பிரியமானவர்களே, இன்று, "அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்" (எஸ்றா 7:6) என்ற வசனத்தை தியானிப்போம். தேவனின் கிருபையும், தயவுமான கரம் எஸ்றாவின்மேல் இருந்தபடியினால் அவன் கேட்டவற்றையெல்லாம் ராஜா கொடுத்தான். எஸ்றா, தேசமெங்கும் வேதத்தை கற்றுக்கொடுத்த, விளக்கிக் கூறும் வேதபாரகனாயிருந்தான். அவன் தேவனுடைய வார்த்தையை அறிவித்தபடியினால், கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்தது.
தேவனுடைய கரம் நம்மோடு இருப்பது என்பதற்கு என்ன அர்த்தம்? தேவன்தாமே நம் நடுவில் இருப்பதாக அர்த்தமாகும். ஆம், இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்தபோது தேவன் அவர்களோடு இருந்தார். எகிப்தியர் இஸ்ரவேலரை கொடுமைப்படுத்தியபோதும் தேவன் அவர்களோடிருந்தார். கர்த்தர், எகிப்தியரை ஒன்பது வாதைகளால் வாதித்தபோது, எகிப்தின் மந்திரவாதிகளும் அற்புதங்களைச் செய்ய முயற்சித்தனர். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குமேல் அவர்களால் அப்படிச் செய்ய இயலவில்லை. அப்போது அவர்கள், "இது தேவனுடைய விரல்" (யாத்திராகமம் 8:19) என்று கூறினார்கள்.
சத்துருக்களும், தேவன் இஸ்ரவேலருடன் இருப்பதாகக் கூறினர். வேதம், கர்த்தருடைய வல்லமையுள்ள கரம் அவர்கள்மேல் இருந்தது என்று கூறுகிறது (உபாகமம் 5:15). அப்படியே பிரியமானவர்களே, கர்த்தருடைய சமுகம் உங்களோடும் இருக்கும். சீப்புருதீவு, சிரேனே ஆகிய ஊர்களிலிருந்து விசுவாசிகள் அந்தியோகியாவுக்குச் சென்று பிரசங்கிக்கத் தொடங்கியபோது, கர்த்தருடைய கரம் அவர்களோடு இருந்தது (அப்போஸ்தலர் 11:20,21). ஆம், அவர்கள் பிரசங்கித்தபோது ஆண்டவர் அவர்களைப் பெலப்படுத்தினார்.
பழங்காலத்தில், தேவனுடைய வார்த்தையை பிரசங்கிப்பது எளிதானது அல்ல. ஆனால், அவர்கள் எப்பொழுதெல்லாம் வார்த்தையை பிரசங்கித்தார்களோ, அப்பொழுதெல்லாம் ஆண்டவர் பரிசுத்த ஆவியினால் அவர்களைப் பெலப்படுத்தினார். அது தேவனுடைய கரமாயிருந்தது. வேதம், "பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து" (அப்போஸ்தலர் 1:8) என்று கூறுகிறது. பரிசுத்த ஆவியின் வல்லமையோடு அவர்களால் உலகமெங்கும் வார்த்தையை பிரசங்கிக்க முடிந்தது. பரிசுத்த ஆவியின் வல்லமையால் தேவ மனிதர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பயணித்து, சுவிசேஷத்தை பிரசங்கித்தனர்.
ஆம், அன்பானவர்களே, எங்கள் குடும்பத்திலும் நாங்கள் எப்பொழுதெல்லாம் ஒன்றாய் கூடுகிறோமா அப்போது ஆண்டவர் ஒரு தீர்க்கதரிசன வார்த்தையைக் கொடுப்பார். அவரது தீர்க்கதரிசன வார்த்தையைக் கேட்ட பிறகு, அதிக திடநம்பிக்கையைப் பெற்றுக்கொள்வோம். தேவன் எங்களோடு இருப்பதை அறிந்துகொள்வோம். ஆம், அன்பானவர்களே, தேவ கரம் உங்களோடும் இருக்கும். வசனம், தேவனுடைய தயவுள்ள கரம் அவன்மேல் இருந்தது என்று கூறுகிறது. இன்றும் தேவ கரம் உங்களைப் பெலப்படுத்துவதாக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்மை எப்போதும் எங்களோடு கொண்டிருப்பது எவ்வளவு சிலாக்கியமாயிருக்கிறது. எங்களோடு இருக்கும்படியாக இம்மானுவேலாக இறங்கி வந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் பிள்ளைகளை பெலப்படுத்தி, நீர் அவர்களோடு இருப்பதாக திடநம்பிக்கையை அளித்தருளும். தேவ ஊழியர்களுக்காக விசேஷமாக நான் ஜெபிக்கிறேன். உம் சமுகம் அளவின்றி அவர்களை நிரப்புவதாக. அவர்கள் உம் வார்த்தையை அறிவிக்கும்போதெல்லாம் அவர்களோடு சென்று அற்புதங்களை நடப்பித்தருளும். உலகத்தின் முடிவுபரியந்தம் அவர்களோடு இருப்பதாக வாக்குக்கொடுத்து சீஷர்களை அனுப்பியதுபோல, உம் பிள்ளைகளோடு சென்று, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்திடும். அவர்கள், ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக விளங்கும்படி செய்யும். எஸ்றாவின்மேலும் சீஷர்மேலும் உம் வல்லமை வந்ததுபோல இவர்கள்மேலும் வருவதாக. அற்புதங்களை நடப்பிக்கும்படி அவர்கள் கரங்களை பெலப்படுத்தி, உம் மகிமைக்கென்று பயன்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


