எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்" (சங்கீதம் 25:14) என்ற வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தேவ பயம் இருக்கவேண்டும். அவரது பிரமாணத்திற்கு முன்பாக நாம் நடுங்கவேண்டும். அப்போது அவருக்கு முன்பாக நம் வாழ்க்கை மகிமையாக இருக்கும். ஆபிரகாமின் வாழ்க்கை கர்த்தருக்கு முன்பாக மகிமையானதாக இருந்தது. "நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்" (ஆதியாகமம் 22:12) என்று கர்த்தர் சொன்னதாக வேதம் கூறுகிறது. கர்த்தர் தன்னிடம் கூறிய யாவற்றையும் தேவ பயத்தோடு ஆபிரகாம் நிறைவேற்றினான். ஆம், அன்பானவர்களே, தேவ பயம் உங்களுக்கு இருந்தால், கர்த்தர் உங்கள் வாழ்க்கையைப் பார்த்து, அளவற்ற விதத்தில் உங்களை ஆசீர்வதிப்பார்.
"கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 112:1; 128:1). பக்திமான்கள் மாத்திரமல்ல, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், பூமியின் பிள்ளைகளானாலும் தேவ பயம் அவர்களுக்கு இருந்தால், கர்த்தரால் பூரண ஆசீர்வாதத்தை பெறுவார்கள். "கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்," என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 115:13).
எனக்கு பதினாறு வயதாயிருந்தபோது, தேவ பயம் இல்லாதவளாய் காணப்பட்டேன். ஒருநாள், தேவன், தேவ பயத்தைக் குறித்தும் அதைக்கொண்டு எப்படி தம்முடன் நெருங்கி ஐக்கியம் கொள்வதென்றும் தெளிவாக பேசினார். அப்போதிலிருந்து கர்த்தரை நெருங்கி, தேவ பயத்துடன், அவரது கட்டளைக்கு நடுங்கி வாழ தொடங்கினேன். என்னுடைய பதினாறாம் வயதிலேயே இயேசு எனக்கு சிறந்த நண்பரானார்.
வாலிப பிள்ளைகளே, இந்த உலகத்தின் மக்களை அல்ல; இயேசுவையே உங்கள் சிநேகிதராக்கிக்கொள்ளுங்கள். இயேசுவை உங்கள் சிநேகிதராக்கிக்கொள்ளும்போது, அவர் உங்களை வழிநடத்துவார்; உங்களுக்குத் தேவையான யாவற்றையும் அருளுவார். "அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்," (சங்கீதம் 145:19) என்று வேதம் கூறுகிறது. அன்பானவர்களே, இன்று உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். தேவ பயம் உங்களுக்கு இருக்கிறதா? தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறீர்களா? தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறீர்களா? ஜெபத்தில் அவருடன் பேசுகிறீர்களா? தேவன் உங்களுக்கு முன்செல்வார்; உங்களை வழிநடத்துவார்; எல்லா ஆசீர்வாதங்களையும் தந்தருளுவார். இப்போதும் நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிப்போம்; அவரை நோக்கி பார்ப்போம்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம் வார்த்தைக்கு கீழ்ப்படிவதில் பிரியமாயிருக்கும் பரிசுத்த பயத்தை எனக்குள் வைத்திடும். உம் கட்டளைகளுக்கு நடுங்கவும், தினமும் உம்மோடு நெருங்கி நடக்கவும் எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். ஆண்டவரே, நீரே எனக்கு உற்ற நண்பராக இருந்து, உம் சித்தத்தின்படியே என்னை வழிநடத்துவீராக. உம்மிடமிருந்து என்னை புறம்பே தள்ளி உலகப்பிரகாரமாக என்னை இழுக்கக்கூடிய எல்லா காரியங்களையும் அகற்றுவீராக. உண்மையாய் ஜெபிக்கவும், உம் வார்த்தையை வாசிக்கவும், உம் சத்தத்துக்கு கீழ்ப்படியவும் எனக்கு உதவும். உம் ஆசீர்வாதங்கள், தயவு, உடன்படிக்கை எப்போதும் என்மேல் இருப்பதாக என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


