"இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?" (உபாகமம் 33:29) என்று மோசே கூறுகிறான். அன்பானவர்களே, கர்த்தரால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். உலகம் உங்களை அழிப்பதற்கு முயற்சிக்கலாம்; ஆனால், தேவன் உங்களை இரட்சிப்பார். உலகம், "இந்த மனுஷனை / மனுஷியைப்போல இருப்பவர் யார்? இவர் தேவாதிதேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர். இவள் கர்த்தாதி கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவள்," என்று கூறும். ஆம், ஆண்டவர் உங்களை இரட்சித்திருப்பதால், இரட்சிப்பதால் நீங்கள் மிகவும் கனம் பெறுவீர்கள். முதலாவது, தேவன் நோவாவை இரட்சித்தார். அவன் நீதிமானாயிருந்தான் (ஆதியாகமம் 6:9). எல்லோரும் அவனை குறைகூறினாலும், அவனைச் சுற்றிலும் அனைவரும் பாவத்தில் வாழ்ந்தாலும், அவனும் அவன் குடும்பத்தினரும் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக குற்றமற்றவர்களாக இருந்தார்கள். அவன் தேவனுடைய சித்ததத்தை செய்தான். ஆம், தேவன், அவனை கட்டும்படி கூறியதால், எதுவுமே இல்லாத இடத்தில் ஒரு பேழையை அவன் உருவாக்கினான். அவன் ஒருபோதும் தேவனை கேள்விகேட்கவில்லை. அவன் தேவனுடைய ஞானத்தோடும், வெளிப்பாட்டுடனும் சென்றான். எல்லோரும் அவனை கேள்விகள் கேட்டிருப்பர். அவனோ, "தேவன் விரும்புகிறார்; நான் பேழையை உருவாக்குகிறேன்," என்று கூறியிருப்பான். ஆகவேதான், வெள்ளப்பெருக்கின்போது தேவன் அவனை காப்பாற்றினார்.

ஆம், நாங்கள் அப்படித்தான் காருண்யாவை கட்டினோம். எங்கள் தனிப்பட்ட கடன்கள் மத்தியில், தேவன் என் தந்தையிடம், "ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டு," என்று பேசினார். அதை அவர் அறிவித்தபோது, அவரது சிறுநீரகங்கள் பழுதுபட்டன. என் தங்கை ஏஞ்சல் கொடிய கார் விபத்தில் கொல்லப்பட்டாள். தேவன், நாங்கள் செய்யும்படி விரும்பியதை செய்வதற்கு வழியே இல்லை. எங்கள் உள்ளங்கள் உடைந்தன. நாங்கள், "ஏன்?" என்று கேட்டோம். தைரியத்தை, விசுவாசத்தை இழந்துபோனோம். நாங்கள், "நாமே அழிந்துபோனோம். எப்படி காருண்யாவை கட்டும்படி நம்மால் எழும்ப முடியும்?" என்று கேட்டோம். ஆனால், தேவன் என் தந்தைக்கு புதிய சிறுநீரகத்தைக் கொடுத்தபோது, இயேசு தோன்றி, "என் பிள்ளைகளே, நான் சாத்தானுக்கு சவால் விட்டிருக்கிறேன். பாடுகளின், வேதனையின் மத்தியிலும் என் பிள்ளைகளை என்னை விடமாட்டார்கள் என்று தேவதூதர்களிடம் சவால் விட்டிருக்கிறேன். நீங்கள் என்னை விட்டுவிடுவீர்களா?" என்று கேட்டார். பரிசுத்த ஆவியானவர் எங்களைப் பெலப்படுத்தினார்; எங்களுக்குள் எழுந்தார். நாங்கள், "ஆண்டவரே, உம்மை மறுதலித்தால் நாங்கள் எங்கே போவோம்? நாங்கள் பரலோகத்தை அடையவேண்டும். இரக்கம் காட்டும். ஆண்டவரே, எங்களுக்கு பெலன் தாரும்," என்று கூறினோம்.

உலகம் எங்களை கேலி செய்தது. இரண்டு கிறிஸ்தவ பத்திரிகைகள், "பாருங்கள். தேவன், இவர் காருண்யாவை பல்கலைக்கழகமாக கட்டும்படி விரும்பினார். இவர் ஆரம்பித்தார். தேவன் இவர் மகளைக் கொன்றுபோட்டார். இவர் சரியான தீர்க்கதரிசி இல்லை. இவரைப் பின்பற்றாதிருங்கள்," என்று எழுதின. ஆனாலும் எல்லாவற்றின் மத்தியிலும் நாங்கள் எழுந்து நின்றோம். பரிசுத்த ஆவியானவர் எங்களைப் பெலப்படுத்தினார். நாங்கள், "பொல்லாத ஜனங்களின் கேலியை கேட்பதைக் காட்டிலும் தேவனுக்குக் கீழ்ப்படிவோம்," என்று கூறினோம். இன்று காருண்யா பல்லாயிரக்கணக்கானோருக்கு ஆசீர்வாதமாக விளங்குகிறது. காருண்யாவில் படித்தவர்கள் உலகமெங்கும் ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். அவர்கள் உயர்ஸ்தானங்களில் இருப்பதோடு, மக்களுக்கு தேவ அன்பினால் சேவையும் செய்கிறார்கள். தேவன் இந்தப் பெரிதான ஆசீர்வாதத்தை எங்களுக்குத் தந்தார். எங்கள் மாணவர்கள் தேவனுடைய சுபாவத்துடன் தனித்துவமாக உருவாக்கப்படுகிறார்கள். ஆம், அன்பானவர்களே, மிகவும் எதிர்ப்பான சூழ்நிலையில் நாங்கள் கட்டினோம். இப்போது நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. தேவன் எங்களை, எங்கள் குடும்பத்தை, பெயரை, ஊழியத்தை, காருண்யாவை பாதுகாத்துள்ளார். அநியாயமான குற்றச்சாட்டுகள் வந்தன. காருண்யாவை அழிக்கும்படி அதிகாரமுள்ள உயர் ஸ்தலங்களிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் தேவன் எங்களுக்கு நீதியானவர்கள் என்ற பெயரை தருவதில் மேற்கொண்டார். காருண்யா, தேவ மகிமைக்காக நிற்கிறது. உங்கள் வாழ்க்கையும் அப்படியே நிற்கும். உங்கள் குடும்பம் நிற்கும். பெருத்த தாக்குதல்களின் மத்தியிலும் நீங்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதால், அவருக்கு முன்பாக நீதிமானாக இருப்பதால் தேவன் உங்களுக்காக நிற்பார். அவர் உங்களைப் பார்த்து பிரியப்பட்டு, "உன்னைப்போல் யார் இருக்கிறார்கள்? நீ ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவன்(ள்). என்னால் இரட்சிக்கப்பட்டவன்(ள்)" என்று கூறுவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மால் நான் இரட்சிக்கப்பட்டதினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உலகமே எனக்கு விரோதமாக எழுந்தாலும், நீரே என் கேடகமும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர். கேள்விகேட்காமல் உம் சத்தத்துக்கு கீழ்ப்படிய நோவாவின் விசுவாசத்தையும் நீதியையும் எனக்கு அருளிச்செய்வீராக. ஆண்டவரே, என் இருதயம் உடைந்துபோயிருக்கும்போதும் நான் பெலவீனமாய் உணரும்போதும் என்னை பெலப்படுத்தும். உம் பரிசுத்த ஆவியானவர் எனக்குள் எழும்பி, திடமாக நிற்பதற்கான தைரியத்தை தருவாராக. என் வாழ்க்கையில் எல்லா உபத்திரவத்தையும் உம் மகிமைக்கான சாட்சியாக மாற்றுவீராக. என் வாழ்வில் உம் கரத்தை உலகம் கண்டு, "இவரைப்போல் இருக்கிறவர் யார்?" என்று வியக்கட்டும். ஆண்டவரே, உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.