அன்பானவர்களே, இன்றைக்கு தம்முடைய ஜீவன் அருளும் வார்த்தைகளை உங்களுக்குத் தருவதற்காக தேவன் உங்கள் மத்தியில் இருக்கிறார். "மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்" (சங்கீதம் 66:12) என்ற வசனம் அதை நமக்கு நினைவுப்படுத்துகிறது. தேவன் இப்படிப்பட்ட உபத்திரவங்களை ஏன் அனுமதிக்கிறார்? சாதாரண இளைஞர்களுக்கு இராணுவம், அதிகாலையில் எழும்புதல், நீண்டதூரம் ஓடுதல், சேற்றில் தவழ்ந்து வருதல், தடைகளை தாண்டுதல் போன்ற பயிற்சிகளைக் கொடுப்பதுபோல, தேவன், நம்மை பெலப்படுத்துவதற்காகவே நம் வாழ்வில் சவால்களை அனுமதிக்கிறார். நமக்கு வரும் சோதனைகள் நம்மை தண்டிப்பதற்காக அல்ல; அவருடைய அழைப்புக்கு நம்மை ஆயத்தமாக்கவும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் உண்மையுள்ளவர்களாக, நீடிய பொறுமையோடு இருக்கிறோமோ என்பதை பார்ப்பதற்காகவுமே வருகின்றன.
வாழ்வில் வரும் சோதனைகள், அவை தனிப்பட்ட வாழ்க்கையானாலும், வணிகமானாலும், உறவானாலும் சகிப்புத்தன்மையையும், நம்பிக்கையையும், தேவனுக்குக் கீழ்ப்படிதலையும் காட்டுவதற்கான வாய்ப்புகளே ஆகும். சிரமங்களை எதிர்கொண்டதும் பலர் விலகிவிடுவர். குறைசொல்லுதல், போராட்டங்கள், முடியாத சூழ்நிலைகளிலும் நீண்டபொறுமையோடு இருப்பவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். நாம் தீயிலும் தண்ணீரிலும் அவரை நம்பும்போது, விசுவாசத்தை, அர்ப்பணிப்பை காட்டும்போது, நம்மை நம் அழைப்புக்கு நேராக வழிநடத்துவதுடன், தாம் வாக்குப்பண்ணியுள்ள செழிப்புக்குள் கொண்டு வந்து சேர்ப்பார். இராணுவ வீரர்கள், இராணுவ சேவைக்கு கடினமான பயிற்சிகளினால் ஆயத்தப்படுத்தப்படுவதுபோல, வாழ்க்கையின் சவால்களின் மூலம் நீடிய பொறுமையை பெற்று, தேவன் தருகிற ஆசீர்வாதங்களையும், பொறுப்புகளையும் ஏற்கும்படி நாம் ஆயத்தப்படுத்தப்படுகிறோம்.
இன்றைக்கு, நிச்சயமற்ற, கடினமான பாதையிலும் தேவனை முழுவதுமாக நம்புவதற்கு தீர்மானிப்போம். எத்தனை சவால்கள், சோதனைகள் எதிராக வந்தாலும் ஆண்டவருக்காக வாஞ்சையுடன், நீடிய பொறுமையுடன் ஓடுவோம். நாம் தேவனை விசுவாசத்தோடு உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும்போது, அவர் நம்மை பெலப்படுத்துவார்; தாங்குவார்; செழிப்பான இடத்தில் நம்மை கொண்டு சேர்ப்பார். தேவன், தம் பிள்ளைகள் ஸ்திரமானவர்களாகவும், அசையாதவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும், தாம் அவர்கள் வாழ்க்கையில் வைத்திருக்கும் அழைப்பை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமானவர்களாகவும் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்.
ஜெபம்:
ஆண்டவர் இயேசுவே, ஒருபோதும் தளர்ந்திடாத இருதயத்தை எனக்கு தந்தருளும். எல்லா உபத்திரவங்களின் மத்தியிலும் உம்மை முழுவதுமாக நம்பும்படி, விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் என்னை பெலப்படுத்தும். சகித்துக்கொண்டு, மேற்கொள்ளும்படி என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பும். உம்முடைய அழைப்பை நிறைவேற்றுகிற, செழிப்புள்ள இடத்துக்கு என்னை கொண்டு வந்து சேர்ப்பீராக என்று ஜெபிக்கிறேன், ஆமென்.