அன்பானவர்களே, தம் பிள்ளைகள் வாழ்ந்து சுகமாயிருக்கவேண்டுமென்றே தேவனின் இருதயம் விரும்புகிறது. வேதத்தில், "பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்" (3 யோவான் 2) என்று வாசிக்கிறோம். இது, தேவன் நம் ஆவிக்குரிய வளர்ச்சியை பற்றி மட்டுமல்ல, நம்முடைய சரீர சுகத்தையும், அன்றாட வாழ்வில் பலனையும் குறித்து அக்கறையாயிருக்கிறார் என்று காண்பிக்கிறது. உங்கள் கையின் வேலைகளிலும், உங்கள் குடும்பத்தாரின் வேலைகளிலும், பிள்ளைகளின் பிரயாசங்களிலும் ஆசீர்வாதத்தை கட்டளையிடுவதாக கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார் (உபாகமம் 30:9). தம் ஜனங்கள்பேரில் அவர் கெம்பீரமாக களிகூருகிறார் (செப்பனியா 3:17). தேவன் உங்களைப் பார்க்கும்போது, தமக்குப் பிரியமான பிள்ளை என்று அழைத்து, "உன்னை ஆசீர்வதித்து, உன்னைப் பெருகப்பண்ணுவேன்," என்று கூறுகிறார். நம்முடைய பரலோக தகப்பனின் இருதயம் அப்படியே இருக்கிறது.
தாவீதைப் பாருங்கள். "ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்" (அப்போஸ்தலர் 13:22) என்று கர்த்தரே அவனைப் பற்றிக் கூறினார். தேவன், அவரது இருதயத்தைத் தேடுகிறவர்களையும், அவர் வழியில் நடக்கிறவர்களையும் செழிக்கப்பண்ணுகிறார். அவ்வாறே, நாம் நம்மை தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தால், அவர் நம்மில் பிரியப்படுகிறார். உபத்திரவங்கள், துரோகங்கள் நமக்கு விரோதமாக எழும்பும்போது, "என் சித்தமல்ல, உம் சித்தமே ஆகக்கடவது," என்று நாம் கூறும்போது, கர்த்தர் நம் கீழ்ப்படிதலை கனப்படுத்துவார். இயேசு, சிலுவைக்கு முன்பாக கெத்செமனேயில் இதைக் காண்பித்தார் (லூக்கா 22:42). வேதனையாக இருந்தாலும், அவர் பிதாவின் சித்தத்திற்கு தம்மை முழுவதுமாக ஒப்படைத்தார். அவ்வாறே, தேவனுடைய பலத்த கரத்தின் கீழ் நாம் நம்மை தாழ்த்தும்போது, அவர் ஏற்றவேளையில் உயர்த்துவார். பிரயாசப்படுவதால் அல்ல; தேவனுடைய சித்தத்திற்கு ஒப்படைப்பதன் மூலமாகவே செழிப்பு புரண்டோடும்.
ஆகவே, தேவ பிள்ளையே, உங்கள் எதிர்காலத்தைக் குறித்து பயப்படாதிருங்கள்; கலங்காதிருங்கள். உங்கள் ஆத்துமாவை, சுகத்தை, கையின் பிரயாசங்கள் எல்லாவற்றையும் வர்த்திக்கப்பண்ணுவதாக தேவன் வாக்குக் கொடுத்துள்ளார். இயேசுவின் நாமம், எல்லா நாமத்திற்கும் மேலாக உயர்த்தப்படுமளவுக்கு தம்மை அவர் தாழ்த்தினார் என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது (பிலிப்பியர் 2:6-10). நீங்கள் கீழ்ப்படிதலோடு நடந்தால் கனப்படும்படி தேவன் உங்களை உயர்த்தி, அளவின்றி ஆசீர்வதிப்பார். முழங்கால்கள் யாவும் கிறிஸ்துவுக்கு முன்பாக முடங்கும்; அவரில் நீங்கள் சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் செழிப்பையும் காண்பீர்கள். தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படியே உங்கள் ஆத்துமா, சுகம், வாழ்க்கை ஆகியவை செழித்திருப்பதாக.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நான் வாழ்ந்து சுகமாயிருக்கவேண்டும் என்று விரும்பும் உம் இருதயத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் ஆத்துமா பரிசுத்தத்திலும் சமாதானத்திலும் செழித்திருப்பதாக. தினமும் எனக்கு நற்சுகத்தையும் பெலனையும் தந்து ஆசீர்வதித்தருளும். என் கைகளின் பிரயாசத்தையும் என் குடும்பத்தாரின் பிரயாசத்தையும் வர்த்திக்கப்பண்ணுவீராக. என் பிள்ளைகளும் சந்ததியினரும் உம் ஆசீர்வாதத்தில் நடப்பார்களாக. உம்முடைய பரிபூரண சித்தத்திற்கு எப்போதும் என்னை ஒப்புக்கொடுக்க உதவி செய்யும். கெத்செமனேயில் இயேசு தாழ்மையாக இருந்ததுபோல நானும் இருக்க எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். உமது நேரத்தில் என்னை உயர்த்தும்; என் வாழ்வை கனத்தினால் நிரப்பும். என் வாழ்வில் உமது சந்தோஷமும் கெம்பீரமும் நிறைத்திருக்கட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.