அன்பானவர்களே, கர்த்தர், "என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்" (நீதிமொழிகள் 8:17) என்று கூறுகிறார். ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் தேவனுக்கு இடங்கொடுத்தால் அவரைக் கண்டடைவோம். நாளின் அமைதியான வேளையில், இருளாக இருந்தாலும் எழுந்து அவரை உண்மையாய் தேடுங்கள். அப்போது, அவரை நிச்சயமாய் கண்டடைவீர்கள். கண்டுகொள்ளும் விதமாக தேடினால் அவரை கண்டடையலாம். என் கணவர், "ஆண்டவர்தாமே என்னை அனுதினமும் எழுப்புகிறார்," என்று கூறுவார். அதிகாலை மூன்று மணி அவர் எழும்பும் நேரமாகும். அடிக்கடி அவர் இதைக் கூறுவார். அதுவே, உங்களோடு பேசுவதற்கு தேவன் விரும்பும் நேரம் ஆகும். அந்த நேரத்தில் ஆண்டவர் தீர்க்கதரிசன வார்த்தை மூலமாக என் கணவரோடு பேசுவார். அவர் உரைப்பது நிறைவேறும் என்று வேதம் கூறுகிறது. அவர் காலையில் பேசும் வார்த்தைகள் அன்றைய தினம் முடியும் முன்பதாகவே நிறைவேற்றப்படும். நம் தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார்! கர்த்தர், "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்" (எரேமியா 29:13) என்று கூறுகிறார்.

வேதம், ஆவியோடும் உண்மையோடும் அவரை தொழுதுகொள்ளவேண்டும் என்று கூறுகிறது. ஆண்டவரில் நம் முழு உள்ளத்தோடும் அன்புகூரவேண்டும். இயேசு, "என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்," என்று கூறுகிறார். ஆம், நம் முழு உள்ளத்தோடும் ஆண்டவரை தேடினால், அவர் நமக்கு வெளிப்படுவார். நாம் தேவனை தரிசிக்கலாம். நாளின் 24 மணி நேரமும் அவரது பிரசன்னத்தை உணரலாம். நாங்கள் குடும்பமாக அதிகாலையில் தேவனை தேடுவோம். எங்கள் தகப்பன் சகோ.டி.ஜி.எஸ். தினகரன் அதிகாலையில் எழும்புவது வழக்கம். குடும்பத்தில் உள்ளவர்களையெல்லாம் காலை ஆறு மணிக்கு கூடிவரும்படி செய்வார். நாங்கள், அதாவது நான், என் கணவர், பிள்ளைகளை வர தாமதித்தால், அவர், "காலமே தேவனை தேடு..." என்று பாட ஆரம்பிப்பார். பாடலை நாங்கள் கேட்கின்ற தருணத்தில் ஹாலுக்கு ஓடிப்போவோம். எங்கள் பெற்றோரோடு இணைந்து ஜெபிப்போம். அது அருமையான வேண்டுதலின் தருணமாக அமையும். அந்த ஜெபங்களால்தான் நாங்கள் இப்போதிருக்கிறவண்ணம் காணப்படுகிறோம்.

அன்பானவர்களே, நாம் அதிகாலையில் தேவனை தேடினால், குடும்பமாக ஆசீர்வதிக்கப்படுவோம். அப்போது நம்மை சுற்றிலுமிருக்கும் மக்கள், அவர்கள் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று நம்மை குறித்துக் கூறுவார்கள். நாம் தேவனை உண்மையாய் தேடினால், அவரை கண்டடைவோம். அவரை கண்டடைவதற்கு ஒரு வழியானது, குடும்பமாய் உண்மையான ஆசீர்வாதத்தை கொண்டிருப்பதாகும். குடும்பமாய் ஆண்டவர்பேரில் அன்புகூருங்கள். குடும்பமாய் அவரை சேவியுங்கள். எப்போதும் குடும்பமாய் கூடியிருங்கள். அப்போது தேவன் நம்மை நேசிப்பார்; நமக்கு தம்மை காண்பிப்பார். நாம் குடும்பமாய் தேவனுக்கு சாட்சியாக நிற்க முடியும். அன்பானவர்களே, தேவனே உங்களோடிருப்பாராக.

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, உம் வார்த்தையின் மூலமாக என்னோடு பேசுகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அதிகாலையில் எழுந்து என் நாளை உம் பிரசன்னத்தோடு தொடங்குவதற்கு உதவி செய்யும். என் முழு உள்ளத்தோடும் ஆத்துமாவோடும் உம்மை நேசிக்க எனக்குக் கற்றுத்தாரும். என் எண்ணங்களும் செயல்களும் உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வரட்டும். காலைதோறும் உம் வார்த்தையின் மூலமாக என்னோடு பேசி, வழிநடத்தும். என் உள்ளத்தை உம் சமாதானத்தாலும் பெலனாலும் நிரப்பும். ஒவ்வொரு நாளும் உம்மண்டை என்னை கிட்டிச்சேர்ப்பீராக. ஆண்டவரே, ஒன்றாய் இணைந்து உமக்கு ஊழியம் செய்ய அர்ப்பணிக்கும் எங்களை ஆசீர்வதிப்பீராக. நாள் முழுவதும் உம் பிரசன்னம் எங்களோடிருப்பதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.