எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, வேதத்திலுள்ள, "ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" (யோபு 5:9) என்ற அருமையான வசனத்தைத் தியானிக்கப்போகிறோம். தேவ பிள்ளையே, நாம் மகத்தான கர்த்தரை சேவிக்கிறோம். வேதம், "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்" (யோபு 42:2) என்றும் கூறுகிறது. ஆம், நம் தேவன் அதிசயமானவர் (ஏசாயா 9:6). வேதத்தில், "ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்," (சங்கீதம் 136:4) என்று வாசிக்கிறோம்.
வேதத்தில் இன்னும் சில இடங்களில், "இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?" என்று வாசிக்கிறோம் (எரேமியா 32:17,27). தேவ பிள்ளையே, நம் தேவன் மகத்தானவர். பிள்ளைகள் இந்நாட்களில் தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பல பிள்ளைகள், "ஐயோ, நான் அதிகமாய் படித்திருக்கிறேன். எல்லாவற்றையும் நினைவு வைத்திருக்கிறேன். ஆனால், அதேவேளையில் எல்லாமும் மறந்தும் போகிறது," என்று கூறுகிறார்கள். பல பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் மனப்பாடம் செய்வதும், ஞாபகத்தில் வைத்துக்கொள்வதும் இயலாததாயிருக்கிறது. இந்த முக்கியமான நேரத்தில் இந்த அதிசயமான தேவனை நீங்கள் அனுபவிக்கலாம். அவரது சமுகத்தில் அமர்ந்திருங்கள். அவரைப் பார்த்து, "ஆண்டவரே, நீரே என் சகாயர்," என்று சொல்லுங்கள்.
தாவீது, "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன்," என்று கூறினான். இந்த தேவனை நீங்களும் பற்றிக்கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களுக்கு ஞாபக சக்தியை தருவார். நீங்கள் எவற்றையெல்லாம் எழுதவேண்டுமோ அவற்றையெல்லாம் கற்றுத் தருவார். உங்களால் அதிகமான மதிப்பெண்களை பெற இயலும். உங்களால் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க இயலாதிருக்கலாம். ஆனால், ஆண்டவர், நீங்கள் தேர்வெழுதும்போது ஏற்ற நேரத்தில் ஏற்ற வார்த்தையைக் கற்றுக்கொடுப்பார். அவர் ஆச்சரியமான தேவன். அவரை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். அவருக்கு பிரியமானபடி வாழுங்கள். வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் நேர்த்தியாக அவர் அருளிச்செய்வார். உங்களைத் தாழ்த்தி அவரை நோக்கிப் பார்ப்பீர்களா? "ஆண்டவரே, நீர் மாத்திரமே எனக்குச் சகாயர்," என்று வேண்டுங்கள். நிச்சயமாகவே பரலோகத்திலிருந்து ஒத்தாசை வரும்.
ஜெபம்:
அன்பு தகப்பனே, நீர் அதிசயங்களைச் செய்கிற தேவனானபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எண்ணிமுடியாத அற்புதங்களையும் பெரிய காரியங்களையும் நீர் செய்கிறீர். ஆண்டவரே, உம்மால் கூடாத காரியம் எதுவுமில்லை என்று அறிந்து இன்று உம்மை நோக்கிப் பார்க்கிறேன். எனக்கு சகாயராயிருந்து, வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என்னை வழிநடத்தும். எனக்கு ஞானத்தையும், புத்தியையும், என் வேலையை சரியாக செய்ய ஞாபக சக்தியையும் தந்தருளும். ஏற்றவேளையில் ஏற்ற காரியங்களை எனக்குக் கற்பித்தருளும். உம்மை பற்றிக்கொள்ளவும், உமக்குப் பிரியமானவிதத்தில் வாழவும் எனக்கு உதவும். உம் சமாதானத்தாலும், திடநம்பிக்கையாலும், பெலனாலும் என்னை நிறைத்தருளும். என் ஜெபத்தைக் கேட்டு என் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


