பிரியமானவர்களே, மேற்கண்ட வாக்குத்தத்தத்தின்படி, தேவனாலே நீங்கள் பராக்கிரமம் செய்வீர்கள். ஆங்கில வேதாகமத்தில், தேவனாலே வெற்றி பெறுவோம் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆண்டவர் உங்களுக்கு வெற்றியைத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் அமிழ்ந்துபோன நிலைமையில், தள்ளப்பட்ட நிலைமையில், எவ்வளவு முயன்றாலும் உயர முடியாத நிலைமையில் தவித்துக்கொண்டிருக்கலாம். ஆண்டவருடைய வல்லமையினால் நீங்கள் பராக்கிரமம் செய்து எழும்புவீர்கள். சோர்ந்துபோயிருக்கும் உங்களுக்கு அவர் சத்துவத்தைக் கொடுத்து, கழுகுகளைப்போல செட்டைகளை அடித்து உயரே எழும்பி மகிழ்ந்திருக்கும்படி பராக்கிரமம் செய்வார். கிறிஸ்து இயேசுவினாலே நமக்கு ஜெயம்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 15:17). அவர் மரணத்தை விழுங்கி, அதை ஜெயமாக வென்றார். தேவனுடைய ஆவி அவருக்குள் இருந்தபடியினால், அவர் மரித்தப்பிறகும் அவருக்குள் ஜீவனைக் கொடுத்து, மூன்றாம் நாள் அவரை உயிரோடு எழுப்பியது. மரித்தேன் ஆனாலும் இதோ சதாகாலமும் உயிரோடிருக்கிறேன் என்று சொல்லும்படி அவர் மரணத்தை ஜெயமாக வென்று பராக்கிரமம் செய்து, உயிரோடு எழும்பினார். அதற்குத்தான் பரிசுத்த ஆவியினால் நாம் நிரப்பப்படவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. ஆம், நம்முடைய பெலவீனங்களில் நமக்கு உதவி செய்யவே தேவன் தமது ஆவியைக் கொடுக்கிறார். தேவனுடைய ஆவி நம்மை உயிர்ப்பிக்கிறது.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு, வயிற்றில் புற்றுநோய் வந்தது. அது அவரை கொன்றுவிடும் என்ற அளவில் இருந்தபொழுது, மருத்துவர்கள் அவரது வயிற்றில் ஆபரேஷன் பண்ணி அதை எடுத்தார்கள். ஆனால், அதை முழுமையாக எடுக்க முடியவில்லை. இதற்குமேல் ஒன்றும்பண்ண முடியாது என்ற நிலைமை வந்தபொழுது, "அவருக்குள் தகடு ஒன்றை பொருத்துவோம், கேன்சர் வைரஸ் எழும்பும்பொழுது, அதிலுள்ள அணுசக்தி வெளிப்பட்டு அவைகளை அழித்துப்போடும்" என்று முடிவெடுத்து, அவருடைய சரீரத்திற்குள் தகடு ஒன்றை பொருத்தினார்கள்.
அதைப்போலவே, ஆண்டவர் நமக்குள்ளும் பரிசுத்த ஆவியானவரை வைத்திருக்கிறார். அவருக்குள் இருக்கும் ஜீவன், நம்முடைய ஆத்துமாவை எல்லா போராட்டங்கள் மத்தியிலும் உயிரோடு காத்துக்கொள்ளும். சரீரம் ஒருநாள் மரித்துப்போகும். ஆனால், அதுவரைக்கும் பராக்கிரமம் செய்து, வெற்றிப்பெற்று இந்த உலகத்தில் ஜெயத்தோடு வாழும்படியாக பரிசுத்த ஆவியானவரை நம்முடைய ஆவியிலே தருகிறார். அப்படி பாக்கியம் பெற்ற ஒருவருடைய 

இளம் வயதிலே கணவரை இழந்த சகோதரி பிரேமா, தன்னுடைய இரண்டு பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். லேப் டெக்னீசியன் படித்திருந்த அந்த சகோதரிக்கு, உதவி செவிலியர் வேலை தான் கிடைத்தது. மிகவும் குறைவான சம்பளத்தில் 8 வருடங்கள் வேலை செய்தார்கள். அவர்களுக்கு வேலையில் உயர்வும் கொடுக்கப்படவில்லை. பொறாமை பிடித்த மக்கள் அவர்களுக்கு விரோதமாய் செயல்பட்டார்கள். இந்த நிலைமையில், அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் நடைபெற்ற உபவாசக் கூட்டத்திற்கு வந்தார்கள். ஜெப வீரர்கள், "ஆண்டவர் உங்கள் கைகளின் கிரியைகளை ஆசீர்வதிக்கிறார்" என்று சொல்லி ஜெபித்தார்கள். என்ன ஆச்சரியம், அடுத்த மாதமே அவர்களுக்கு வேலையில் உயர்வும், வரவேண்டிய சம்பள பாக்கி தொகையும் சேர்ந்தே வந்தது. ஜெப கோபுரத்திற்கு வந்து ஜெபித்ததினிமித்தம் ஆண்டவர் அவர்களுக்கு பெரிய அற்புதத்தை செய்தார். இன்றைக்கு அவர்களுடைய மகன் இன்ஜினியரிங் முடித்து ஒரு கம்பெனியில் வேலை செயகிறான். மகள் இன்ஜினியரிங் படிக்கிறாள். இப்போது அவர்கள் சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அதே கிருபையை கர்த்தர் உங்களுக்கும் தந்து, உங்களை பராக்கிரமம் செய்கிறவர்களாக வைப்பார்.

ஜெபம்:
அன்புள்ள இயேசப்பா, மேற்கண்ட வசனத்தின்படி, நீர் என்னை ஆசீர்வதிக்கப் போவதற்காக உம்மை துதிக்கிறேன். உமது பங்காளராக இருக்கும் என்னை நீர் ஆசீர்வதித்து உயிர்ப்பியும். உமது வாசல்களைத் திறந்து, எனக்கு வரவேண்டிய ஆசீர்வாதங்கள் அனைத்தும் சேர்ந்து வரும்படி செய்யும். உயர்வு வரட்டும். வீட்டை கட்டித் தாரும். இந்த ஆசீர்வாதங்களை நீர் எனக்கு தருவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். எல்லாம் இளைப்பாறுதலாய் இருக்கட்டும். எல்லாவற்றிலும் எனக்கு வெற்றியைக் கட்டளையிடுவீராக. ஒன்றிலும் தோல்வி இருக்கவே கூடாது. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.