அன்பானவர்களே, உங்கள் நீதிக்கான பலனை உங்களுக்குத் தருவதற்கு தேவன் விரும்புகிறார். நீதியின் பலன்களை நீங்கள் பெற்று சந்தோஷத்தோடு அனுபவிக்கவேண்டும். தேவன், நீங்கள் அதை அனுபவிக்கும்படி செய்வார். "உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்" (ஏசாயா 3:10) என்று வேதம் கூறுகிறது. ஆம், நீதியான கிரியைகளின் பலன் என்ன? அது சிட்சை என்று வேதம் கூறுகிறது (எபிரெயர் 12:11). தேவன், ஒழுக்கமாக வாழ்வதற்கான கிருபையை உங்களுக்கு அருளுவார்; அது நீதி, சமாதானம் ஆகிய அறுவடையைக் கொடுக்கும். நீங்கள் நீதிமானாயிருந்தால், சமாதானம்பண்ணுகிறவராகவும் இருப்பீர்கள். "நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது," (யாக்கோபு 3:18) என்று வேதம் கூறுகிறது. ஆம், தேவ நீதியானது எல்லாருக்கும் சமாதானத்தை அளிப்பவராக உங்களை உருவாக்குகிறது. நீங்கள் நீதிமானாய், நீதியான பெண்ணாய் இருக்கும்போது, தேவன் உங்களுக்கு சமாதானத்தைக் குறித்த அறிவை தருவார்; உங்களால் பல காரியங்களை முடிக்க முடியும். வேதம், "நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்," (ஏசாயா 32:17) என்று கூறுகிறது.
தேவன் உங்களுக்கு நீதியை அளிப்பதால், ஆண்டவருக்கு நீங்கள் செவிகொடுப்பதால் திடநம்பிக்கையாயிருப்பீர்கள். தேவன் நீதிமானுடன் சஞ்சரிக்கிறார். நோவா, நீதிமானாயிருந்தான். வேதம், தேவன் அவனுடன் சஞ்சரித்தார் என்று கூறுகிறது. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவன் வாழ்வில் நீதியாக எண்ணப்பட்டது. ஆகவே, தேவன் அவனோடு சஞ்சரித்தார். அவனை பல தேசங்களுக்கு தகப்பனாக்கினார். இன்றும் முழு மத்திய கிழக்குப் பகுதியும் ஆபிரகாமை தங்கள் பிதாவாக வைத்திருக்கின்றன. ஆபிரகாம், அரபியருக்கும், இஸ்லாமியருக்கும், யூதர்களுக்கும், இயேசுவை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு விசுவாசத்தின் தந்தையாக இருக்கிறான். அன்பானவர்களே, தேவன் அவர்தரும் திடநம்பிக்கையால் அநேகரை நீதியினிடத்திற்கு நீங்கள் நடத்தும்படி செய்வார். மோசே, "கர்த்தாவே, இத்தனை மக்களை என்னால் சுமக்க முடியாது. எங்கே போகவேண்டும், என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் நீரே எனக்குச் சொல்லவேண்டும்," என்று முறையிட்டான். தேவன், "மோசே, என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்," என்று கூறினார். ஆம், தேவன் தன்னோடிருந்ததால் மோசே திடநம்பிக்கையோடு லட்சக்கணக்கான மக்களை நடத்தினான்.
அவ்வண்ணமே நீங்கள் உங்கள் குடும்பத்தை, உங்கள் வேலையை, உங்களை துறையை, உங்கள் தேசத்தை நடத்த முடியும். பல லட்ச மக்கள், தேவனிடமிருந்து வரும் திருப்தியையும் திடநம்பிக்கையையும் உங்களில் கண்டு ஜெபிக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்வார்கள். சிலவேளைகளில், ஒரு நபரே, ஒரே நேரத்தில் மூன்று, நான்கு பிரச்னைகளை எதிர்கொள்ளலாம். "எனக்குத் தலையே வெடித்துவிடும்போல," என்று அவர்கள் கூறலாம். நீங்கள் லட்சக்கணக்கான மக்களைச் சுமப்பதால், லட்சக்கணக்கான பிரச்னைகள் இருக்கலாம். ஆனாலும், தேவன் தம் சத்தத்தைக் கேட்பதற்கான திடநம்பிக்கையை தந்திடுவார்; நீங்கள் அதன்படியே செய்திடுவீர்கள். எல்லாம் திருப்தியாய் இருக்கும்; எல்லாமும் சமாதானமாகும்; உற்பத்தி உண்டாகும்; உங்களுக்கு நிறைய பலனும் கிடைக்கும். இறுதியாக, தேவன் உங்களுக்கு நீதிக்கான நித்திய ஜீவனை அளிப்பார் (யோவான் 4:36). நாம் ஜெபிப்போமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீதியின் ஒழுக்கத்தை எனக்குக் கற்றுக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் சமாதானம், திருப்தி, திடநம்பிக்கை ஆகியவற்றால் என்னை நிரப்பிடும். உம் சத்தத்தை தெளிவாக கேட்கவும், அனுதினமும் உம்மோடு நெருங்கி ஜீவிக்கவும் எனக்கு உதவும். பிறருக்கு தேறுதலையும் நீதியையும் கொண்டு வரும் சமாதானம்பண்ணுகிறவனா(ளா)க என்னை மாற்றுவீராக. உம் பெலத்தால் எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்றும் கிருபையை அருளிச்செய்யும். உம் சமுகம் எனக்கு முன்னே சென்று, எல்லா சூழ்நிலையிலும் இளைப்பாறுதலை தருவதாக. உம்மை மகிமைப்படுத்துகிற, அநேகரை ஆசீர்வதிக்கிற கனிகளை என் வாழ்வு தருவதாக என்று இயேசுவின் விலையேறப் பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


