எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, தேவன், "கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது" (2 கொரிந்தியர் 5:14) என்ற வசனத்தில் காணப்படும் வல்லமையான சத்தியத்தை நாம் தியானிக்கவேண்டும் என்று விரும்புகிறார். எவ்வளவு ஆச்சரியமான நிச்சயம்! கிறிஸ்தவ வாழ்க்கை முழுவதுமே கிறிஸ்துவின் அன்பை அனுபவித்து வாழ்வதில்தான் கட்டப்பட்டுள்ளது. வேதம், "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்" (1 யோவான் 3:1) என்று கூறுகிறது. பரம தகப்பன் தம் அன்பை நம் வாழ்க்கைக்குள் ஊற்றியுள்ளார். ஆண்டவர் இயேசு, சிலுவையில் தம் ஜீவனைக் கொடுத்து அதை முழுமையாக விளங்கப்பண்ணினார். அவருடைய பாடுகள் மற்றும் தியாகத்தின் மூலமாக, தேவ அன்பின் ஆழத்தை நாம் காண்கிறோம். ஆகவேதான் கர்த்தர், "மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன்" (ஓசியா 11:4) என்று கூறுகிறார். மெய்யாகவே, இந்த அன்பு, நம்மை அவரை நோக்கி இழுக்கிறது; அவருக்குள் நம்மை காக்கிறது.
நான் எப்படி இந்த தெய்வீக அன்பை அறிந்துகொண்டேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. என்னுடைய பதினாறாம் வயதில் என்னுடைய தகப்பனின் அன்புக்காய் நான் அதிகம் ஏங்கினேன். உறைவிடப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என்னை மாதம் ஒருமுறை கூட வந்து அவரால் பார்க்க இயலவில்லை. நான் மனங்கசந்து அழுதேன்; அவரது அன்புக்காக ஏங்கினேன். அந்தத் தருணத்தில் ஆண்டவர் அற்புதமான வழியில் என்னிடம் வந்தார்; என்னை தம் தெய்வீக அன்பினால் நிறைத்தார். அந்த நாள் முதல், என் இருதயத்தில், பிதாவாகிய தேவன், குமாரன், பரிசுத்த ஆவியானவரின் அன்பை அனுபவித்து வருகிறேன். அந்த அன்பு என்னைப் பலப்படுத்தி, தேவ பிள்ளையாக மாற்றியது. வேதம், "இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்" (கொலோசெயர் 3:14) என்று கூறுகிறபடி, அவருடைய அன்பைத் தரித்துக்கொள்ளக் கற்றுக்கொண்டேன். அவருடைய அன்பு மன்னிக்கும்படியாக, மற்றவர்களைச் சகித்துக்கொள்ளும்படியாக, பக்தியுள்ள இயல்பில் நடக்கும்படியாக என்னை மறுரூபப்படுத்தியது (கொலோசெயர் 3:13). உண்மையாக, நாம் அவருடைய அன்பைப் பெற்றுக்கொள்ளும்போது, அவரைப்போலவே முற்றிலும் மாறுகிறோம்.
அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய இந்த தெய்வீக அன்பை அனுபவித்திருக்கிறீர்களா? வேதம், பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது (ரோமர் 5:5) என்றும், "தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்" (யூதா 21) என்றும் கூறுகிறது. இது, இரட்சிப்புக்கான அன்பு மாத்திரமல்ல; அனுதின வாழ்க்கைக்கான அன்புமாகும். இது மற்றவர்களை மன்னிக்கவும், மனருக்கத்துடன் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடு ஊழியம் செய்யவும் வைக்கிறது. அது நம் வாழ்வில் தேவனுடைய இரக்கமும் வல்லமையும் விளங்கும்படி செய்கிறது. இந்த அன்பை நீங்கள் இதுவரை அனுபவிக்காவிட்டால் இன்றே உங்கள் இருதயத்தைத் திறந்திடுங்கள். ஏற்கனவே அவரது அன்பை அறிந்திருந்தால், கிறிஸ்துவின் அன்பு உங்களை நெருக்கி ஏவும்வண்ணம், பரிசுத்த ஆவியானவர் உங்களில் நிரம்பி வழிந்திட இடங்கொடுங்கள்; அப்போது உங்களைச் சுற்றியிருக்கும் உலகத்துடன் அந்த அன்பை பகிர்ந்துகொள்ள முடியும்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம்முடைய கிருபைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எனக்காக சிலுவையில் மரிப்பதற்காக இயேசுவை அனுப்பியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய அன்பினால் என்னை உம் பிள்ளையென அழைக்கிறதற்காக உமக்கு நன்றி. என் உள்ளத்தை பரிசுத்த ஆவியினாலும் தெய்வீக அன்பினாலும் நிரப்பியருளும். கிறிஸ்து எனக்கு மன்னித்ததுபோல, நானும் மன்னிக்க உதவி செய்தருளும். உம்முடைய அன்பினால் என்னை உம்மைப்போல மறுரூபமாக்கும். எல்லா பெலவீனங்களிலும் உம் அன்பு என்னைப் பெலப்படுத்துவதாக. மற்றவர்களுக்கு மனதுருக்கத்தின், இரக்கத்தின் பாத்திரமாக என்னை உருவாக்கும்.நித்திய ஜீவன் வரைக்கும் எப்போதும் கிறிஸ்துவின் அன்பில் என்னை காத்தருள வேண்டுமென்று இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.