அருமையானவர்களே, ஆண்டவர் உங்களோடு இருக்கிறார். இன்று அவரது கிருபை உங்கள்மேல் வரும்; நீங்கள் பிரகாசிப்பீர்கள். நாம், "விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்" (லூக்கா 1:45) என்ற வசனத்தை தியானிப்போம். வேதம், எப்படிப்பட்டவர்களை பாக்கியவான் அல்லது பாக்கியவதி என்று அழைக்கிறது? தாம் உரைத்த வாக்குத்தத்தங்கள் யாவற்றையும் ஆண்டவர் நிறைவேற்றுவார் என்று விசுவாசிக்கிறவர்களையே அப்படி கூறுகிறது. நாம் தினமும் இப்படியே தேவனுடைய வார்த்தையை வாசிக்கவேண்டும். இந்த வசனத்தை வாசிக்கும்போதே, அவரது வாக்குத்தத்தங்களை உங்கள் வாழ்வில் நிறைவேற்றுவார் என்று விசுவாசித்து தேவனை துதித்திடுங்கள். தேவனுடைய வார்த்தையை தினமும் வாசிக்கும்போது, தம் வார்த்தையினால் உங்களோடு நேரடியாக பேசும் அவர், அதை நிறைவேற்றுவதற்காக உங்களுடன் வருவதற்காக அவரை துதித்திடுங்கள்.
பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் தேவன் உரைத்த வார்த்தைகளை எளிதாக எடுத்துக்கொள்ளாதிருங்கள். கூட்டங்களுக்கு வரும் மக்கள் பலர், பிரசங்கிப்பவர் உரைக்கிற ஒவ்வொரு வார்த்தையையும் மெய்யாகவே ஏற்றுக்கொள்கிறார்கள்; ஆச்சரியவிதமாக, அந்த வார்த்தைகள் அவர்கள் வாழ்வில் நிறைவேறுகின்றன. ஜெபிக்கப்படும் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்; அற்புதங்களைக் காண்கிறார்கள். ஆனால் சிலர், வார்த்தையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்ல; அது குறித்து தீர்ப்பு எழுதுவதற்கு வருகிறார்கள். ஒருபோதும் அவர்களால் அந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால், வேதம், தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று கூறுகிறது.
இந்த ஆண்டும் இயேசு அழைக்கிறார் ஊழியத்தைக் குறித்து தேவன் Dr. பால் தினகரன் வாயிலாக உரைத்துள்ளார். உங்களை எழுப்பி கட்டுவிப்பார் என்பதே அந்த வாக்குத்தத்தம். தேவன் நம்மை கௌரவிப்பார் என்ற பாடலை நாங்கள் பாடியுள்ளோம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் நம் வாழ்வை கட்டியெழுப்பி எல்லா ஜனங்கள் முன்பும் நம்மை பெருமைப்படுத்துவார். எல்லா பாடலையும்போல அதை வெறுமனே கேட்க மாத்திரம் செய்யாதிருங்கள். தேவனுடைய தீர்க்கதரிசன வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்; அது உங்கள் வாழ்வில் நிறைவேறும். ஆம், பிரியமானவர்களே, நீங்கள் தொடர்ந்து இந்த தினசரி வாக்குத்தத்தங்களை கவனித்தால், ஒவ்வொரு வார்த்தையும் தேவனால் நிறைவேற்றப்படுவதையும் காண்பீர்கள்.
மரியாள் இயேசுவின் பாதத்தினருகே அமர்ந்து ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்துக்கொண்டிருந்தாள். எல்லா ஆசீர்வாதத்தையும் அவள் பெற்றுக்கொண்டாள்; அவரது வார்த்தையே அவள் இருதயத்தின் ஜீவனாய் விளங்கியது. ஆனால், மார்த்தாள் மிகவும் வேலையாயிருந்தாள். இயேசு தன் வீட்டுக்கு வந்தது அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது; ஆனால், அவள் அவரது வார்த்தைகளை கவனிக்கவில்லை. அதன் விளைவாக, அவள் சந்தோஷத்தையும் இயேசுவின் வாக்குத்தத்தத்தின் வாயிலாக கிடைக்கும் ஆசீர்வாதங்களையும் இழந்துபோனாள். பிரியமானவர்களே, இன்றும் தேவனின் வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, பாக்கியம் பெற்றவர்களாக மாறுங்கள். உங்கள் உள்ளத்தில் விசுவாசம் எழும்பட்டும்; அவரது ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்வினுள் பாய்ந்து வரட்டும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு நீர் உரைத்திட்ட எல்லா வாக்குத்தத்தத்தையும், இந்த ஊழியத்தின் பங்காளர்களுக்கு உம் ஊழியரான Dr. பால் தினகரன் வாயிலாக வெளிப்படுத்திய ஒவ்வொரு தீர்க்கதரிசன வாக்குத்தத்தத்தையும் விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, உம் பிள்ளைகளின் வாழ்வில் எல்லா வாக்குத்தத்தங்களும் நிறைவேறப்பண்ணும். இந்த ஆண்டில் அவர்கள் வாழ்வு கட்டியெழுப்பப்படட்டும்; தடைகள் யாவும் விழுந்துபோகட்டும். மீண்டும் அவர்கள் வாழ்வு பிரகாசம் அடையட்டும். அவர்கள் வீட்டை, இல்லறத்தை, வேலையை வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் உம் சித்தப்படியே கட்டியெழுப்பும். நீர் உரைத்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறுவதாக; விசுவாசத்தோடு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு நாங்கள் களிகூர உதவிடவேண்டுமென்று உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


