அன்பானவர்களே, மகிழ்ச்சியோடு உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடமிருந்து கிடைக்கும் வெற்றி மனப்பான்மையை இன்றைக்கு பெற்றுக்கொள்வோம். "கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்" (எரேமியா 20:11) என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பயங்கரமான பராக்கிரமசாலியாய் இருந்து அவர் தம் பிள்ளைகளை நடத்துகிறார்; நமக்கு வெற்றியின்மேல் வெற்றியை தருகிறார். அவர் நமக்காக வாசல்களைத் திறந்து, நம் வாழ்வில் தேவ சித்தம் நிறைவேறும்படியாய் எல்லா எதிர்ப்புகளையும் அழித்துப்போடுகிறார். ஆம், அன்பானவர்களே, இன்றும், நாம் எல்லா காரியங்களிலும் அவர் நமக்காக பயங்கரமான பராக்கிரமசாலியாய் இருப்பார் என்று கூறுவோம். ஆனாலும் சிலவேளைகளில் நம்மால் அவரை உணர இயலவில்லையே என்று நினைப்போம்; ஏன் ஆண்டவர் நமக்காக பராக்கிரமசாலியாய் எழும்பவில்லை என்று யோசிப்போம். ஏனென்றால், நம் எல்லா கலக்கங்களையும் பயங்களையும் அவருக்கு முன்பாக சுமந்து வந்து, "நான் இதைச் செய்தாகவேண்டும்; நான் வெற்றி பெற்றாக வேண்டும்; எல்லாவற்றையும் கையாளவேண்டும்," என்று கூறுவோம். எல்லா பாரங்களையும் நாமாகவே எடுத்துக்கொள்வோம். அன்பானவர்களே, அப்படியல்ல! உங்கள் யுத்தங்களில் பயங்கரமான பராக்கிரமசாலியாக இருப்பதற்கு ஆண்டவருக்கு இடங்கொடுங்கள்.
நான் இளைஞனாயிருந்தபோது, மாணவர் மத்தியில் முதலாவது செய்தியை அளித்தேன். அதை என் தாத்தா ஆயத்தம் பண்ணிக் கொடுத்திருந்தார். நான் பேச ஆரம்பித்தபோது, என் கண்களைத் தாழ்த்தி வெறுமனே அதை வாசித்துக்கொண்டிருந்தேன். தலையை உயர்த்தி மாணவர்களைப் பார்த்தபோது, வியர்க்க ஆரம்பித்தது; வேகவேகமாக செய்தியை வாசித்து முடித்தேன். மிகவும் நடுங்கினேன். சின்ன பையனான நான் எப்படி மற்றவர்கள் முன்னால் பேச முடியும் என்று திகைத்தேன். என் ஊழியத்தில் பின்னான நாட்களிலேயே, "ஆண்டவரே, எனக்குள் வெளிப்படுத்தும். எனக்குள் எழும்பும். நீர் பேசும். எனக்காக பேசும். அற்புதங்களைச் செய்திடும்," என்று ஜெபிக்கக் கற்றுக்கொண்டேன். எல்லாவற்றையும் ஆண்டவர் இயேசுவுக்கு ஒப்படைக்க ஆரம்பித்த பிறகு, பரிசுத்த ஆவியானவர் என் உள்ளத்துக்குள் எழும்புகிறார்; எனக்காக பயங்கரமான பராக்கிரமசாலியாக யுத்தம்பண்ணுகிறார்.
பிறகு அவரது ஞானம், அவரது கிருபை அனைத்தும் பாய்வதற்கு ஆரம்பிக்கும். தேவ வல்லமை பாய்ந்து, நன்மையான தாக்கத்தையும் பெரிய வெற்றியையும் அளிக்கும். அன்பானவர்களே, அவ்வண்ணமே, இன்றைக்கு கர்த்தர் உங்களை எழுப்புவாராக; எல்லா யுத்தத்திலும் ஜெயத்தை அருளுவாராக. பாரத்தை தனியே சுமக்காதீர்கள். உங்களுக்காக போராடுவதற்கு அவருக்கு இடங்கொடுங்கள். இந்த வாக்குத்தத்தத்தை இப்போதே சுதந்தரித்து, அவருடைய ஜெயத்தில் நடப்போமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீரே திடமானவரும், எல்லா யுத்தங்களிலும் வெற்றி பெறுகிற பயங்கரமான பராக்கிரமசாலியுமாயிருக்கிறீர். நீர், ஒருபோதும் என்னை சுமக்கும்படி கூறாத பாரங்களைச் சுமப்பதற்காக என்னை மன்னித்தருளும். இன்றைக்கு, எல்லா பயத்தையும், எல்லா போராட்டத்தையும், எல்லா சவால்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். ஆண்டவரே, எனக்குள் எழுந்து, எனக்காக யுத்தம் செய்யும். என் வாழ்வில் உம் ஞானம், கிருபை, வல்லமை எல்லாம் பாயட்டும். ஒருவரும் பூட்டக்கூடாதபடி வாசல்களை திறந்தருளும்; எல்லா எதிர்ப்புகளையும் அழித்துப்போடும். உம் பிரசன்னத்தில் என்னை தைரியத்தாலும் திடநம்பிக்கையாலும் நிறைத்திடும். பூரண வெற்றிக்குள் என்னை நடந்திடச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


