஜெபிக்கிறாய்? குழந்தைகளை ஏன் இழந்தாய்?" என்று கேலி செய்தார்கள். அதுதான் உலகம். ஆனால் நாம் ஆண்டவரை இறுகப் பற்றிக்கொள்ளவேண்டும். ஆண்டவர் இரண்டு அழகிய குழந்தைகளைக் கொடுத்து எங்களை ஆசீர்வதித்தார். பாருங்கள்! அவர் இப்போது என் மகனை எப்படி பயன்படுத்துகிறார்! அன்பானவர்களே, அவ்விதமே நீங்கள் இன்றைக்கு ஆசீர்வதிக்கப்படுவீர்கள். தேவனை பற்றிக்கொள்ளுங்கள்; அவர் உங்களை மகா உயரங்களுக்குக் கொண்டு செல்வார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் பெலனாகவும் என் ஆசீர்வாதத்தின் கொம்பாகவும் இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே என் வாழ்க்கையின் மகிமையாய், என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர். உம்மை மட்டுமே பற்றிக்கொள்ள எனக்கு உதவும். தயவாய் என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; அன்னாளை நினைவுகூர்ந்ததுபோல, என் வேண்டுதல்களை நினைவுகூரும். உம்முடைய பரிசுத்த ஆவியால் என்னை அபிஷேகித்தருளும். உம் தயவு என்னை உயர்த்தட்டும். என் காத்திருக்குதலின் காலத்தை களிப்பானதாக்கும்; என் துயரத்தை துதியின் கீதங்களாக மாற்றும். உம் வெளிச்சத்தை என்மீது வீசப்பண்ணி, என் வாழ்க்கைக்கு ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணும். என் வாழ்க்கை, உம் பரிசுத்த நாமத்திற்கு மகிமை சேர்க்கும் சாட்சியாக அமையட்டும். என் வாழ்க்கையை, நம்பிக்கைகளை, என் எதிர்காலத்தை உம் அன்பின் கரங்களில் ஒப்படைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


