எனக்கு அருமையான தேவ பிள்ளையே, ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் அருமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு நாம், "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" (மத்தேயு 5:13) என்ற வாக்குத்தத்த வசனத்தை தியானிப்போம். ஆம், நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.

உப்பின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். போதிய உப்பு இல்லாவிட்டால் நாம் சமைக்கிற எந்த உணவும் மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கும். "ஏதோ ஒன்று குறைகிறது. இது ருசியாக இல்லை," என்று அவர்கள் கூறுவார்கள். உப்பு அவசியமானது. அதேவண்ணம், "உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள்" (மாற்கு 9:50) கூறுகிறது. தேவனுடைய வார்த்தை நம் வாழ்வில் உப்புள்ளவர்களாக, போதிய உப்புள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று போதிக்கிறது. அதற்கு மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பது என்று அர்த்தம். நாம் என்ன பேசினாலும், எதைச் செய்தாலும் உணவுக்கு உப்பு சேர்ப்பதுபோல, நன்மையை செய்து, சமாதானத்தை காத்து, கிருபையை கூட்டவேண்டும். "யோசேப்பு கனிதரும் செடி" (ஆதியாகமம் 49:22) என்று வேதம் கூறுகிறது. யோசேப்பின் வாழ்க்கை நன்மை நிறைந்ததாக, உப்பு நிறைந்ததாக இருந்தது. நீங்களும் நானும் அவ்வாறு இருப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், அப்படிப்பட்ட வாழ்க்கையை எப்படி வாழ முடியும்? ஆவிக்குரியவிதத்தில் 'உப்பாக' எப்படி இருக்க முடியும்? "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்" (யோவான் 15:7,8) என்று ஆண்டவர் கூறுகிறார்.

அருமையானவர்களே, உங்கள் வாழ்க்கையை சீர்தூக்கிப்பாருங்கள். நீங்கள் கனி தரும் செடியாக இருக்கிறீர்களா? உங்கள் வார்த்தைகள், கிரியைகள் பரலோகத்தின் தயவு நிறைந்தவையாக இருக்கின்றனவா? அவை சமாதானத்தைக் காக்கின்றனவா? மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறதா? தம்முடைய பிரசன்னத்தால் உங்களை நிரப்பும்படி ஆண்டவரிடம் கேளுங்கள். அவர் உங்களை வழிநடத்துவார். அவர் தமது ஆவியால் உங்களை நிறைத்து, நீங்கள் செல்லுமிடமெல்லாம் உப்பாக இருக்கும்படி செய்வார். நீங்கள் அவரது மகிமைக்காக பிரகாசிப்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம பிதாவே, என்னை பூமிக்கு உப்பாயிருப்பதற்கு அழைத்திருப்பதற்காக ஸ்தோத்திரிக்கிறேன். மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக, சமாதானத்தைக் காக்கிறதான, நற்கனி கொடுக்கின்ற வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். அனுதினமும் உம்மில் நிலைத்திருக்கவும் அதனால் உம் வார்த்தை, அதிகமாய் என்னில் வாசம்பண்ணவும் கற்பித்தருளும். நான் அன்போடு பேசும்படியாகவும், நோக்கத்தோடு செயல்படும்படியும் உம்முடைய மகிமைக்கென்று பிரகாசிக்கும்படியும் என் இருதயத்தை உம்முடைய பரிசுத்த ஆவியால் நிரப்பியருளும். என்னுடைய வாழ்க்கையில் உம்முடைய தயை விளங்கவும் நான் செல்லுமிடமெங்கும் கிறிஸ்துவின் நற்கந்தத்தை சுமந்து செல்லவும் கிருபை செய்தருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.